மத ஒற்றுமைக்குச் சான்றான திருப்பரங்குன்ற மலை!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வழக்கமாக திருவண்ணாமலை பெயர்தான் ஊடகங்களில் அதிகமாக அடிபடும். ஆனால், இந்த ஆண்டு அதிகமாக ஊடகங்களில் அடிபட்ட பெயர் திருப்பரங்குன்றம் மலை.

மதுரைக்கு மிக அண்மையில் இருக்கக்கூடிய முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக சொல்லப்படக்கூடிய திருப்பரங்குன்ற மலையின் மேல், அப்போதிருந்தே நிலவக்கூடிய மதங்களை மீறிய ஒற்றுமைக்கு ஒரு உதாரணம்.

அங்குள்ள அந்த மலை மேல் சென்று வழிபடும் இஸ்லாமிய பெருமக்களும், கீழுள்ள முருகன் கோவிலுக்கும் செல்லும் இந்து பக்தர்களும் எந்த விதமான பாகுபாடுமின்றி சகோதர உணர்வுடன் தான் இருந்து வந்திருக்கிறார்கள்.

அங்கு நடைபெறும் திருவிழாக்களே அந்த மத ஒற்றுமையை உணர்வை உணர்த்தியிருக்கின்றன.

இதை வெளிப்படுத்தும் விதத்தில் பிரபல வார இதழில் வெளிவந்த கட்டுரை இது.

இந்தக் கட்டுரைக்காக என்னுடன் திருப்பரங்குன்றம் மலை மேல் வந்து புகைப்படம் எடுத்தவர் நண்பரான மு.ஜகீர்.

இந்தக் கட்டுரை மீள் பதிவு…

“திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா… திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…” – ஒரே குரலுக்கு இரு கிளைகள் மாதிரி அப்படி ஒரு ஒற்றுமையுடன் இதமான குரல்களில் சூலமங்கலம் சகோதரிகள் பாடின பாட்டைக் கேட்டிருப்பீர்கள்.
 
அந்தப் பாடலின் மிருதுத் தன்மைக்கு நேரெதிரான முரட்டுப் பாறை அடர்ந்த மலைப் பின்னணியில் திருப்பரங்குன்றம். மதுரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற இது முருகனின் ‘ஆறுபடை வீடு’களில் முதல் வீடு.
 
பிரமாண்டமான மலையை ஒரு பக்கம் பார்த்தால் யானை மாதிரித் தோற்றம்; முன் ஒரு புறம் பார்த்தால் ‘சிவலிங்கம்’ மாதிரித் தெரிகிறது.
 
ராணி மங்கம்மாள் காலத்திய மண்டபத்தில் தூண்களில் சிலைகளாகக் கும்பிட்டபடி நிற்கிறார்கள் திருமண நாயக்கரும், அவரது குடும்பமும்.
 
நவகிரகங்களே இல்லாத இந்தக் கோவிலில் மலையைக் குடைந்த மாதிரியான கருவறையில் முருகப் பெருமான்.
 
மற்ற வீடுகளில் நின்ற நிலையில் இருக்கிற முருகன், இங்கே உட்கார்ந்த நிலையில் இருப்பதை விசேஷமாகச் சொல்கிறார்கள்.
 
இடப்பக்கம் தெய்வானையின் சிலை. இன்னொருபுறம் நாரதருக்கு ஒரு சிலை. முருகனுக்கு மட்டும் புனுகு சாத்தப்பட்டு அபிஷேகம் நடக்கிறது.
 
ஆனால், திருமுழுக்கு நடப்பதெல்லாம் முருகன் கையில் உள்ள வேலுக்கு மட்டும்தான். ஆயுதபூஜை தினமும்!
 
கோவில் கருவறையில் கும்பிட்டு வெளிவரும் முன்பு வெப்பம் அனத்தி உடம்பெல்லாம் வியர்த்து விடுகிறது.
 
கோயிலுக்குச் சற்றுத் தள்ளிப் பொடிநடையாக நடந்தால் ‘சரவணப் பொய்கை’ என்கிற குளம். முருகக் கடவுள் வேலினால் தோண்டி உண்டாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் குளத்தில் நேர்த்திக் கடனுக்காக – தலை முடியைத் துறந்து, குளித்து ஈர உதறலோடு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
 
கொஞ்சம் தள்ளிப் போனால், இன்னொரு குகை. அதற்குள் கல்லினாலான 6 படுக்கைகள். (படுத்தால் ‘கனமான’ தூக்கம் வருமோ, என்னவோ?)
 
