என் நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர், தான் தயாரித்த ஆவணப்படம் ஒன்று மதுரையில் ஒரு கல்லூரியில் வெளியிட உள்ளோம், அதற்கு நீங்கள் வந்து கலந்து கொண்டால் மகிழ்வேன் என்றார். அழைத்தவர் என் அன்புக்குப் பாத்திரமானவர்.
பல நேரங்களில் ஒரு சிலருக்கு ஒரு சில உதவிகள் வேண்டும் என்று நான் கேட்டவுடன் கனிந்த இதயத்துடன் செய்து தந்தவர். தொடர்ந்து என்னுடன் உரையாடலில் இருப்பவர். நல்ல வாசிப்பாளர்.
சுவைபட எழுதக் கூடியவரும் கூட. அதை எல்லாவற்றையும்விட காந்தி, கதர், காந்தி கிராமம் என்பதில் பற்றுகொண்டவர். ஆகையால் வருகிறேன் என்று கூறி அந்த நிகழ்வுக்குச் சென்றேன்.
அடுத்து அங்கு செல்ல வேண்டும் என்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு.
நூறாண்டு கடந்து வாழும் ஒரு காந்தியவாதியைப் பற்றியது அந்த ஆவணப்படம் அதை எப்படி எடுத்திருக்கின்றார்கள் என்று பார்க்க வேண்டும் என்ற நோக்கிலும் அங்கு சென்றேன்.
அந்த நிகழ்வு சரியாக 10.30க்கு ஆரம்பித்தது. முதலில் அந்த ஆவணப்படத்தை திரையிட்டார்கள்.
அதனைக் கண்டோம். என் நண்பர் தயாரிப்பாளர் பெரும் பணக்காரர், இயல்பான மனிதராக இருப்பார். அவர் ஈட்டிய பணத்தை பொருள்பட செலவழிப்பதில் வல்லவர்.
அவர் இன்னும் இரண்டு ஆவணப்படங்களைத் தயாரித்தவர். 100 ஆண்டுகளைக் கடந்து வாழும் காந்தியப் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களைப் பற்றியது.
அந்த ஆவணப்படத் தயாரிப்பில் எனக்கும் ஒரு பங்குண்டு.
எது இளைஞர்களுக்கு மத்தியில் உரையாட வேண்டிய கருத்து என்பதை முடிவு செய்யும் நிலையில் நானும் இருந்தேன்.
அந்த ஆவணப்படம் எடுக்க என் நண்பர் முனையும்போது, பல ஆவணப்படங்கள் அந்த அம்மாவைப் பற்றி வந்திருக்கையில் ஏன் இன்னொரு ஆவணப்படம் என்றேன்.
அப்பொழுது அவர் கூறிய பதில் என்னை ஆச்சரியப்பட வைத்தது.
ஒரு காந்தியவாதி, போராளி, சுதந்திரப் போராட்ட காலத்தில் வாழ்ந்து இன்றுவரை களத்தில் நின்று சக மனிதருக்கு முகவரி கொடுக்க செயல்படும் 100 வயது மனிதரை நமது இளைய தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டும்.
அதற்காக நாம் வித்தியாசமாக போராடி வென்ற கதையை இன்றைய இளைஞர்களுக்கு நாம் எடுத்துக்கொண்டு செல்லவில்லை என்றால் யார் செய்வது என்று கூறித்தான் அந்த ஆவணப்படத்தை எடுத்து உச்சநீதிமன்ற நீதிபதியை வைத்து வெளியிட வைத்தார்.
அந்தப் படத்தை இயக்கிய ரவிசுப்ரமணியம், படத்தை எடுத்தது மட்டுமல்ல அந்தப் படத்தை தமிழகத்திலிருந்து புது டெல்லிவரை எடுத்துச் சென்று திரையிட்டு, கருத்தரங்கங்கள் நடத்தி வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.
எனவே, இந்தப் படமும் அதை நோக்கி எடுக்கப்பட்ட படம் என்பதால் அதைப் பார்க்கச் சென்றேன்.
35 நிமிடங்கள் ஓடியது படம். மாணவர்கள் அந்த அரங்கத்தில் அமைதியாக அமர்ந்து படத்தைப் பார்த்தது, அடுத்து ஆவணப்படத்தைப் பார்த்து கருத்துரையாற்றிய பேச்சாளர்கள், பேராசிரியர் சாலமன் பாப்பையா பேச்சுவரை அமைதியாகக் கேட்டதே பெரும் செயலாக எனக்குத் தோன்றியது.
