நீர் மேலாண்மைக்கு உதவும் நிலவியல் துறை!

பூமிக்கு அடியில் எண்ணற்ற பொக்கிஷங்களைப் பொதிந்து வைத்திருக்கிறது இயற்கை.

நீர், நிலக்கரி, தங்கம், எண்ணெய் என பல்வேறு வளங்களும் மனிதனின் அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றைக் கண்டறிந்து கொடுக்கும் பணியைச் செய்வதே நிலவியல் துறையாகும். ஆங்கிலத்தில் Geology என்று அழைக்கப்படும் இது, பலர் அறியாத அரிய துறை.

மக்களுக்கு பல வழிகளில் உதவும் துறை. வேலைவாய்ப்பு மிகுந்த துறையும் கூட.

“சரித்திர தேர்ச்சி கொள்” என்றான் பாரதி. மனிதர்களின் வரலாறை வெறுமனே படிக்காமல் அதில் தேர்ச்சியும் பெற வேண்டும் என்பதே இதன் கருத்து.

மனிதகுலம் தோன்றுவதற்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக உதித்த பூமியின் வரலாறை கூறும் படிப்பே நிலவியல்.

இத்துறையானது பூமி, அதன் கீழே உள்ள கனிம வளங்கள், மேற்புறம் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

புவியில் ஏற்படும் மாற்றங்கள், சீரழிவுகளை முன்கூட்டியே கணித்து சொல்லக்கூடிய திறமை இத்துறைக்கு உண்டு.

பெரும் ஆபத்துகளில் இருந்து பூமியை காப்பாற்றும் பொறுப்பு மிக்க துறையும் இதுவே ஆகும்.

மேற்கூறிய வளங்களில் முக்கிய ஒன்றான நீர் வளத்தை கண்டறிவதற்கும் பெருக்குவதற்கும் மக்கள் பயன்பாட்டிற்கு அதனை உகந்ததாக மாற்றுவதற்கான பணிகளிலும் இத்துறை பெரும் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.

பூமிக்கு உயிர் கொடுக்கும் முக்கிய ஆதாரம் நீர்.

இதில் மழை நீர், ஆறுகள், ஏரிகள் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவை அடங்கும்.

வீடுகளின் கட்டுமானப் பணி காரணமாக ஆறுகள் மற்றும் ஏரிகள் காணாமலே போக, நிலத்தடி நீரை மட்டுமே நம்பி வாழ வேண்டிய சூழல் உண்டானது.

பருவமழை பொய்த்துப் போகும் நேரத்தில் இந்த நீர்மட்டம் குறையும்போது கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இந்நிலையினைத் தடுப்பதற்கும் வருமுன் காப்பதற்கும் நிலவியலாளர்கள் உதவுகின்றனர்.

நிலத்தடி நீர் வாரியத் துறையானது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஊர்களிலும் நிலத்தடி நீரின் அளவையும் தரத்தையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

மேலும் நிலத்தடி நீரை கண்காணிப்பது, எந்த பகுதியில் எவ்வளவு தண்ணீர் உள்ளது, மக்களின் தேவைகளுக்கு ஏற்ற அளவில் நீர் கிடைக்கிறதா என்பதை எல்லாம் கண்டுபிடித்து சொல்லும் பணியினையும் மேற்கொள்கிறது.

குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு தூரத்திற்கு போர்வெல் போடலாம் என்பதை முடிவு செய்வது மட்டுமல்லாமல் செயற்கைக்கோளின் உதவியோடு நீர் தாங்கிகளை கண்டுபிடித்து அதற்கு ஏற்ப அமைத்து தரும் பணியினையும் செய்கிறது.

இன்று பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக நான்கு பேர் இருந்து வந்த தனி வீடுகள் மறைந்து அந்த இடத்தில் 40 குடும்பங்கள் வசிக்கும் பிளாட்டுகள் உருவாகும்போது அங்கே தண்ணீர் பற்றாக்குறை கட்டாயம் ஏற்படும்.

இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு மழை நீரை சேமிப்பது மட்டுமே. மழை நீர் கட்டமைப்பு வசதிகளுக்கான திட்ட வரைவை செய்து கொடுக்கிறது நிலவியல் துறை.

போதுமான அளவு மழை இல்லாவிடில் மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது.

சரியான திட்டமிடல் இல்லாததே இதற்கு காரணம் என்பது போன்ற விழிப்புணர்வும் இத்துறை மூலம் மக்களிடையே கொண்டு செல்லப்படுகிறது.

மழை நீர் கட்டமைப்பை அமைத்தவர்களும் அதனை சரிவர பராமரிக்காததால் மழை நீர் கடலில் கலந்து வீணாகும் நிலை உள்ளது போன்ற கருத்துக்களையும் நிலவியலாளர்கள் முன்வைக்கின்றனர்.

சில இடங்களில் மழை நீர் பூமிக்குள் போகாது. களிமண், வண்டல் மண் இருக்கும் இடங்களில் மழை நீரை சேகரிக்க முடியாது.

அந்த இடங்களில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு சாதாரண மணல் கொண்டு நிரப்பப்படுகிறது.

மற்ற இடங்களில் இருந்து வரும் மழை நீர் இங்கு சேருமாறு வடிகால் அமைக்கப்படுகிறது.

இதனால் பூமிக்குள் தண்ணீர் சென்று விடும். இது போன்ற வசதிகளையும் நிலவியல் துறை செய்து தருகிறது.

நீரின்றி அமையாது இவ்வுலகு என்பதை உணர்ந்து தண்ணீரை பொறுப்புடன் பயன்படுத்த பெரிதும் உதவி புரிகிறது நிலவியல் துறை.

S. வாணி

Comments (0)
Add Comment