தனக்குள் எண்ணிலடங்கா வளங்களைப் பொதித்து வைத்திருக்கும் இயற்கை, மனிதனின் வாழ்நாள் முழுமைக்கும் வாரி வழங்கி வருகிறது.
உண்ணும் உணவு, தூய நீர், சூரிய ஒளி, உடுத்தும் ஆடை என அனைத்தும் இயற்கையிடம் இருந்தே பெறப்படுகின்றன.
அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்மயமாக்கல் காரணமாக இயற்கை வளங்கள் பெருமளவில் மாசுபட்டு நிற்பதைக் காண முடிகிறது.
இதன் விளைவு, ‘எல் நினோ’ என்கிற தீவிர பருவநிலை மாற்றத்திற்கு வழி வகுத்துள்ளது. தற்போது மனித குலத்தை அச்சுறுத்தும் பெயராக இது அறியப்படுகிறது.
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில், கடல் நீர் இயல்பான வெப்பநிலையை விட சுமார் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் ஒரு தட்பவெப்ப நிலை மாற்றமாகும்.
இந்த மாற்றம் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.
புவி வெப்பமயமாதலே இதற்கு முக்கிய காரணியாக கருதப்படுகிறது.
நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்ற புதைபடிவப் பொருட்கள் எரிக்கப்படுவதால், வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரித்து, புவி வெப்பமயமாதலை ஏற்படுத்துகின்றன.
மேலும் கடல்களில் கொட்டப்படும் ரசாயனக் கழிவுகளும் இத்தகைய நிலைக்கு பெருமளவு வழிகோலுகின்றன.
கடல் நீர் வெப்பமடைவதால் உலகளாவிய வெப்பநிலை உயர்ந்து, அதீத வெப்ப அலைகள் வீசக்கூடும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையின்படி, நடப்பு பருவமழைக் காலத்தில் எல் நினோவின் தாக்கம் தீவிரமடைவதால், இந்தியாவுக்கு குறைவான மழையே கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வட கிழக்கு பகுதிகளைத் தவிர இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மழையின்றி நீண்ட வறட்சியான சூழல் உண்டாகலாம்.
மழைப் பற்றாக்குறை ஏற்பட்டால், விவசாய உற்பத்தி கணிசமாகக் குறைந்து காய்கறி, பருப்பு மற்றும் தானியங்களின் விலை உயரக்கூடும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை காலங்களில் எல் நினோ நிகழ்வு வெப்ப அலைகளை அதிகரித்து வறண்ட வானிலையை ஏற்படுத்தும்.
இதனால் நீர் நிலைகளில் நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது.
அதோடு, எல் நினோ, காற்று மண்டலத்தை மாற்றி மழை தரும் மேகங்களை திசை திருப்பும் என்பதால், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழையானது சராசரிக்கும் குறைவாகவே பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் கரீஃப் பருவ பயிர்களான நெல், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறையும்.
நீர்மின் நிலையங்களை நம்பி இருக்கும் பகுதிகளில் அணைகளின் நீர்மட்டம் குறைவதால் மின்சார உற்பத்தி பாதிக்கும் நிலையும் ஏற்படக்கூடும்.
பிற நாடுகளிலும் இது தீவிரமான மாற்றங்களை நிகழ்த்த இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சில நாடுகளில் அதிக வறட்சி மற்றும் காட்டுத் தீ ஏற்படும் அதே வேளையில் வேறு சில நாடுகளில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு இருக்கக்கூடும் என்றும் கணித்துள்ளனர்.
இயற்கையின் சுற்றுச்சூழல் சமநிலையை பேணத்தவறியதே இத்தகைய பருவநிலை மாற்றங்களுக்கு காரணமாக அமைகிறது.
மரங்களை வளர்ப்பது, மாசுபாட்டைக் குறைப்பது, நீர் நிலைகளைப் பராமரிப்பது, தூய்மையைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றின் மூலம் இனி வரும் காலங்களிலாவது இத்தகைய சூழல் ஏற்படா வண்ணம் நம்மை காத்துக்கொள்ள முடியும்.
– S வாணி