தொடரும் பாலியல் குற்றங்கள்: உளவியல் உணர்த்தும் உண்மை!

தமிழ்நாட்டில் காட்சி ஊடகங்கள், சமூக வலைதளங்கள் என எல்லாவற்றிலுமே கடந்த ஒரு மாதகாலமாக அதிகமாக பேசப்பட்டுக் கொண்டிருப்பது பெண்கள் மீதும், சிறுமிகள் மீதும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிற பாலியல் வன்முறைச் சம்பவங்கள்தான்.

இத்தகைய பாலியல் சம்பவங்கள் நிகழ்ந்துவருவதை மானுட நேயத்தை விரும்புகிற யாரும் நியாயப்படுத்த முடியாது.

அதேசமயம் முக்கியமாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இத்தகைய பாலியல் வன்முறைகள் கடந்த ஒரு மாதகாலத்தில் மட்டும் நிகழ்ந்துவிடவில்லை.

இதற்கு முன்பிருந்த திமுக ஆட்சியிலும், அதற்கு முன்பிருந்த அதிமுக ஆட்சியிலும் இதேமாதிரியான கொடூரமான பாலியல் வன்முறைகள் பொள்ளாச்சியிலும் அண்ணா பல்கலைக்கழகத்திலும் நடந்திருக்கின்றன.

தமிழ்நாட்டின் மிகப் பிரசித்திப்பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவிகளை உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கான பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தியதாக ஒரு பேராசிரியை மீது வழக்குப் பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு விசாரணையும் நடந்திருக்கிறது.

அதைப்போலவே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலுள்ள பள்ளியில் படிக்கிற சிறுமிகளிடம் பல ஆசிரியர்களே அத்துமீறிய பாலியல் கொடுமைகளும் இங்குதான் நடந்திருக்கின்றன.

இதைவிட கொடுமையாக, சென்னை நகரின் முக்கியப் பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் மனச்சிதைவுக்கு உள்ளான ஒரு சிறுமியை அந்தக் குடியிருப்பில் வசிக்கும் பலரும் சேர்ந்து மிகக் கொடுமையான கூட்டுப் பாலியல் நடத்தியிருப்பதை பதைபதைக்க வைக்கும் காட்சித் தொகுப்புகளாக நமது காட்சி ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை குவித்துக் கொண்டன.

இரண்டு-மூன்று வயதான சிறுமிகளிலிருந்து 60 வயதான பெண்கள்வரை பாலியல் இச்சைகளுக்குத் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்து வருவதைப் போலவே தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது அரசியல் ரீதியாக குற்றஞ்சாட்டும் நாம் இத்தகைய கொடுமையான பாலியல் குற்றங்கள் ஏன் நடக்கின்றன என்பது குறித்த உளவியல் காரணங்களைப் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறோமா?

அல்லது பொறுப்புணர்வுடன் அது குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறோமா?

இத்தகைய பாலியல் அத்துமீறல்களுக்கு சில உளவியல் அறிஞர்களிடம் விசாரித்த வரையில் அவர்கள் தெரிவிக்கும் 3 முக்கியமான காரணங்கள்:

1….

முன்பு பள்ளிக் கூடங்களிலும் ஏன் திரைப்படங்களிலும் கூட ஒழுக்க மரபுகள் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதை வலியுறுத்தும் பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

2000-த்திற்கு பிறகு வெளிவந்த பல்வேறு வணிகப்படங்களின் உள்ளடக்கமாக அளவுகடந்த வன்முறைதான் மையப்பொருளாக அமைந்திருக்கிறது.

அளவுக்கு மிஞ்சிய வன்முறையாளர்களே தற்போது கதாநாயகர்களாகி இருக்கிறார்கள் அல்லது ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

கதாநாயகர்களே ‘ஏன் இந்த கொலைவெறி’ என்று பாடுகிறார்கள். ‘டாடி மம்மி வீட்டில் இல்லை’ என்று ‘அர்த்தம்’ பொதிந்த பாடல்களை கதாநாயகிகள் பாடுகிறார்கள்.

மிகக் கேவலமான பாலியல் சார்ந்த வசனங்களும் சென்சாரின் பார்வைகளையெல்லாம் மீறி தற்போது, திரையிலும் தொலைக்காட்சித் தொடரிலும் ஓடிடி தளத்திலும் முன்வைக்கப்படுகிறது.

அத்தகைய காட்சிகளை, பாடல்களை முன் மாதிரியாகக் கொள்ளும் சிறுவர்கள் எதார்த்த வாழ்க்கையில் தனக்கு முன்னால், நடந்துசெல்லும் சிறு வயது பெண்களை எப்படிப்பட்ட பார்வையோடு பார்ப்பார்கள்.

