குப்பை மறு சுழற்சியால் கோடீஸ்வரராக முடியும்!

சாதித்துக் காட்டிய இளம்பெண்

உள்ளுணர்வில் ஊடுருவிய ஒரு புகழ்பெற்ற ஆளுமையை முன்மாதிரியாக மனதுக்குள் தரித்து கொண்டே பெரும்பாலானோர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சாதிக்க நினைக்கும் பலருக்கும் இது போன்றதொரு முன்மாதிரி அவசியமாகிறது.

இருளடைந்த வெளியில் விழிகளுக்கு புலப்படாமல் இருக்கிற இலக்கை நோக்கி நடக்க, இன்னொருவரின் அனுபவம் வெளிச்சமாக இருக்கிறது.

தன்னுடைய மாற்றுச் சிந்தனையின் மூலம் இத்தகைய வழிகாட்டியாய் பிறருக்கு விளங்குபவர் தான் www.kuppathotti.com-ன் நிறுவனர் சுஜாதா.

தானே உருவாக்கிய புதிய களத்தில் வெற்றிகரமாய் வலம் வந்து கொண்டிருக்கும் இளம் தொழில் முனைவோராக இவர் அறியப்படுகிறார்.

வீடு தேடிச்சென்று பழைய செய்தித் தாள்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பால் கவர்களை வாங்கி, அதனை மறு சுழற்சி செய்யும் தொழிலை சிறப்பாக கையாண்டு வருகிறார்.

கிராமத்தில் இருந்து வந்த முதல் தலைமுறை பட்டதாரி பெண்ணான இவர், மென்பொருள் நிறுவனத்தில் நல்லதொரு சம்பளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்.

வாழ்வின் இலக்கு வருமானம் ஈட்டுவது மட்டுமல்லாமல் சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பு செய்யும் விதமாகவும் இருக்க வேண்டும் என விரும்பினார்.

அதோடு, பிறர் செய்யத் தயங்குகிற, முயற்சித்து கைவிட்ட விஷயங்களைத் தொட்டு ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஒத்த கருத்துடைய தன் கணவர் ஜெகனுடன் இணைந்து இந்நிறுவனத்தைத் தொடங்கினார்.

சென்னை மாதிரியான மெட்ரோ நகரங்களில், குப்பைகளை நிர்வகிப்பது பெரும் சவாலாக உள்ளது.

ஆனால், இதே நகரத்தின் சில பகுதிகளில் இதனை பணமாக மாற்றும் வழிமுறையும் நடைபெறுகிறது.

இரண்டுக்கும் இடையில் இருப்பது சில தொழில்நுட்பப் பிரச்சனைகளும் மற்றும் அலட்சிய மனப்பாங்கும்தான்.

குப்பைக் கொள்முதல் மற்றும் மறுசுழற்சி முறையை நவீனமாக யோசித்தது இவரின் நிறுவனம்.

பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரிகளிடம் பேசியபோது, பெரிய அளவில் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்றனர்.

இக்கடைகளின் வியாபார முறையும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

உலக அளவில் இருக்கிற தேவை, சந்தை நிலவரம் மற்றும் மறு சுழற்சி வாய்ப்புகள் பற்றி அலசிய பிறகு நிறுவனம் அமைய அடித்தளமிட்டார் சுஜாதா.

பட்டதாரி பெண் குப்பை வியாபாரம் செய்யலாமா என்கிற வார்த்தைகளை புறந்தள்ளிவிட்டு மறு சுழற்சி செய்யும் நிறுவனங்களை தொடர்பு கொண்டார். நிறைய பேர் கொள்முதல் செய்ய முன்வந்தனர்.

உலகிலேயே குப்பைகளை கையாள்வதற்கான முதல் இணையதளம் www.kuppathotti.com உருவாக்கப்பட்டது.

முதல் கட்டமாக, குப்பைகள் தரம் பிரித்து சேகரிக்கப்படுகின்றன. துண்டுப் பிரசுரங்கள் மூலம் இதுகுறித்து விளம்பரப்படுத்தப்பட்டது.

முதல் வாரத்திலேயே 200 பேர் தங்களைப் பற்றிய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்தனர். kuppathotti.com-ல் விலைப்பட்டியல் உள்ளது.

இந்நிறுவனத்தின் இணையதளம் வழியாகவோ அல்லது அவர்களின் வாடிக்கையாளர் சேவை எண்ணை தொடர்பு கொண்டோ, மக்கள் தங்களின் குப்பைகளை எடுக்க முன் பதிவு செய்யலாம்.

சீருடை அணிந்த பணியாளர்கள் வீட்டிற்கே வந்து பொருட்களை எடை போட்டு அதற்கான பணத்தை வழங்குவார்கள்.

இந்த சேவை சென்னை மற்றும் சில முக்கிய நகரங்களை மையமாக கொண்டு செயல்படுகிறது.

இன்று 5000-க்கும் அதிக வாடிக்கையாளர்களுடனும் பத்துக்கும் மேற்பட்ட சாப்ட்வேர் நிபுணர்களுடனும் தமிழகம் முழுவதும் இச்சேவையைக் கொண்டு செல்லும் திட்டத்துடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்நிறுவனம்.

உழைப்பும் திட்டமிடலும் இருந்தால் குப்பையும் கோபுரத்தில் அமர்த்தும் என்பதற்கு உதாரணமாய் திகழ்கிறார் சுஜாதா.

S. வாணி

Comments (0)
Add Comment