இலுமினாட்டி உலகை ஆளும் ரகசியக் குழு. 13 சக்தி வாய்ந்த குடும்பங்கள் உலகை ஆளுகின்றார்கள்.
பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இதன் உறுப்பினர்கள். முக்கோணத்தில் இருக்கும் கண் சின்னம் இலுமினாட்டியின் அடையாளம் போன்ற கருத்துகள் பலரிடமும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
ஆனால், இவற்றின் பின்னால் இருக்கும் உண்மையான வரலாற்றைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
உண்மையில் இலுமினாட்டி என்பது ஐரோப்பாவில் தோன்றிய ஒரு சிறிய அறிவுசார் ரகசிய அமைப்பாகும்.
அது உலகை ரகசியமாக கட்டுப்படுத்தும் அமைப்பாக அல்ல, மாறாக அறிவு, கல்வி மற்றும் சுதந்திர சிந்தனையை ஊக்குவிக்க உருவாக்கப்பட்ட ஒரு குழுவாக இருந்தது.
இதன் தோற்றத்தைப் புரிந்துகொள்ள நாம் முதலில் அந்தக் கால ஐரோப்பாவின் சூழலைப் பார்க்க வேண்டும்.
18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் “Enlightenment” அல்லது அறிவொளி இயக்கம் வேகமாக பரவிக் கொண்டிருந்தது.
அறிவியல், தர்க்க சிந்தனை, கல்வி, மனித உரிமைகள் மற்றும் சுதந்திரமான கருத்துக்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின.
பல சிந்தனையாளர்கள் மக்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விலகி அறிவின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த சமூக மற்றும் அறிவுசார் சூழலில்தான் இலுமினாட்டி உருவானது.
1776-ம் ஆண்டு மே 1-ம் தேதி Adam Weishaupt என்ற சட்டப் பேராசிரியர் ஜெர்மனியின் Bavaria பகுதியில் இந்த அமைப்பைத் தொடங்கினார்.
அவர் அக்காலத்தில் Ingolstadt பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் Canon Law துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
கல்வியறிவு மற்றும் தர்க்க சிந்தனையில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், மத மற்றும் அரசியல் அமைப்புகள் சமூகத்தின் மீது அதிக செல்வாக்கு செலுத்துகின்றன என்று கருதினார்.
மக்கள் தங்கள் சொந்த அறிவைப் பயன்படுத்தி சிந்திக்க வேண்டும் என்றும், கல்வி மற்றும் அறிவியல் வளர வேண்டும் என்றும் அவர் நம்பினார்.
பலர் Bavaria என்பதை ஒரு தனி நாடு என்று நினைத்தாலும், அது இன்றைய ஜெர்மனி நாட்டின் ஒரு பகுதியாகும்.
அந்தக் காலத்தில் தனித்த நிர்வாக அதிகாரம் கொண்டிருந்ததால் இந்த அமைப்பு “Bavarian Illuminati” என்று அழைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் சிலரே உறுப்பினர்களாக இருந்தாலும், பின்னர் பல சிந்தனையாளர்கள் இதில் இணைந்தனர்.
இந்த அமைப்பின் உறுப்பினர்கள் ரகசிய பெயர்களைப் பயன்படுத்தினர். அமைப்பிற்குள் பல நிலைகள் மற்றும் பதவிகள் இருந்தன.
உறுப்பினர்கள் சிறிய குழுக்களாக சந்தித்து கல்வி, தத்துவம், சமூக மாற்றம், அரசியல் மற்றும் அறிவியல் குறித்து விவாதித்தனர்.
இந்த ரகசிய தன்மையும் உறுப்பினர்களின் மறைமுக செயல்பாடுகளும் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தன.
அக்காலத்தில் அரசாங்கங்கள் ரகசிய அமைப்புகளை சந்தேகத்துடன் பார்த்தன. குறிப்பாக அரசியல் மற்றும் சமூக மாற்றங்களைப் பற்றி விவாதிக்கும் அமைப்புகள் ஆபத்தானதாக கருதப்பட்டன.
இதன் காரணமாக 1785-ம் ஆண்டு Bavaria அரசு Illuminati அமைப்பை சட்டவிரோதமானது என்று அறிவித்தது.
அமைப்பின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உறுப்பினர்கள் கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமைப்பு கலைக்கப்பட்டது. Illuminati மீண்டும் செயல்பட்டதாக எந்த நம்பகமான வரலாற்று ஆதாரமும் இல்லை.
ஆனால், இதன் கதை அங்கேயே முடிவடையவில்லை. 18-ம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற French Revolution-க்கு Illuminati காரணமாக இருக்கலாம் என்று சில எழுத்தாளர்கள் கூறத் தொடங்கினர்.