ஒரு போகப்பொருளைப் போல அவர்களைப் பார்க்கத்தானே நமது காட்சி ஊடகங்களையும் வணிக மயமான திரைப்படங்களையும் உருவாக்கித் தந்து கொண்டே இருக்கிறோம்.

ஆக, இளம்வயதினர் துவங்கி இன்றைய முதியவர்கள், ஆசிரியப் பெருமக்கள் வரை பலரது மூளைகளில் எத்தகைய காட்சிகள் ஒரு தொற்றுக் கிருமியைப் போல பரவி எந்தக் கட்சி ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்பதை நாம் எப்போதாவது கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறோமா?

அவர்களது மூளையில் எதைப் பரிமாறிக்கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றிய தன்னுணர்வு நமக்கு எப்போதேனும் உருவாகி இருக்கிறதா?

இதை அனுமதிப்பதில் மத்திய அரசு, மாநில அரசு என்பதில் பேதங்கள் இல்லை.

முன்பு இரவு நேர தூர்தர்ஷனில் மட்டமான ரசனையைத் தருகிற ஏ சர்டிபிகேட் படங்கள் ஒலிபரப்பப்படுவது குறித்து அப்போதையை பிரதமரான ராஜீவ் காந்தியிடம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கேட்டபோது, பிரதமரான ராஜீவ் காந்தி சொன்ன பதில், “உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்கள் வீட்டு டி.வி.யை அணைத்து விடுங்கள்”.

அன்றைக்கு காங்கிரஸ் சொன்ன அதே நினைவுப்படுத்தலைதான் இன்னொரு விதத்தில் பாஜக அரசும் அனுமதித்துக் கொண்டிருக்கிறது.

மாநில அரசும் அனுமதிப்பதனால்தான், பல கேவலமான தலைப்புக்களைக் கொண்ட திரைப்படங்கள் குறிப்பாக ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ போன்ற படங்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றன.

இம்மாதிரி விரிக்கப்படுகிற பாலியல் சார்ந்த வலையில் விழுபவர்கள் யார்?

2….

அதோடு மட்டுமல்லாமல் டாஸ்மாக் கடையின் வாடிக்கையாளராக இளவயது மாணவர்களிலிருந்து மாணவிகள் வரை பழக்கப்பட்டு வருவதை யூடியூப் காட்சிகளே சாட்சியத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன.

பிரபல வார இதழ் ஒன்றின் முதல் பக்கத்தில் பத்து வயதான தனது மகன் டாஸ்மாக் சரக்கோடு நண்பர்களுடன் இருக்கிற புகைப்படத்தைப் பார்த்து, அன்றைக்கே, சென்னையில் வங்கி ஒன்றில் கீழ் நிலைப் பணியாளராக இருந்த அந்த 10 வயது பையனின் தந்தை அவமானம் தாங்காமல் உடனே தன் உயிரைப் போக்கிக் கொண்டார்.

ஊடக அனுபவத்தில் நான் நேரடியாக சந்தித்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வு இது.

இதைவிடக் கொடுமையாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் யாராவது ஒரு மாணவியின் பிறந்தநாளை டாஸ்மாக் பானங்களை அருந்திவிட்டு ஓட்டல்களுக்குக் கூட்டிச்சென்று பார்ட்டி வைப்பது ஒரு ஃபேஷனாக மாறிக் கொண்டிருந்தது.

மாணவர்கள் இன்னும் அடுத்தபடியாக போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் டாஸ்மாக்கோடு மட்டுமல்லாமல் கஞ்சா மற்றும் கையில் கிடைக்கின்ற போதை மாத்திரைகளுடன் பார்ட்டி வைக்க பழகியிருக்கிறார்கள்.

இளம் வயதிலேயே இத்தகைய போதைப் பழக்கத்திற்கு ஆளாகும் மாணவர்களும் மாணவிகளும் மிகச் சுலபமாக அடுத்தக்கட்ட நகர்வாக பாலியல் அத்துமீறலை இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள்.

அம்மாதிரி போதையில் இருக்கும் மாணவர்கள் வயது வித்தியாசம் பாராமல், வயது குறைந்த சிறுமிகளையும் சரி, வயது முதிர்ந்த முதியப் பெண்களையும் சரி பாலியல் இச்சைக்கான பொருட்களைப் போலவே பாவிக்கிறார்கள்.

சுலபமாகக் கிடைக்கும் போதை மரபால் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த எல்லைக் கோடுகளைத் தாண்ட வைக்கிறது.

