நோபல் பரிசு பெற்ற முதல் பெண் படைப்பாளி!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1909-ல்) பெற்ற உலகின் முதல் பெண்மணி, செல்மா லோவிசா லேகர்லாவ் சுவிடனைச் சேர்ந்தவர்.
 
இவரின் சிறந்த படைப்பான ‘நீலின் அற்புத சாகசங்கள்’ (The Wonderful Adventures of Nils) என்ற நூல் 1906-ல் முதல் பாகமும், 1907-ல் இரண்டாம் பாகமும் வெளிவந்தது.
 
இது உலக அளவில் குழந்தைகளால் மிகவும் விரும்பப்படும் புத்தகம் என்ற பெருமையைப் பெற்றது.
 
1858-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் நாள் சுவீடன் உள்ள வார்ம்லாண்ட் நகரில் எரிக் லூயிசே தம்பதிக்கு ஐந்தாவது குழந்தையாக பிறந்தார் செல்மா லோவிசா.
 
இவர் பிறக்கும் போதே இடுப்பில் காயத்துடன் பிறந்தார். சிறுவயதில் இரு கால்களின் இயக்கமும் பாதிக்கப்பட்டு பின்னர் சரியானது.
 
சிறு வயதிலிருந்தே புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டார். 1884-ல் அவர் தந்தை நோய்வாய்ப்பட்டு அவர்கள் வீடு விற்கப்பட்டதைத் தொடர்ந்து குடும்பம் வறுமையில் வாழ்ந்தது.
 
செல்மா 1882 முதல் 1885 வரை ஸ்டாக்ஹோமிலுள்ள ஆசிரியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின், 1885-ல் லாண்ட்ஸ்குரோனாவில் பெண்கள் பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்தார்.
 
அதிகக் கல்வியறிவு இல்லாத போதும் சிறுவயதில் அவர் படித்த கதைப் புத்தகங்கள் அவருக்கு கைகொடுத்தது. அப்பள்ளியில் சிறந்த கதை சொல்லும் ஆசிரியையாகத் திகழ்ந்தார்.
 
ஆசிரியர் பணிக்கு இடையே ‘கோஸ்ட்டா பெர்லிங்ஸ் சகா’ என்ற தனது முதல் நாவலை 1891-ல் எழுதினார்.
 
அதன் முதல் சில அத்தியாயங்களை வாரப் பத்திரிகை நடத்திய இலக்கியப் போட்டிக்கு அனுப்பிவைத்தார்.
 
இந்நூல் இலக்கிய வட்டாரத்தில் மிகவும் பேசப்பட்டு முதல் பரிசை வென்றது. நாவலில் இருந்து ஒருசில பகுதிகளை அந்த வாரப் பத்திரிகை வெளியிட்டது.
 
பின்னாளில் மிகவும் போற்றப்பட இருக்கிற படைப்பு என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை.
 
புத்தகம் வெளிவந்த பிறகு டேனிஷில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் பிறகு பரவலான பாராட்டுகளைப் பெற்றதோடு விற்பனையும் அதிகரித்தது.
 
அரச குடும்பம் மற்றும் ஸ்வீடன் அகாடமியில் இருந்து நிதி உதவி கிடைத்தது. அதன்பின் 1895-ல் ஆசிரியைப் பணியை துறந்து எழுத்துப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
 
இத்தாலி நாட்டுக்குச் சென்றவர் அங்கு கிறித்துவர்களுக்கும், சமூக அமைப்பாளர்களுக்கும் இடையே இருந்த பிராச்சனைகளை மையமாகக் கொண்டு ‘கிருத்துவ எதிர்ப்பாளரின் அதிசயங்கள்’ என்ற புத்தகத்தை எழுதினார்.
 
1897ல் பாலென் நகருக்குச் சென்றவர் அங்கு வால்போர்க் ஒலேன்டர் என்பவரைச் சந்தித்தார். பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த அவரைத் தன் உதவியாளராக வைத்துக் கொண்டார்.


தன் படைப்புகளுக்கு கருத்துகளை சேகரிக்க ஓரிரு முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார்.

இத்தாலிக்கு சென்றவர், ‘ஆன்டிகிறிஸ்ட்ஸ் மிராக்ளர்’ என்ற புத்தகத்தை எழுதினார். தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினார். 1902-ல் வெளிவந்த ‘ஜெருசலேம்’ என்ற நூல் அமோக வரவேற்பை பெற்றது.

 

இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1909-ல் பெற்றார். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு, ஏற்கெனவே வறுமையால் விற்ற வீட்டைத் திரும்ப வாங்கினார்.

இரண்டாம் உலகப் போருக்கு நிதி திரட்டுவதற்காக தனது நோபல் பரிசு பதக்கம், ஸ்வீடன் அகாடமியின் தங்கப்பதக்கத்தை பின்லாந்து அரசுக்கு அனுப்பினார்.

இதில் நெகிழ்ந்துபோன பின்லாந்து அரசு வேறு வழிகளில் நிதி திரட்டி இவரது பதக்கங்களை இவரிடமே வழங்கியது.

ஸ்வீடன் இலக்கியக் கழகத்தின் தங்கப் பதக்கத்தை 1904-ல் பெற்றார். 1907-ல் உப்சலா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.

ஜெருசலேம் நகரில் ஒரு தெருவுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. ஜெருசலேம் உள்ளிட்ட இவரது பல நாவல்கள் திரைப்படங்களாகவும் தயாரிக்கப்பட்டன.

 

1858 நவம்பரில் பிறந்த செல்மா, 1940, மார்ச்சில்  தனது 81-வது வயதில் மறைந்தார். அவர் வாழ்ந்த வார்ம்லாண்ட் இல்லம், இன்று அவருடைய நினைவிடமாக உள்ளது.

 

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வறுமையை வென்று, சுய முயற்சியாலும் அபாரத் திறமையாலும் உலகப் புகழ்பெற்ற படைப்பாளியாக பரிணமித்தார் செல்மா லேகர்லாவ்.

மணி அமுதன்
Comments (0)
Add Comment