குறிப்பாக Augustin Barruel மற்றும் John Robison போன்ற எழுத்தாளர்கள் தங்கள் நூல்களில் Illuminati பற்றி எழுதியதால், இந்த அமைப்பைச் சுற்றி பல சந்தேகங்களும் மர்மங்களும் உருவாக ஆரம்பித்தன.
20-ம் நூற்றாண்டில் திரைப்படங்கள், நாவல்கள் மற்றும் பின்னர் இணையத்தின் வளர்ச்சி ஆகியவை Illuminati பற்றிய கதைகளை மேலும் பரப்பின.
உலக அரசியல், பொருளாதார நெருக்கடிகள், போர்கள் மற்றும் பெரிய சம்பவங்களுக்கு பின்னால் இந்த அமைப்பு இருக்கிறது என்ற கருத்துகள் உருவாகின.
“13 குடும்பங்கள் உலகை ஆளுகின்றன”, “பிரபலங்கள் அனைவரும் உறுப்பினர்கள்”, “உலக அரசியல்வாதிகள் ரகசியமாக கட்டுப்படுத்தப்படுகின்றனர்” போன்ற கதைகள் பரவின.
ஆனால், இவற்றை உறுதிப்படுத்தும் வரலாற்று ஆவணங்கள் அல்லது ஆதாரங்கள் எதுவும் இல்லை.
Illuminati-யுடன் அதிகமாக இணைக்கப்படும் சின்னங்களில் முக்கியமானது முக்கோணத்திற்குள் இருக்கும் கண் சின்னமாகும்.
“Eye of Providence” என்று அழைக்கப்படும் இந்த சின்னம் பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவக் கலை வடிவங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இது கடவுளின் கண்காணிப்பையும் பாதுகாப்பையும் குறிக்கிறது. அமெரிக்க ஒரு டாலர் நோட்டிலும் இந்த சின்னம் காணப்படுகிறது.
ஆனால், இது Illuminati-யின் அதிகாரப்பூர்வ சின்னம் என்பதற்கான உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை.
அதேபோல் ஆந்தை சின்னம், பிரமிட் சின்னம் மற்றும் பல மறைமுக அடையாளங்களும் பின்னாளில் Illuminati-யுடன் இணைக்கப்பட்டன.
உண்மையில் இவற்றில் பல பழமையான நாகரிகங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களில் இருந்து வந்தவை. பின்னர் இணையம் மற்றும் பொதுக் கலாச்சாரத்தின் மூலம் அவை Illuminati-யுடன் தொடர்புபடுத்தப்பட்டன.
பொதுவாக மனித மூளைகள் சிக்கலான நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மங்களை ஒன்றோடு ஒன்று இணைத்து விடை தேட முயலும் இதனை உளவியலில் “Pattern Recognition Bias” மற்றும் “Confirmation Bias” என்று குறிப்பிடுகின்றனர்.
ஒரு சம்பவத்துடன் தொடர்பில்லாத விஷயங்களைக் கூட மனித மூளை ஒன்றோடு ஒன்று இணைத்து பார்க்க முயற்சிக்கிறது. இதனால் பல சதிக் கோட்பாடுகள் (Conspiracy theory) உருவாகின்றன.
சமூக ஊடகங்கள், திரைப்படங்கள் மற்றும் இணைய உள்ளடக்கங்கள் இந்த நம்பிக்கைகள் பரவுவதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
சில நேரங்களில் கற்பனையும் உண்மையும் கலந்த தகவல்கள் மக்களிடம் பகிரப்படுவதால், வரலாற்று உண்மைகளுக்கும் இணையக் கதைகளுக்கும் இடையிலான வித்தியாசம் மறைந்து விடுகிறது.
இன்றுவரை கிடைத்துள்ள வரலாற்று ஆவணங்கள், கல்வியியல் ஆய்வுகள் மற்றும் அரசு பதிவுகள் அனைத்தும் ஒரே உண்மையை தெளிவாகக் கூறுகின்றன.
Illuminati என்பது 1776-ம் ஆண்டு Bavaria பகுதியில் Adam Weishaupt என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு குறுகிய கால அறிவுசார் மற்றும் சீர்திருத்த நோக்கமுடைய ரகசிய அமைப்பாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இன்று நாம் கேட்கும் பல மர்மக் கதைகள் மற்றும் சதிக் கோட்பாடுகளுக்கு அப்பால், Illuminati-யின் உண்மையான வரலாறு என்பது அறிவு, கல்வி, சுதந்திர சிந்தனை மற்றும் Enlightenment காலத்தின் தாக்கத்தை பிரதிபலிக்கும் ஒரு குறுகிய கால அறிவுசார் இயக்கத்தின் வரலாறாகவே பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
– சங்கீதா