பார் போற்றும் சாதனைக்குப் பாராட்டுகள்….!

தோட்டா தரணியை நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர்

பிரான்ஸ் அரசு, கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக செவாலியர் (Chevalier dans l’Ordre des ArtsetdesLettres) விருதை 1957-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்ட சிலர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.

ஓவியரான தோட்டா தரணி, தனது கலை இயக்கத்தின் மூலம் பல சாதனைகளையும் ஆச்சரியப்படுத்தும் செட் அமைப்புகளையும் செய்தவர். அவரது செட்கள், உண்மையை விடத் தத்ரூபமாக இருக்கும் என்ற அளவிற்குப் பல மொழிகளிலும் (தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி) கலை வடிவமைப்பை மேற்கொண்டு விருதுகளையும் வென்றிருக்கிறார்.

நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்ற மும்பை தாராவி பகுதி செட்.

காதலர் தினம் படத்தில் வரும் மும்பை நெட் செண்டர்.

இந்தியன் திரைப்படத்தின் சுதந்திரப் போராட்டக் காட்சிகள்.

ஜீன்ஸ் திரைப்படத்தின் சில அமெரிக்கக் காட்சிகள்.

சிவாஜி படத்தில் இடம்பெற்ற ‘வாஜி.. வாஜி..’ பாடல் செட்.

– உள்ளிட்ட பல காட்சிகள் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டவை.

தசாவதாரம், பொன்னியின் செல்வன், வரலாறு, சச்சின் போன்ற பல படங்களுக்கு இவர் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

மிகச்சிறந்த வடிவமைப்புத் திறனும் வரலாற்று அறிவும் உள்ளவர் என்பதால், பல இயக்குநர்கள் கதை மற்றும் உருவாக்க விவாதங்களிலும் தோட்டா தரணியிடம் ஆலோசனைகளைப் பெறுகின்றனர். இறுதியாக, அவர் ‘குபேரா’, ‘ஹரிஹர வீர மல்லு’, ‘காட்டி’ ஆகிய படங்களுக்குக் கலை வடிவமைப்பை மேற்கொண்டிருந்தார்

இந்நிலையில் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக, வரும் நவம்பர் 13-ம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெறும் விழாவில் இந்தச் செவாலியர் விருது வழங்கப்படவுள்ளது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்க இருக்கிறார்.

இந்த நிகழ்வோடு சேர்த்து, அதே வளாகத்தில் தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.

‘எனது சினிமா குறிப்புகளில் இருந்து’ என்ற தலைப்பிலான இந்தக் கண்காட்சியை இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் பார்வையிட்டுப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கண்காட்சி வரும் நவம்பர் 14-ம் தேதி வரை அங்கு நடைபெறும். கலைத்துறையில் தோட்டா தரணியின் இந்த உயரிய கவுரவம், தென்னிந்தியத் திரையுலகிற்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

இந்நிலையில், தோட்டா தரணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணிக்கு, பிரான்சு அரசின் உயரிய அங்கீகாரமான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.

அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது. பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment