பெண்களுக்கான ஒட்டுமொத்த விதிகளும் ஒழிய வேண்டும்!

சிவகாமி ஐ.ஏ.எஸ்

நாட்கள் செல்லச் செல்ல, குழந்தைப் பருவம் அழகான சித்திரம் போலாகி விடுகிறது. நான் திரும்பிப் போக விரும்பும் எதிர்காலமாகவும் காட்சியளிக்கிறது.

எங்கள் வீடு பெரியது. பின்னால் மாடுகள் நிற்கும் தொழுவம். தோப்பு என்று சொல்லுமளவுக்குத் தென்னை மரங்கள். வாய்க்கால்.

பின்னால் விரியும் சாரமற்ற புன்செய் நிலங்கள். என் தந்தை அதை நன்செய் நிலமாக மாற்ற வாழ்நாளில் பாதியைச் செலவிட்டிருந்தார்.

வீட்டில் பதிமூன்று உருப்படிகளில் நானும் ஒருத்தி. கவனிக்கப்படாத புல்லின் பூ போன்று வளர்ந்ததாக ஞாபகம்.

எந்த வகுப்பில் படிக்கிறோம் என்று அவ்வப்போது தந்தை கேட்டுத் தெரிந்து கொள்வார். அம்மாவுக்கு அதுகூடத் தெரிய நியாயமில்லை.

பள்ளிப் பருவத்தில் படிப்பதுகூட விளையாட்டுப் போலிருந்தது. அறுந்த வால், சுட்டி, வாயாடி என்று பலரால் பட்டம் சூட்டப்பட்டிருந்தேன்.

‘அப்பால் போ, சைத்தானே’ என சீனாக்காரனைச் சாடிய பேச்சுப் போட்டியும் ‘குரங்கே, உன் பிள்ளைக்கு எண்ணெய் தேய்த்து விடுகிறேன். எனக்கு ஒரு புளியங்காய் பறித்துப் போடு’ எனக் குரங்கோடு மல்லாடியதும், பள்ளிக்குப் போகும் போதும் வரும்போதும் சத்தம் போட்டுப் பேசிக்கொண்ட கிறுக்குத்தனமும் எனக்கு ஞாபகத்திற்கு வர… சிரிப்பு வருகிறது.

பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆரம்பக் கல்வி, மழையில் ஒழுகும்; மூக்கிலும் ஒழுகும்.

பிறகு, பெரம்பலூர் புனித தோமினிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை, படிப்பிலும் விளையாட்டிலும் எப்போதும் முதல்.

பள்ளிக்குக் கிளம்புமுன் வயலில் வேலை. நாற்று நடவு, களை பறித்தல், கதிரறுப்பு, களத்து வேலை எல்லாம் செய்வோம். பிறகு பள்ளிக்கூடம். திரும்பி வந்து கம்பு, சோளம் இடிப்போம்.

தண்ணீர் சுமப்பது, வீட்டு வேலைகள், விடுமுறை நாட்களில் பக்கத்திலுள்ள காலனி குழந்தைகளோடு விறகு பொறுக்க என்று கூறிக்கொண்டு துரைமங்கலம், எலம்பலூர் மலைகள், கோடாகாடு எனக் காடு மேடெலாம் சுற்றுவேன்.

ஏரிக்கரைக்கு ஆடு மாடுகளை ஓட்டிச் சென்று மேய்ப்பது, கிணற்றில் விழுந்து குளிப்பது. காட்டுப்பூக்கள், பழங்கள் சேகரிக்க முட் காடுகளில் அலைவது…

குழந்தைப் பருவப் பதிவுகள்தாம் என் நாவல், சிறுகதைகளில் பெரும்பாலான வெளிப்பட்டிருக்கின்றன.

மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டியில், ‘ஆட்டுக்குட்டி கத்துகிறது’ எனும் எனது சிறுகதை தினமணி கதிரில் வெளியானது.

அதையொட்டி வந்த வாசகர் கடிதங்கள் என்னை எழுதவிடாமல் செய்தன.

எழுதுவதன் நோக்கம் சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு என்பதை நோக்கி நகர ஆரம்பித்தேன்.

