நீ பெண், உனக்குப் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அறிவோ, ஆற்றலோ இல்லை என்கிற ஆதிக்க மனப்பாங்கின் வெளிப்பாடு பெண்ணின் பொருளாதாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கி ஆணை நகர்த்துகிறது.
பொருளாதாரத்தைப் பெண்ணே கைக்கொண்டால் தன்னுடைய அதிகாரத்தைச் செலுத்த முடியாமல் போய்விடுமோ என்கிற ஆணின் அச்சமும் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.
உயர் பதவி வகிக்கும் பெண் ஒருவர், தன் சம்பளம் முழுவதையும் கணவரே நிர்வகிப்பதாகவும் மாதம் ஆயிரம் ரூபாய் தன் செலவுக்கு என்று கொடுத்து விடுவதாகவும் கூறினார்.
‘இதற்கு மேல் எனக்கு என்ன செலவு இருக்கிறது? என்று தன் உழைப்பு சுரண்டப்படுவதையும் தன்னுடைய சுயமரியாதை தொலைந்துபோவதையும் குறித்து விழிப்பற்றுப் பேசியது அதிர்ச்சியாக இருந்தது.
“பெண் பெறும் கல்வி கணவனுக்கும் கணவன் குடும்பத்துக்கும் வருவாயைத் தருவதற்கு மட்டுமானதா?
அவளின் பொருளாதாரம் முதலில் அவளைத் தன்னம்பிக்கை மிக்கவளாகவும் சுயமரியாதையுடன் கூடிய வாழ்க்கையை மேற்கொள்பவளாகவும், கணவனால் மதிக்கத் தகுந்தவளாகவும் உருவாக்குவதற்கானது என்கிற அடிப்படையே ஆட்டம் கண்டுள்ளது.
முந்தைய தலைமுறைப் பெண்கள் பலர் பொருளாதாரத்தைத் தங்கள் கைகளில் காணாமலேயே வாழ்க்கையைக் கடந்துவிட்டார்கள்.
ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் பொருளாதரத்தை ஈட்டினாலும் பெரும்பாலான பெண்கள் அதன் பலனை முழுமையாக நுகர முடியாத கடுமையான சூழலையே எதிர்கொள்கின்றனர்.
எந்த நோக்கத்துக்காகப் பெண் கல்வி முன்னிறுத்தப்பட்டதோ அந்த நோக்கத்தையே ஆதிக்க மனநிலை அசைத்துப் பார்க்கிறது.
பெண் ஈட்டும் பொருளாதாரத்தை அன்பு, அதிகாரம் என்பது போன்ற பிரம்புகளைக் கொண்டு மிக எளிதாகத் தன் வசப்படுத்திக்கொள்கிறான் ஆண்.
குடும்பச் செலவுகள் அனைத்தையும் பெண்ணின் தலையில் ஏற்றிவிட்டுத் தன் ஆடம்பரச் செலவுக்கும் அவளிடம் இருந்து பறித்துச் சுகபோகமாக வாழ்பவர்களையும் காண முடிகிறது.
இந்த அவலமான சூழலில் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த வாழ்க்கையைக் கடந்து போகிற பெண்களே இங்கு எண்ணிக்கையில் அதிகம்.
அன்றாட வாழ்க்கையை லகுவாக வாழ்வதற்கான அடிநாதமாகப் பொருளாதாரமே விளங்குகிறது.
ஆனால், பெண் ஈட்டக்கூடிய பொருளாதாரத்தின் மீதான உரிமையை ஆட்டம் காணச் செய்யும் ஆதிக்க வேர்களைக் களைய வேண்டியது மிகவும் அவசியம்.
பாலினச் சமத்துவமற்ற சமூகத்தில் பெண்ணின் உரிமையை நிலைநாட்டுவது என்பது நிறைந்த செயல்பாடு.
பெண் குறித்து ஆழமாக வேரூன்றியுள்ள ஆதிக்க மனநிலை வரை, பெண் பெறக்கூடிய பொருளாதார என்பது அவளின் விடுதலையாக இருப்பது கேள்விக்குறியே.
– நன்றி: இந்து தமிழ் திசை