கொஞ்சம் அமைதியாக இருந்த பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 2021-ல் அதிரடியாக நுழைந்தவர் அண்ணாமலை.
ஐபிஎஸ் அதிகாரியான இவர் கர்நாடக காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்தவர். தனது அதிரடியான பேச்சுக்களால் தமிழக மீடியாக்களில் ஒரு கதாநாயகனைப் போல் வலம்வந்த முன்னாள் காவல்துறை அதிகாரியான அண்ணாமலை பாஜக அரசியலுக்குள் வந்தது எப்படி?
சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினியை அரசியலுக்குள் இழுக்க பாஜகவுக்குள் சில தீவிர முயற்சிகள் நடந்தபோது ரஜினியால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் அண்ணாமலை.
இதை அப்போது நடந்த துக்ளக் ஆண்டுவிழாவில் அதன் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தியே தெரிவித்திருக்கிறார்.
அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்தே அடிக்கடி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக அடிபடுகிறவராகவே தொடர்ந்து இருந்திருக்கிறார்.
திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் எதிராக கடுமையாகவே பேசி வந்திருக்கிறார்.
திமுக ஆட்சிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து காரசாரமான ஃபைல்சை வெளியிட்டு பெரும் பரபரப்பைக் கிளப்பினாலும், அவர் வைத்த குற்றச்சாட்டுகளை மத்தியில் இருக்கிற பாஜக அரசு கூட ஏனோ பொருட்படுத்தவில்லை.
அதிமுக தலைவர்களுக்கு எதிராகவும் அண்ணாமலை பேசி வந்ததால் பாஜக, அதிமுக கூட்டணிக்குள் சிக்கல் உருவாகி அதிமுக வெளியேறிய பிறகு பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார்.
அதன்பிறகு தேசிய பொறுப்பிற்கு அவர் நியமிக்கப்பட்டாலும், தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரனை விட, தொடர்ந்து மீடியாவில் இடம்பெற்றவராகவே நீடித்து வந்தார் அண்ணாமலை.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அவர் கொங்கு மண்டலத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாகப் பேசப்பட்டது. பிறகு அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டு சற்றே மவுனம் காத்துவந்தார் அண்ணாமலை.
தேர்தல் நடப்பதற்கு முன்பிருந்தே அண்ணாமலை தனித்துக் கட்சியை ஆரம்பிக்கப்போகிறார் என்கிற பேச்சுக்கள் ஊடகங்களில் எழுந்தன.
அண்மையில் அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டு வந்த அண்ணாமலை, தாயகம் திரும்பிய பிறகு டெல்லி பாஜக தலைமையுடன் பேசி ஒரு முடிவுக்கு வராத நிலையில், பாஜகவிலிருந்து அதிகாரபூர்வமாக விலகி இருக்கிறார்.
இனி தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகளையும், தற்போது ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் தவெகவையும் எதிர்த்து குரல் எழுப்பி தனக்கென்று ஒரு அரசியல் அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு அரசியலில் இன்னொரு மாற்று சக்தியாக டெல்லியில் கெஜ்ரிவால் பொறுப்புக்கு வந்ததைப்போல அண்ணாமலையும் வருவார் என்கின்ற எதிர்பார்ப்புக்கு அவரது ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள் அண்ணாமலையும் அடுத்தடுத்த அதிரடியான செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதே இப்போதைக்கு கணிக்க முடியாவிட்டாலும் தொடர்ந்து தமிழக மீடியாக்களுக்கு தீனியைத் தொடர்ந்து கொடுக்கும் மையமாக அண்ணாமலை நீடிப்பார் என்பது மட்டும் நிச்சயம்.
– லியோ