இதைத் தடுக்க – ஆட்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

3…

இதைவிட பெருங்கொடுமையாக இன்னொரு கொடுமைக்கான தூண்டுதலை நாம் இளவயது சிறுவர்களிடமும், சிறுமிகளிடமும் கொடுத்திருக்கிறோம்.

செல்போன், நவீன லேப்டாப்-ம் தான் அதற்கான கருவிகளாகிக் கொண்டிருக்கின்றன.

செல்போனில் தற்போதைய நிலையில், ரீல்ஸ்களைப் பார்க்க நேர்கிற யாரும் பாலியல் தூண்டுதலை அல்லது பாலியல் அழைப்பு விடுக்கிற காட்சிகளை எந்த தணிக்கை விதிகளுக்கும் ஆட்படாமல் வெகு சுலபமாக பார்க்க முடிகிறது.

மிகக் கொச்சையான வார்த்தைகள் அவற்றில் பரிமாறப்படுகின்றன. மிக மோசமான அசைவுகளும் காட்சிப் படங்களாக சிறுவர்களின் செல்போன்களில் முன்வைக்கப்படுகிறது.

அவர்கள் அதிலிருந்து பெரும் கிளர்ச்சியினால், தங்கள் வயதையும் தங்கள் எதிரே நிற்கும் பெண்களின் வயதையும் பொருட்படுத்தாமல் அத்துமீறில் ஈடுபட்டு கூட்டுப் பாலியலை நடத்தி சமயங்களில் சம்பந்தப்பட்ட உயிர்களைக் கொன்று இளம்வயதிலேயே பெரும் குற்றவாளிகளாக உருமாறிவிடுகிறார்கள்.

அரசை குறித்து எந்த கடுமையான விமர்சனம் வெளிவந்தாலும் நவீனத் தொழில்நுட்பம் கொண்டு அதை கறாராக தடுத்து சைபர் குற்றமாக்கி விடுகிற அதே அரசுதான், இம்மாதிரி பாலியல் வக்கிரங்களைத் தூண்டுகிற காட்சிகளை செல்போன் மற்றும் லேப் டாப்களில் வெளியாக அனுமதித்துக் கொண்டிருக்கிறது.

இத்தகைய கேவலமான தூண்டுதல் தரக்கூடிய காட்சித் தொகுப்புகளை பள்ளி சிறுவர்கள் துவங்கி, மாண்புமிகு அரசியல்வாதிகள், மாட்சிமை தங்கிய அதிகாரிகள், மெத்தப்படித்த ஐடி பெருமக்கள் என்று பலரும் நவீன தொழில்நுட்ப வசதிகளால், பாரபட்சமற்று தூண்டுதல்களைப் பெற்றுக் கொண்டிருக்கும்போது வெளி உலகத்தோடு அவர்கள் எப்படி உறவாட முடியும்?.

இது இன்றைய தவெக தலைமையிலான ஆட்சிக்கு மட்டும் பொருந்தக் கூடிய ஒன்றல்ல.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பிலிருந்த ஒவ்வொரு கட்சியும் தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது.

இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிற பாலியல் அத்துமீறல்கள், அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளுக்கு உண்மையில் பொறுப்பேற்க வேண்டியது யார்?

நம்மைச் சுற்றியிருக்கிற நவீனத் தொழில்நுட்ப ஊடகங்களுக்கும் அதை தாராளமாக அனுமதித்தவர்களுக்கும் இதில் பங்கில்லையா?

வயது வித்தியாசமில்லாமல் மதுபானம் மட்டுமல்ல, சகல போதைப் பொருட்களையும் விற்பனைப் பொருளாக விற்றவர்களுக்கும், விற்க அனுமதித்தவர்களுக்கும் இதில் பங்கில்லையா?

குற்றங்களின் விளைவுகள் மட்டும் எதோ தற்செயலாக நிகழ்கிற மாதிரி பதறுகிற இதே அரசியல்வாதிகள், இத்தகைய பாலியல் தூண்டுதல்கள் நிகழ்வதற்கான ஊற்றுக் கண்கள் எங்கெல்லாம் இருக்கின்றன?

அத்தகைய ஊற்றுக் கண்களை அடைக்க கட்சி பேதமில்லாமல் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய எண்ணத்துடன் எப்போதாவது செயல்பட்டிருக்கிறார்களா?

இன்றைக்கு அரசியல் செய்கிற எல்லோரும் இந்தக் கேள்விகளை அவரவர் மனசாட்சியைப் பார்த்து நியாயமாக கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஆனால், செய்வார்களா?

– மணா

Comments (0)
Add Comment