முட்டை என்னும் சத்துக்களின் பெட்டகம்!

ஜூன் 3: தேசிய முட்டை தின சிறப்புப் பகிர்வு

உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிட எடுத்துக்கொள்ளும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ம் தேதி தேசிய முட்டை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தினசரி உணவில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இருப்பது அவசியமாகும். அதுவும் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த விலை மலிவாகக் கிடைக்கக்கூடிய முட்டையின் முக்கியத்துவத்தையும், அது வழங்கும் அபாரமான ஆரோக்கிய நன்மைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். ஏழை எளிய மக்கள் முதல்,பெரும் பணக்காரர்கள், உடற்பயிற்சியாளர்கள் வரை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒரு மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவாக முட்டை இருக்கிறது.

முட்டையை வெறும் உணவாக மட்டும் பார்க்காமல், உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்களை அள்ளித்தரும் ஒரு இயற்கை வரப்பிரசாதமாக பார்க்க வேண்டும்.

முட்டையின் நன்மைகள்

முழுமையான புரதம்:

நம் உடலுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் சரியான விகிதத்தில் கொண்டுள்ள ஒரு முழுமையான புரத உணவு முட்டை ஆகும். இது தசை வளர்ச்சிக்கும் திசுக்கள் பழுதுபார்க்க படுவதற்கும் பெரிதும் உதவுகிறது.

மூளை வளர்ச்சி:

இதில் உள்ள ‘கோலின்’ என்ற ஊட்டச்சத்து, மூளையின் செயல்பாட்டிற்கு நினைவாற்றல் மேம்பாட்டிற்கும் இன்றியமையாதது. நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இது உதவுகிறது.

கண் ஆரோக்கியம்:

முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ‘லுடீன்’ மற்றும் ‘சியாக்சாந்தின்’ ஆகிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வயது முதிர்வால் ஏற்படும் கண் பார்வைக் குறைபாடுகளை தடுக்க பெரிதும் உதவுகின்றன.

எடை மேலாண்மை:

காலையில் முட்டை சாப்பிடுவது நீண்ட நேரத்திற்குப் பசியைக் கட்டுப்படுத்தி, தேவையில்லாத நொறுக்குத் தீனிகள் உண்பதைத் தவிர்க்கிறது. இதனால் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் பராமரிக்க முட்டை ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

முட்டையின் மஞ்சள் கருவின் முக்கியத்துவம்

முட்டையைத் தேர்ந்தெடுக்கும் போது பலருக்கு எழும் பொதுவான சந்தேகம், அதன் மஞ்சள் கருவை சாப்பிடலாமா என்பதுதான்.

முட்டையின் முழுமையான பலனைப் பெற வேண்டும் என்றால் அதன் வெள்ளைக்கருவை மட்டுமல்லாமல் மஞ்சள் கருவையும் சேர்த்து சாப்பிடுவதே சிறந்தது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகளும், முக்கிய வைட்டமின்களும் இந்த மஞ்சள் கருவில் தான் நிறைந்துள்ளன.

எலும்புகளின் பலத்திற்கு முட்டையின் பங்களிப்பு

பொதுவாக எலும்பு ஆரோக்கியம் என்றாலே நம் நினைவுக்கு வருவது பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் தான். ஆனால், நமது எலும்புகளை இரும்பு போல வலுவாக இருக்கவும் உடைந்த எலும்பு ஒட்டவும் முட்டை எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றி விரிவாகப்பார்க்கலாம்.

எலும்புகளை வலுவாக்கும் முக்கியக் காரணிகள்

இயற்கையான வைட்டமின் D: உணவுகள் மூலம் உடலுக்கு நேரடியாக கிடைக்கும் வைட்டமின் D மிகக் குறைவு. அதில் முட்டையின் மஞ்சள் கரு மிக முக்கியமானது. இந்த வைட்டமின் D இருந்தால்தான், நாம் சாப்பிடும் உணவில் உள்ள கால்சியம் சத்தை உடல் முழுமையாக உறிஞ்ச முடியும். வைட்டமின் D குறைபாடு ஏற்பட்டால், எலும்புகள் பலவீனமடைந்து எளிதில் உடையக் கூடும்.

அடர்த்தியான கால்சியம்:

எலும்புகள் மற்றும் பற்களின் கட்டமைப்புக்கு கால்சியம் எவ்வளவு அவசியம் என்பதை நாம் அறிந்ததுதான். முட்டையில் உள்ள கால்சியம் சத்து, எலும்புகளின் அடர்த்தியை (Bone Density) அதிகரித்து அவற்றை உறுதியாக்க உதவுகிறது.

பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம்:

முட்டையில் இருக்கும் பாஸ்பரஸ் சத்தானது, கால்சியத்துடன் இணைந்து எலும்பின் வலிமையை இரட்டிப்பாக்குகிறது. மேலும், இதில் உள்ள துத்தநாகம் (Zinc) bone செல்களின் வளர்ச்சிக்கும், பழுதுபார்க்கவும் துணைபுரிகிறது.

ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புப்புரை) தடுப்பு

வயது முதிர்வின் காரணமாக பலருக்கும் எலும்புகளின் அடர்த்தி குறைந்து, ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ என்ற எலும்புப்புரை நோய் ஏற்படுகிறது.முட்டையில் உள்ள உயர்தர புரதமும், அத்தியாவசிய தாதுக்களும் வயதான காலத்தில் ஏற்படும் எலும்புத் தேய்மானத்தை கட்டுப்படுத்துகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் எலும்பு பலவீனத்தை தடுக்க தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் என்கின்றனர்.

தசை மற்றும் எலும்புகளின் இணைப்பு

எலும்புகள் மட்டும் வலுவாக இருந்தால் போதாது, அதை தாங்கிப் பிடிக்கும் தசைநாரும் வலுவாக இருக்க வேண்டும். முட்டையில் உள்ள ‘அமினோ அமிலங்கள்’ தசைகளை வலுப்படுத்தி, எலும்புகளுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இது மூட்டு வலி மற்றும் தசை பிடிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து உடலைக்காக்கிறது.

வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, மருத்துவர்களின் ஆலோசனையின்படி தினசரி உணவில் முட்டை சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும்.

விலை உயர்ந்த உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து பானங்களை விடவும் இயற்கையாக விலை மலிவாக நமக்குக் கிடைக்கும் முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.

இந்தத் தேசிய முட்டை தினத்தில், முட்டையைக் கொண்டு சுவையான மற்றும் ஆரோக்கியமான புதிய உணவு வகைகளை சமைத்து, உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

  • யாழினி சோமு

#முட்டை #தேசியமுட்டைதினம் #மஞ்சள்கரு #லுடீன் #சியாக்சாந்தின் #ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் #Egg #NationalEggDay #Yolk #Lutein #Zeaxanthin #Antioxidants #HealthyFood #Nutrition #ProteinRich #EyeHealth #SuperFood #EggBenefits #HealthyLifestyle #FoodFacts #HealthAwareness

Comments (0)
Add Comment