சமண முனிவர்கள் அங்கிருந்ததாகவும் சொல்கிறார்கள்.
 
ஆறு படுக்கைகளை வைத்து ‘பஞ்சபாண்டவர் குகை’ என்றும் ஹேசியமாகச் சொல்கிறார்கள்.
 
கீழ்ப் பிராந்தியத்தை வீட்டு மலைப் பகுதியில் ‘மேல் மூச்சு’ வாங்க ஏறினால், கணுக்கால் சதையில் கொஞ்சம் அசதி சேர்வதற்குள் – காசி விஸ்வநாதர் கோவில்.
 
மலைச்சரிவில் பழங்காலச் சிதைவுடன் இருக்கிற இந்தக் கோவிலுக்கு தனியாக ஒரு பூசாரி. வெளியே தண்ணீர்த் திட்டு.
 
மீன்கள் துள்ளுகின்ற இந்த இடத்திற்கு வருகிறவர்கள் பக்தி சிரத்தையாகப் பொரி வாங்கிப் போடுகிறார்கள். (மீன்களுக்குத் துன்பம் கொடுத்தவர்களுக்குச் சாபம் கொடுக்கப்பட்டதாகக் கதை உலவுவதால் முன் ஜாக்கிரதை தான்!)
 
ஆசுவாசப்படுத்திக் கொண்டு மலைப்பகுதியில் இன்னுமொரு நடை பெருமூச்சுடன் நடந்தால் போகிற வழியில் ஆங்காங்கே படிக்கட்டுகளில், பாறை வழுக்கலில் பல இஸ்லாமியப் பெயர்க் கல்வெட்டுகள்.
 
மேலே பச்சைக் கலர் பரவின தர்ஹா. சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்ஹா என்கிற இந்த இடத்தில் நுழைந்ததும் – முக்காடு அணிந்தபடி தென் மாவட்டங்களில் இருந்து வந்திருக்கிற பல பெண்கள்.
 
போனதும் ஒரே சாம்பிராணி வாசனை. “700 வருடங்களுக்கு முன்பு, ஜித்தா நகரத்திலிருந்து இறை அன்பைப் பரப்ப கடலில் ஆயிரக் கணக்கானவர்களுடன் கேரளாவுக்கு வந்தார்கள் முகமது முஸ்தபா வழி வந்தவர்களான பாதுஷா அமீரும், ஏர்வாடி இப்ராஹீமும்.
 
கேரளாவில் நல்ல வரவேற்பு. பாண்டிய மன்னருக்கு, இவர்கள் நாட்டை பிடிக்க வந்தவர்கள் என்கிற பயம். இவர்களை அனுமதிக்க மறுத்துத் தாக்க ஆரம்பித்ததும் இவர்கள் யுத்தத்தில் தவிர்க்க முடியாமல் இறங்கி வென்று மதுரையை ஆண்டனர்.
 
பிறகு சோழர்களிடம் ஒப்படைத்து விட்டு திருப்பரங்குன்றம் மலையில் உள்ள குகையைத் தொழுகைக்காகவும், தியானத்திற்காகவும் பயன்படுத்தியபோது திருப்பதி மன்னனால் அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.
 
அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் தான் மலைமேல் உள்ள இந்தத் தர்ஹா.
 
இஸ்லாமிய ‘ரஜப்’ மாதத்தில் நடக்கிற சந்தனக்கூடு விழாவிற்கு பல மாநிலங்களில் இருந்தும் இந்தத் தர்ஹாவிற்கு வருகிறார்கள்” என்கிறார் தர்ஹா டிரஸ்டியான தாவுத் கான்.
 
வெவ்வேறு வேண்டுதலுக்காக வந்து இந்தத் தர்ஹாவில் சில நாட்கள் தங்கி விட்டுப் போகும் பக்தர்கள், சாம்பிராணிப் புகை பரப்பி மெல்லிய மயிலிறகால் தொழுகை நடத்துகிற தர்ஹா நிர்வாகிகள்.
 
கேரளாவில் இருந்து அப்போதுதான் வந்து இறங்கியிருக்கிற டூரிஸ்ட்டுகள் மலையடிவாரத்தில் இருக்கிற முருகன் கோவிலுக்குப் போய்விட்டு கும்பலாக தர்ஹாவுக்கு மலையேறிப் போகிறார்கள்.
 
மதம் வெவ்வேறு ஆனாலும் வழிபாடு ஒன்று தானே!
 
– மணா (லக்ஷ்மணன்)
 
22.10.1998-ல் வார இதழ் ஒன்றில் வெளிவந்த கட்டுரை.
Comments (0)
Add Comment