ராணி மேரிக் கல்லூரியில் முதல் மாணவியாக ‘தங்கம்’ பெற்று வெளியேறினேன்.

தொடர்ந்து வேலைக்கான எந்த வாய்ப்பையும் தவறவிடாது பரீட்சைகள் எழுதினேன்.

ஐ.ஏ.எஸ் கிடைத்ததும் பரீட்சைகளுக்கு முற்றுப்புள்ளி, மசூரியில் இரண்டு வருடங்கள் பயிற்சி.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலாகாபாத்தில் சப்-கலெக்டராக வேலை. பிறகு தமிழ்நாட்டுக்கு மாற்றல் பெற்று வந்தேன்.

செங்கல்பட்டில் சப்-கலெக்டர். தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் கலெக்டர் எனப் பல்வேறு பணிகளைச் செய்து, இருபது வருடங்கள் ஓடிப்போய்விட்டன.

எனக்குத் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர், துறைமுகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளார்.

“பெண்ணாகப் பிறப்பது நமது தேர்வில்லை. எங்கும் சுதந்திரமாகச் செல்லத் தடையிருப்பது குறித்து வருத்தம்தான். எனினும், ஆண்கள்கூட இரவு நேரங்களில் தனியாகச் செல்ல முடியாத பாதுகாப்பற்ற சமுதாயம்தான் இது”.

ஜப்பான் வாழ்க்கை எனக்குப் பரிசோதனைக் களமாக இருந்து, இரவு உணவருந்திய பின் தெருக்களில் தனியே நடந்து விடியற்காலையில் வீடு திரும்பிய அனுபவம் உண்டு.

ஓர் ஆணைச் சுமந்துகொண்டு திரிகின்ற (அதாவது நமது பாரம்பரிய உடையான புடவையைத்தான் சொல்கிறேன்) அனுபவமின்றி சுலபமாக உணர முடிந்தது. அங்கு எதையாவது யோசித்தும் கொண்டு தெருவில் நடக்க முடிகிறதே அது விசேஷம்தான்!

இங்கே, தெருவில இறங்கிவிட்டால், நாம் பெண் என்று எந்த வகையிலாவது உணர்த்தப்படுகிறோம்.

பெண் இன்னும் அறிவுலகில், சிந்தனையுலகில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பெண்களின் கருத்தியலின் பின்னணியில் ஆண்கள்தான் இருக்கிறார்கள்.

தனிப்பட்ட வகையில் நம்மீது மதிப்பு வைத்திருபவரும்கூட பொதுவிலே அங்கீகரிக்க முடியாத சூழல் விதிவிலக்குகளாக மட்டும் விதி உருவாவதில்லை.

ஒட்டுமொத்தமாக விதிகளை மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

உடலுழைப்பு எனக்குப் பிடித்தமான ஒன்று.

உடற்பயிற்சி, விளையாட்டு, துணித் துவைப்பது, சமைப்பது என்று நேரத்திற்கேற்றாற்போல், வசதிக்கேற்றாற்போல எதுவேண்டுமானாலும் செய்யப் பிடிக்கும்.

எனது முதல் நாவல் ‘பழையன கழிதலும்…’ கிராமத்திலே நிலவும் இறுக்கமான சாதிமுறையைக் கேள்விக்குள்ளாக்கியது.

அடுத்து, ‘ஆனந்தாயி’. எனது நான்காவது நாவல் ‘குறுக்கு வெட்டு’ குடும்ப அமைப்பு பற்றிய கேள்விகள் எழுப்பியது. இவையன்றி முப்பதுக்கும் மேலான சிறுகதைகள் எழுதியுள்ளேன்.

‘ஊடாக’ என்னும் குறும்படம் விஷுவல் மீடியாவில் எனது முதல் முயற்சி எனது நாவல் ஆனந்தாயியை எனது இயக்கத்தில் முழுநீளத் திரைப்படமாக்க விருப்பட்ட அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

– நன்றி : அவள் விகடன் (26.10.2001 தேதியிட்ட இதழில்)

Comments (0)
Add Comment