நம்ம ஊர் பழனி மாதிரி கர்நாடகாவில் பக்தர்கள் அதிகமாகச் செல்லும் இடங்களில் ஒன்று, தர்மசாலா. கர்நாடகாவைக் கடந்து அங்கு பிற மாநில பக்தர்கள் செல்வது அதிகம்.
இந்த நிலையில் அங்கு பணியாற்றிய துப்புரவுப் பணியாளர் ஒருவர் பொதுவெளியில் தெரிவித்திருக்கும் சில சம்பவங்கள் பலரையும் கதிகலங்க வைத்திருக்கின்றன.
பல பெண்கள் உயிரிழந்த நிலையில் கொண்டுவரப்பட்டு, தான் அதை புதைக்க நேர்ந்த அவலத்தை அவர் தெரிவித்திருக்கிறார். இது கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள பக்தர்களை அதிர வைத்திருக்கிறது.
இப்படி ஒரு மோசமான சம்பவங்கள் தொடர்ந்து அங்கு நடப்பதற்கு கோவில் நிர்வாகம் எப்படி அனுமதித்தது?
எப்படி இவ்வளவு சம்பவங்கள் அடுத்தடுத்து கோவிலுக்கு அருகிலேயே நடப்பதை அங்குள்ள மாநில அரசு எப்படிக் கண்டுகொள்ளாமல் இருந்தது?
தற்போது தர்மசாலா தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் உயிர் பலி சம்பந்தமான எண்ணிக்கை பலரையும் தொடர்ந்து அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தங்களுடைய மன நிம்மதிக்காக கோவிலுக்குப் போகிற இடத்திலேயே இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்திருக்கிறது.
இந்த பக்தர்களின் பக்திக்கு கோவில் நிர்வாகமோ அல்லது கோவில் நிர்வாகத்தைச் சார்ந்த சிலரோ செய்திருக்கும் கொடுமையான நிகழ்வுகள், பக்தி மனம் கொண்டவர்களை மட்டுமல்ல மனிதர்களாக இருக்கிற அனைவரையும் அதிர வைத்திருக்கிறது.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப் போகின்றன?
முக்கியமாக, நீதிமன்றம் இதைப் பொருட்படுத்தி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
– யூகி