டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு முன்பும், டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டத்தின்போது, அதில் கலந்து கொண்ட இளைஞர்கள் மீதும், இளம்பெண்கள் மீதும் காவல்துறையினர் நடத்தியிருக்கும் தாக்குதல்களை சமூக வலைத்தளங்களின் வழியே பார்க்கும்போது பலரும் பதற வேண்டி இருக்கிறது.
வித்தியாசமான லத்திகளால் அந்த இளைஞர்களை கண்மூடித்தனமாக தாக்குகிறார்கள். இளம்பெண்கள் மீது கடுமையான வன்முறை பிரயோகிக்கப்படுகிறது.
அதில் கலந்து கொண்ட 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களோ, சிறுமிகளோ கூட அந்தத் தாக்குதலுக்கு தப்பவில்லை.
இதற்கு முந்திய நாள் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியே இரத்தம் சிந்த வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
இப்படிப்பட்ட போராட்டமும் அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசு மேற்கொண்டு வரும் கடுமையான வன்முறை நிகழ்வுகளும் நாடு முழுக்கப் பரவி, மாநில எல்லைகளைக் கடந்து இளைஞர்களை ஒன்று சேர வைத்திருக்கிறது.
இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது நாடாளுமன்றத்தின் உள்ளே விவாதங்கள் நடக்கின்றன. உள்ளே எதிர்கட்சிகள் இது குறித்து குரலையும் எழுப்பி இருக்கின்றனர். அவையை நடத்த விடாமல் ஒத்தி வைப்பதும் நடந்திருக்கிறது.
இத்தகைய போராட்டமும் தாக்குதலும் நடந்து கொண்டிருக்கும்போது, இந்தப் போராட்டத்தை நடத்துபவர்கள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கையான, மத்தியக் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகச் சொல்வதிலோ அல்லது பதவி மாற்றம் செய்வதிலோ அரசு ஏன் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது?
இதுவரை நீட் தேர்வில் நடந்த பல்வேறு விதமான தேர்வுத்தாள் கசிவுகளுக்கு யார்தான் பொறுப்பேற்பது?
அந்தக் கசிவைத் தடுப்பதற்காக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான் என்ன?
இப்படிப்பட்ட கேள்விகளெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இந்தப் போராட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை வீடியோ வழியாக காண்பிப்பதற்கு உச்சநீதிமன்றத்திற்கு சமூக உணர்வுள்ள சிலர் எடுத்துச் சென்றபோது, உச்சநீதிமன்றம் அளித்த பதில், “என்னுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள்”.
மக்கள் போராட்டத்தை காவல்துறை கடுமையாக ஒடுக்குகிறது. பலர் காயப்படுகிறார்கள். இருந்தும் தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
அரசும், நீதித்துறையுமே இந்தப் போராட்டத்தை கவனிக்கத் தவறினால், யார்தான் இந்தப் போராட்டத்தின் நோக்கத்தைப் பற்றி ஜனநாயக உணர்வுடனும், மனிதாபிமான உணர்வுடனும் பரிசீலிப்பார்கள்?
– லியோ