நீங்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பவரா?

சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றக் குழுவில் பேசியதன் மூலம் புகழ்பெற்ற பேச்சாளரான ராஜா, கடல் கடந்து பேசச் சென்ற இடத்தில் அன்போடு உணவளித்தவரிடம் நடத்திய ஜாதி விசாரணை பரபரப்பாகி இருக்கிறது. பட்டிமன்றம் ராஜா அவர்களின் இந்த செயல் கடுமையான கண்டனத்திற்குரியது.

இது குறித்து இன்னும் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த ஜாதி வியாதியை அதிகமாகவே பரப்பி வருகிறார்கள்.

அண்மையில் ஒரு வீடியோவில் இன்னொரு நாட்டில் வாழும் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னிடம் ஒரு இந்தியப் பெண் பொது இடத்தில் வைத்து நீங்கள் என்ன ஜாதி என்று கேட்ட அனுபவத்தை வேதனையோடு பகிர்ந்திருந்தார்.

இந்த ஜாதி விசாரணையைப் போன்ற இழிவான ஒரு நடத்தை வேறு இருக்க முடியாது. இதனை வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் சங்கிகளின் அமைப்புகள் மூலம் பள்ளிகளிலேயே கடைப்பிடிக்க முயல்கிறார்கள்.

சனாதனத்தைக் கற்பிக்கும் அமைப்புகள் இந்துக் கலாச்சாரக் கல்வியைக் கற்றுத்தருகிறோம் என்று ஆஸ்திரேலிய அரசின் அனுமதி பெற்று ஒரு பள்ளியில் வர்ணாஸ்ரம முறையில் பிள்ளைகளை பிரித்து உட்கார வைத்து காட்டியிருக்கிறார்கள்.

இதற்கான எதிர்ப்பை ஆஸ்திரேலியாவில் இயங்கும் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் அரசிடம் வெளிப்படுத்தியதோடு தொடர் நடவடிக்கையும் எடுத்துவருகிறார்கள்.

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ஆஸ்திரேலியா மெல்பர்னில் நடந்த பன்னாட்டு மாநாட்டில் கர்நாடகாவில் இருந்து பங்கேற்ற கர்நாடகா முன்னாள் அட்வகேட் ஜெனரல் வழக்கறிஞர் ரவிவர்மகுமார் அவர்கள் ஒரு கருத்தைத் தெரிவித்தார். 

“வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியாவிற்குள் வரும்போது விமானநிலையத்திலேயே ஒரு Immigration படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும்.

அந்தப் படிவத்தில் உங்களுக்கு தொற்று வியாதி இருக்கிறதா? நீங்கள் சிறைக்குச் சென்றீர்களா? கடத்தல் பொருள் கொண்டு வருகிறீர்களா? என்று பத்து, பனிரெண்டு கேள்விகள் இருக்கும்.

அதற்கு நாம் அளிக்கும் பதில்களில் எதேனும் பிரச்சனை இருந்தால் அந்த நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டார்கள்.

அனுமதித்தபிறகு அந்த நிபந்தனைகளுக்கு மாறாக நடந்து கொண்டால் நாட்டை விட்டு வெளியேற்றவும் செய்வார்கள்.

அந்தக் கேள்விகளோடு நீங்கள் ஜாதிவேறுபாடு மற்றும் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறவரா? என்ற கேள்வியை சேர்க்க வேண்டும்.

ஆம் என்றால் அவர்களை அந்த நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. ‘இல்லை’ என்று பதில் சொல்லிவிட்டு உள்ளே வந்தபிறகு ஜாதி வேறுபாட்டைக் கடைப்பிடித்தால் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஆஸ்திரேலிய அரசிடம் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் முன்னெடுக்க வேண்டும்“ என்று குறிப்பிட்டார்.

ஆனால், அதற்கு முன்பாகவே ஆஸ்திரேலிய பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் துணைத்தலைவர் மருத்துவர் ஆரூன் மற்றும் செயற்குழு உறுப்பினர் தேவிபாலா இருவரும் பல்வேறு முறையீடுகளை அரசுக்கு அனுப்பிவந்தார்கள்.

அவர்களுடைய முயற்சியால் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சாதி என்பது பிரிவினைக் கூறுகளில் ஒன்றாக (Caste is one among the factors of Discrimination) இணைக்கப்பட்டுள்ளது.

அந்த மாநாட்டில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா அவர்களின் எழுச்சிமிக்க உரையின் பாதிப்பினால்தான் தினமலர் கூட்டம் அலறியது.

தொடர்ந்து ஆஸ்திரேலிய செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் அவர்களை கான்பராவில் நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்து உரையாடினோம்.

ஆ. இராசா அவர்களுக்கும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா அவர்களுக்கும் நாடாளுமன்றத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திரு டேவிட் ஷூபிரிட்ஜ் அவர்களைச் சந்தித்தபோது கர்நாடகா மூத்த வழக்கறிஞர் ரவிவர்மகுமார் அவர்கள் மாநாட்டில் கூறிய கருத்தை நான் ஷூபிரிட்ஜ் அவர்களிடம் தெரிவித்தேன்.

அதனை அவர் ஆமோதித்து ஏற்றுக்கொண்டார். அதன் தேவை குறித்து தோழர் ஓவியா அவர்கள் விளக்கினார்.

தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் முயற்சியால் செனட்டர் ஷூபிரிட்ஜ் அவர்கள் மனித உரிகைகள் ஆணைய அதிகாரிகளிடம் ஜாதிப் பாகுபாடுகள் பின்பற்றப்படுவது குறித்து விசாரணை நடத்தி இருக்கிறார்.

அந்த வீடியோவை அவருடைய அதிகாரப்பூர்வமான பதிவில் வெளியிட்டிருக்கிறார்.

ஜாதியின் நச்சுப்பற்களை நசுக்கும் வலிமை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சட்டங்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு ஏற்கனவே இனவெறி பற்றிய அனுபவம் உண்டு.

இந்த நேரத்தில் நம்முடைய தோழர்கள் முழுவீச்சுடன் செயல்பட்டால் இந்த வைரசை வெளிநாட்டில் பரவாமல் தடுக்கமுடியும்.

நன்றி: வழக்கறிஞர் சேலம் அருள்மொழி முகநூல் பதிவு

Comments (0)
Add Comment