பிளாட்டிபஸ் – உலகின் மிக ஆச்சரியமான பாலூட்டி!

நம்மில் பலர் சிறுவயதில் Phineas and Ferb கார்ட்டூனைப் பார்த்திருப்போம். அதில் வரும் ரகசிய ஏஜெண்டான Perry the Platypus என்ற கதாபாத்திரம் பலருக்கும் மிகவும் பிடித்தமானது.

ஆனால், தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், அந்த Perry ஒரு கற்பனை உயிரினம் அல்ல. உண்மையிலேயே Platypus என்ற பெயரில் ஒரு விலங்கு இந்த பூமியில் வாழ்கிறது.

வாத்தைப் போன்ற அலகு, நீர்நாயைப் போன்ற உடல், முட்டையிடும் தன்மை மற்றும் விஷ முள் போன்ற பல விசித்திர அம்சங்களைக் கொண்ட இந்த உயிரினம் உலகிலேயே மிகவும் ஆச்சரியமான பாலூட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் பிளாட்டிபஸ் (Ornithorhynchus anatinus) உலகிலேயே மிகவும் வித்தியாசமான பாலூட்டிகளில் ஒன்றாகும்.

இந்த உயிரினத்தை முதன்முதலில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் பார்த்தபோது, இது உண்மையான விலங்கா அல்லது பல விலங்குகளின் உடல் உறுப்புகளை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட போலி உயிரினமா என்ற சந்தேகம் கூட எழுந்ததாம்.

பிளாட்டிபஸ் மற்றும் எகிட்னா ஆகியவை மோனோட்ரீம் எனப்படும் முட்டையிடும் பாலூட்டிகளின் குழுவைச் சேர்ந்தவை.  

மற்ற பாலூட்டிகளைப் போல குட்டிகளைப் பெறாமல் இவை முட்டையிடுகின்றன.

இதனால் பிளாட்டிபஸ் உலகில் மிகவும் அரிதான பாலூட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த உயிரினம் ஆஸ்திரேலியாவின் ஆறுகள், ஓடைகள் மற்றும் நன்னீர் பகுதிகளில் வாழ்கிறது.

இதன் உடல் நீரில் வாழ ஏற்றவாறு அமைந்துள்ளது.

அடர்த்தியான நீர்ப்புகா ரோமங்கள் உடலை வெப்பமாக வைத்திருக்க உதவுகின்றன.

முன்புற வலைப்பாதங்களை பயன்படுத்தி நீந்தும் பிளாட்டிபஸ், நீருக்குள் செல்லும்போது கண்கள், காதுகள் மற்றும் மூக்குத்துளைகளை மூடிக்கொள்கிறது.

இதன் வாத்து போன்ற அலகு வெறும் தோற்றத்திற்காக மட்டுமல்ல. அந்த அலகில் இருக்கும் சிறப்பு உணர்வு செல்கள் மூலம் நீரில் உள்ள சிறிய மின்சார அலைகளை உணர முடியும்.

இதன் உதவியால் பூச்சி லார்வாக்கள், இறால்கள், புழுக்கள் மற்றும் பிற சிறிய நீர்வாழ் உயிரினங்களை கண்டுபிடித்து உணவாக உட்கொள்கிறது.

பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே உணவு தேடுகிறது.

ஆண் பிளாட்டிபஸ்களின் பின்னங்காலில் விஷ முள் காணப்படுகிறது. இந்த முள் மனிதர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தாது.

ஆனால், கடுமையான வலியையும் நீண்ட நாட்கள் நீடிக்கும் வீக்கத்தையும் உண்டாக்கக் கூடும் என சொல்லப்படுகிறது.

இதனால் பிளாட்டிபஸ் உலகில் விஷம் கொண்ட சில பாலூட்டிகளில் ஒன்றாகவும் திகழ்கிறது.

பிளாட்டிபஸ் ஒரு முட்டையிடும் பாலூட்டி என்பதும் இதன் மிகப்பெரிய சிறப்பாகும்.

பெண் பிளாட்டிபஸ் பொதுவாக ஒன்று முதல் மூன்று முட்டைகள் வரை இடும்.

முட்டைகள் உடைந்த பிறகு தாய் தனது உடலில் சுரக்கும் பாலை குட்டிகளுக்கு வழங்கி வளர்க்கிறது.

ஆனால், மற்ற பாலூட்டிகளைப் போல இதற்கு மார்பகக் காம்புகள் கிடையாது என்பது மேலும் ஆச்சரியமான விஷயம்.

சுமார் 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பிளாட்டிபஸின் முன்னோர்கள் வாழ்ந்ததாக புதைபடிவங்கள் தெரிவிக்கின்றன.

இன்று வாழும் பிளாட்டிபஸ் அதன் பழைய முன்னோர்களைவிட சிறியதாகவும், தனித்துவமான பரிணாம மாற்றங்களைப் பெற்றதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

தற்போது சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பான IUCN, பிளாட்டிபஸை “Near Threatened” என்ற பாதுகாப்பு நிலையில் பட்டியலிட்டுள்ளது.

நீர்நிலைகளின் மாசுபாடு, வாழிட அழிவு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் எதிர்காலத்தில் இவ்வினம் பாதிக்கப்படக்கூடும்.

வாத்தின் அலகு, முட்டையிடும் தன்மை, விஷ முள் மற்றும் மின்சாரத்தை உணரும் திறன் போன்ற பல விசித்திர அம்சங்களை ஒரே உடலில் கொண்டுள்ள பிளாட்டிபஸ், இயற்கையின் மிகவும் ஆச்சரியமூட்டும் உயிரினங்களில் ஒன்றாக இன்றும் விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 – சங்கீதா

#Platypus #PerryThePlatypus #Perry #OrnithorhynchusAnatinus #பிளாட்டிபஸ் #பெர்ரி #Mammal #பாலூட்டி #Monotreme #மோனோட்ரீம் #Echidna #எகிட்னா #Larva #லார்வா #Shrimp #இறால் #Worm #புழு #NearThreatened #IUCN #Wildlife #Nature #AnimalFacts #Biodiversity #Conservation #AustralianWildlife #UniqueAnimals #Science #Ecology #Faun

Comments (0)
Add Comment