அரங்கம் நிறைந்த மாணவர் கூட்டம் இருந்தது நிகழ்வுக்கு சிறப்பைக் கூட்டியது.
பேச்சாளர்கள் அனைவரும் அவருடைய எளிமை, நேர்மை, செயல்திறன், தியாகம் அனைத்தையும் பற்றிப் பேசினார்கள்.
அதில் ஒரு மையச் செய்தி. இளைஞராக இருந்தபோது, தன் நாட்டிற்காக தியாகம் செய்யும் உணர்வுடன் செயல்பட்டது.
அவருடைய சிறைவாசம், அவர் பணியின் சிறப்புக்கள் அனைத்தையும் பற்றி தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள் மாணவர்கள் மனதில் பாயும் வண்ணம் பேசி, சிறப்புச் செய்தார்.
லட்சுமிகாந்தன் அய்யா அவர்களின் மகன் தன் உரையில் தனக்காக ஒரு சிபாரிசு தன் தாய் கேட்டபோதும் நிராகரித்து நான் நாட்டுக்குப் பணி செய்பவன், சட்டம் என்ன சொல்கிறதோ அதைச் செய்வேன் என்று மறுத்தது அவரின் தியாக காலத்தை நினைவுபடுத்தியது.
அதை, மொரார்ஜி தேசாய் தன் மகளுக்கு சிறு உதவிகூட செய்ய மறுத்து அறவாழ்க்கை வாழ்ந்ததை ஒப்பிட்டுப் பேசினார் சாலமன் பாப்பையா.
தேசத்திற்காக அன்று தியாகம் செய்ய போராடிய மாணவர்களை அத்தனை பேரையும் கைது செய்து மன்னிப்புக்கோரி கடிதம் கொடுத்து வீட்டுக்குச் செல்லுங்கள் என்று காவல்துறை கூறியவுடன்
அனைத்து மாணவர்களும் மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டனர்.
ஒரே ஒருவர் மட்டும் மறுத்து சிறை சென்றார். அவர்தான் இன்று கொண்டாடப்படுகிறார்.
இளைஞராக இருக்கும் ஒவ்வொருவரும் இந்த ஆவணப்படத்திலிருந்து ‘நாட்டுக்காக நான்’ என்ற சிந்தனையை ஒரு சிலராவது எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் தமிழறிஞர் சாலமன் பாப்பையா.
விழாவில் முத்தாய்ப்பாக விழா நாயகர் பேசியது அந்த நிகழ்வுக்கு சிறப்புச் சேர்த்தது.
“இந்த ஆவணப்படம் என் சாதனையைக் கூறும் ஆணவப்படம் அல்ல. எனக்கு பெருமை சேர்ப்பதால் எந்தப் பயனும் இல்லை.
இதில் உள்ள செய்தி ஒரு சில மாணவர்களிடம் எதாவது தாக்கம் ஏற்படுத்தினால் அதுவே எனக்கு நிறைவு தரும்.
நான் பள்ளிகளுக்குச் செல்கிறேன், கல்லூரிகளுக்குச் செல்கிறேன், மாணவர்களிடம் பேசுகிறேன், அது என் புகைப்படத்துடன் மறுநாள் செய்தித்தாள்களில் விரிவான செய்தி வரும்.
அதற்குமேல் என்ன மாற்றம் என சோதித்தால் வருத்தம்தான் மிஞ்சும்” என்றார்.
அந்த ஒட்டுமொத்த நிகழ்வில் ஆவணப்படத்தில் ஒரு செய்தி இருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது.
ஒரு இளைஞர் என்றால் சாகசக்காரராக இருப்பார், சாதனை படைப்பார், தியாகத்திற்கானவர், செயலில் கரைந்திருப்பார், அநியாயத்தைக் கண்டு பொறுத்திருக்க மாட்டார், ரௌத்திரம் கொள்வார் என்பது பொதுவிதி.
எப்படி நம் நாட்டில் இளைஞராக இருந்தபோதே விவேகானந்தர், அரவிந்தர், காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், பாரதி, நேரு, பட்டேல், காமராஜ் போன்றவர்கள் தங்கள் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்து சாகசம் செய்து நாட்டை விடுதலை பெறச் செய்தனரோ அப்படித்தான் லட்சுமிகாந்தன் அய்யா அவர்களும் அந்த விடுதலை வேள்வியில் இணைந்திருந்தார்.
