மொழிப் போராட்டத்திற்காக சிறை சென்ற கவிஞர்!

“பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே…
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே…”

வழக்கமாக திரைப்படங்களில் இடம்பெறும் சராசரி வரிகளை விட உயரம் கூடிய இந்த வரிகளை எழுதியவர் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான நா.காமராசர்.

1984-களில் ரஜனி நடிப்பில் வெளிவந்த ’நல்லவனுக்கு நல்லவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே” என்று துவங்கும் இந்த திரையிசைப் பாடல் இடம்பெற்ற சில வரிகள் தான் மேலே இடம்பெற்றிருக்கின்றன.

தமிழ் சினிமாவில் அபூர்வமாக பாடல்களை எழுதியிருக்கிற நா.காமராசன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த படத்தில் “இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்“ என்று ஜேசுதாஸ் நெகிழ்வாக பாடியிருக்கிற அந்தப் பாடலை எழுதியவரும் நா.காமராசன் தான்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ படம் உட்பட சில படங்களில் மட்டுமே திரையிசைப் பாடல்களை எழுதியிருக்கிற நா.காமராசன் புதுக்கவிதை வடிவத்தில் சில கவனிக்கத்தக்க முயற்சிகளை மேற்கொண்டவர்.

அவரது ‘கருப்பு மலர்கள்’ என்கிற கவிதைத் தொகுப்பு 80-களில் வெளிவந்து தனிகவனமும் பெற்று சில கல்லூரிகளில் பாட நூலாகவும் இடம்பெற்றிருந்தது.

கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் என்று இயங்கி இருக்கிற காமராசன் மாணவப் பருவத்திலேயே மொழிப் போராட்டத்திற்காக சிறை சென்றவர் என்று சொன்னால், பலருக்கு வியப்பாக இருக்கும்.

உண்மைதான்…

1960-களில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது, மதுரை தியாகராஜர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் நா.காமராசன்.

அவருடன் படித்த மாணவர்கள் தான் பின்னாளில் சபாநாயகரான க.காளிமுத்துவும் எழுத்தாளரான பா.செயப்பிரகாசமும்.

பேராசிரியர் இலக்குவனார் பேராசிரியராக அதே கல்லூரியில் பணியாற்றியபோது, போராட்டக் களத்திற்கு வந்து, சட்ட நகலை எரிக்க மாணவர்கள் போனபோது, நடந்த ஒரு அனுபவத்தை வார இதழில் வெளிவந்த ஒரு பேட்டியில், இப்படிச் சொல்லியிருக்கிறார் காளிமுத்து.

“அப்போது, இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தீவிரப்பட்டிருந்தது. பல மாணவர்களும் கொந்தளிப்பான மனநிலையில் இருந்தார்கள்.

கல்லூரி மாணவர்களான நானும் காமராசனும் செயப்பிராகசமும் களத்தில் இறங்கி போராட தயாரானபோது, நண்பர் காமராசனும் என்னிடம், “நாம எதுக்கு சட்ட நகலை எரிக்கணும்? நாம ரெண்டு பேருமே தீக்குளிச்சிரலாமா?” என்று கேட்கிற அளவுக்குப் போனவர்தான் நா.காமராசன்.

மற்றவர்கள்தான் அதைத் தடுத்து சட்ட நகலை மட்டும் எறித்து நாங்கள் கைதானோம். சிறை வைக்கப்பட்டோம்.

சிறிது காலம் கழித்தே விடுதலையானோம். நான் திராவிட அரசியலுக்குள் வந்துவிட்டேன். நா.காமராசன் கவிதைப்பக்கம் போய்விட்டார்” என்று மொழிப் போராட்டத்தை நினைவு கூர்ந்திருப்பார் காளிமுத்து.

சென்னையில் நடந்த பல இலக்கியக் கூட்டங்களில், பின் வரிசையில் அமர்ந்து அமைதியாக கூட்டத்தை கவனித்துவிட்டு சாதாரண பார்வையாளரைப் போல வந்து சென்றுவிடும் இயல்பு கொண்ட நா.காமராசன் கவிதைகளும் திரையிசைப் பாடல்களும் அதைவிட அவரது மொழிப்போராட்ட குணமும் எவ்வளவு பேருக்குத் தெரியும்?

– யூகி

Comments (0)
Add Comment