மகளிர் உரிமைத் தொகை: ஆய்வு சொல்வது என்ன?

எழுத்தாளர் அழகிய பெரியவன் கருத்து

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பற்றிய சிறந்த கட்டுரை ஒன்றை ஆங்கில ஹிந்து நாளேடு (24.08.2025) அன்று Crediting care work: a T.N. story என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறது.

‘A Right to Care, A Right to Welfare: A Study of the Kalaignar Mahalir Urimai Thittam’ என்ற பொருண்மையில் லண்டனில் இருக்கும் கிங்ஸ் கல்லூரியின் டிக்கன்சன் பூன் ஸ்கூல் ஆப் லா, தமிழ்நாட்டில் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வின் தரவுகளை வைத்து எம்.மேக்னா அவர்கள் இந்து ஆங்கில நாளேட்டில் மேற்சொன்ன கட்டுரையை எழுதி இருக்கிறார்.

ஆயிரம் ரூபாய் என்பது குறைவே என்றாலும் அத்தொகை பெண்களின் சுயமரியாதையாகவும் தன்னம்பிக்கையாகவும் மாறியிருப்பதை ஆய்வறிக்கை வெளிப்படுத்துவதாக கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

இந்த ஆயிரம் ரூபாயை 49% பேர் வீட்டுச் செலவுகளுக்கும், 49% பேர் காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன் ஆகியவற்றை வாங்குவதற்கும், 22% பேர் மருத்துவ கட்டணத்துக்கும், 20% பேர் மருந்துகளுக்கும்,

20% பேர் சமையல் எரிவாயு வாங்குவதற்கும், 17% பருப்பு வகைகளை வாங்குவதற்கும் பயன்படுத்துகிறார்களாம். 9% பேர் சிறுகடன்களைத் தீர்க்கவும், 15% பேர் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கும் செலவழிக்கிறார்களாம்.

தன்னிறைவு உணர்வு, முக்கிய பணத்தேவைகளுக்கு கணவனை சார்ந்திருக்காமை, கடன் மற்றும் பணத்தேவை சுமைகளிலிருந்து விடுதலையுணர்வு, தன்னம்பிக்கை உணர்வு ஆகியவற்றை 96% மேற்பட்ட பெண்கள் ஆய்வின்போது வெளிப்படுத்தியதாக டிக்கன்சன் சட்டத்துறை ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இழிவுபடுத்தி விமர்சனம் செய்பவர்களுக்கு எப்போதும் இதுபோன்ற உண்மைகள் தேவைப்படுவதில்லை! கலைஞர் என்ற சொல்லே போதும் அவர்கள் எரிச்சல் அடைவதற்கு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமும், மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டமும் வரலாற்றில் இடம்பிடித்த திட்டங்கள் என்பதே உண்மை.

Comments (0)
Add Comment