அன்று நாட்டை விடுதலை அடையச் செய்ய ஒட்டுமொத்த மக்களில் ஒரு சதவிகித மக்கள் குறிப்பாக இளைஞர்கள் சாகசம் செய்து உயிரைப் பணயம் வைத்து செயல்பட்டனர்.
இன்று இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது.
அப்படிப்பட்ட கேள்வி லட்சுமி காந்தன் அய்யாவிடம் மாணவர்கள் கேட்டனர் என்பதை அவரின் உரையில் பதிவு செய்தார்.
சுயநலம் நாடும் மனிதராக இல்லாமல் சமூக மாற்றம் என்பதற்காக செயல்படும் மனிதராக மாறுங்கள் செயல்படுங்கள் என்று கூறினேன் என்பதையும் பதிவு செய்தார்.
இந்தப் படம் இன்றைய சூழலில் செயல்படும் இளைஞர்களுக்கு ஒரு செய்தியை கொண்டு வந்திருக்கிறது.
பலர் இன்று இந்த சமூகத்தின் மீது தங்களின் வருத்தத்தை பதிவு செய்கின்றனர். நாம் ஒவ்வொருவரும் இந்த சமூகத்தில் ஒரு அங்கமாக இருக்கிறோம்.
அதில் நாம் மாறுகிறோமா என்ற கேள்வியைக் கேட்டால் ஆம் என்று கூற இயலாது. ஆனால் சமூகம் மாற வேண்டும் என்று கூக்குரல் இடுபவர்கள்தான் அதிகம்.
இந்த ஆவணப்படத்தில் ஒரு முக்கியச் செய்தி அனைவருக்கும் உள்ளது. ஒருவர் மனிதனாக வாழ்ந்து உயர்மனிதராக தன்னை மாற்றிக்கொள்ள முடியும் என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு காந்தியே காரணம் என்பதுதான்.
மனிதராக வாழ்வது என்றால் ஒரு லட்சியத்திற்காக வாழ்வது, சமூகத்திற்காக வாழ்வது, சுயநலத்தை புறந்தள்ளுவது, மற்றவர்களை மதித்து நடத்துவது, எளிமையாக இருப்பது, அறவழியில் வாழ்வது என்பதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதுதான்.
இது எளிதுதான். ஆனால், இன்று அனைவருக்கும் கடினமானதாக இருக்கிறது.
காரணம், சந்தை உலகம் நம் புலன்களை கட்டுக்குளிலிருந்து விடுதலை செய்து எல்லை இல்லா சுதந்திரத்துடன் கட்டுப்பாடற்று சுய நலத்தில் ஊறித் திளைத்து செயல்பட வைத்துள்ளது.
சமூகம் அறவாழ்விலிருந்து நகர்ந்து நேர்மையற்று புலன்களுக்குத் தீனி போட்டு சுகபோக வாழ்க்கை வாழ துடிக்கின்றது.
இந்தச் சிக்கலில் வயதுகளைக் கடந்து அனைவரும் சிக்குண்டு கிடக்கின்றோம்.
அதிலிருந்து வெளியேற வாழ்ந்து வெளிச்சம் காட்டும் மனிதராக நம் முன் தோன்றுகிறார் லட்சுமிகாந்தன் பாரதி.
இன்றும் அப்படிப்பட்ட இளைஞர்கள் இருக்கின்றார்கள். எண்ணிக்கையில் குறைவு. ஆகவே அந்த எண்ணிக்கையைக் கூட்ட இவரின் வாழ்வு வழிகாட்டும்.
பாரதி வாழ்ந்த காலத்தில் வெள்ளைக்காரன் இந்தியாவைக் கொள்ளையடித்ததை பாரதி பாடி இளைஞர்களை ரௌத்திரம் கொள்ள வைத்தான்.
அதே பாடலை சாலமன் பாப்பையா அந்த நிகழ்வில் பாடும்போது இன்று நம் அரசியல்வாதிகள் அடித்த கொள்ளையை ஞாபகப்படுத்தி, செயல்பட இளைஞர்களைத் தூண்டியதுபோல் இருந்தது.
ஒட்டுமொத்தத்தில் ஒரு மனித வாழ்வு எப்படி மாண்புற வாழ்வது என்பதற்கு ஒரு உதாரணம் லட்சுமி காந்தன் அவர்கள். அதை ஆவணப்படமாக்க முயன்ற நண்பர் திரு.சந்திரன் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும்.