விண்வெளியில் இருந்து ஒரு கோரிக்கை!

அம்மாவிடம் வீட்டுச் சாப்பாடு வேண்டும் எனக் கேட்ட சுபான்ஷு சுக்லா

விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றுள்ள சுபான்ஷு சுக்லா, இந்திய நேரப்படி நாளை (ஜூலை – 15) மதியம் 3 மணிக்கு பூமிக்கு திரும்பவுள்ளார். சுக்லாவை வரவேற்பதற்காக அவரது குடும்பத்தினர் ஆவலுடன் தயாராகி வருகின்றனர்.

இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா, நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான பெக்கி விட்சன், போலந்து நாட்டைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஜ்நான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் அங்கேரி நாட்டைச் சேர்ந்த திபோர் கபு ஆகியோருடன் கடந்த 25-ம் தேதி விண்வெளிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

முதலில் 14 நாட்கள் மட்டுமே அவர் விண்வெளியில் இருப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு, அவர் பூமிக்கு திரும்புவது மேலும் ஒரு சில நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது.

அதன்படி அவர் இன்று (ஜூலை-14) மாலை 4.30 மணிக்கு சரவதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து புறப்படுகிறார். நாளை பூமிக்கு வந்து சேருகிறார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை ஒட்டியுள்ள பசுபிக் பெருங்கடல் பகுதியில் அவர்களின் விண்கலம் தரையிறங்குகிறது.

விண்வெளியில் விவசாயம் சார்ந்த ஆராய்ச்சிகளை செய்துவரும் சுக்லா, ஓய்வு நேரத்தில் அங்கு இருந்தபடியே தனது குடும்பத்தினருடன் பேசியிருக்கிறார்.

இதுபற்றிச் சொல்லும் அவரது அப்பா ஷம்பு தயாள் சுக்லா, “விண்வெளி ஆய்வ்சு மைத்தை எங்களுக்கு கேமரா மூலம் சுற்றிக்காட்டிய சுக்லா, தான் செய்யும் ஆய்வுப் பனிகளைப் பற்றி விளக்கினார்.

தான் பணி செய்யும் இடம், தூங்கும் இடம், ஆய்வுக்கூடம் ஆகியவற்றை எங்களுக்கு கேமரா மூலம் சுற்றிக்காட்டினார். விண்வெளியில் அவர் வேலை செய்யும் இடம் நன்றாக இருக்கிறது.

சுக்லாவின் ஆய்வுகள் நல்லபடியாக முடியும் என்று நம்புகிறேன். சுக்லாவுடன் பேசியதும், அவன் பாதுகாப்பாக இருக்கிறான் என்பதை தெரிந்துகொண்டதும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

சுபான்ஷு சுக்லா, இப்போதுதான் விண்வெளிக்கு சென்றார் என்றபோதிலும், அதற்கான பயிற்சிக்காக அவர் பல ஆண்டுகள் வெளிநாடுகளிலும், இந்தியாவில் உள்ள பயிற்சி மையங்களிலும் இருக்கவேண்டி இருந்துள்ளது.

அதனால் வீட்டில் அவரால் அதிக நேரம் செலவிட முடியவில்லை. இந்த சூழலில் சுக்லாவின் வருகையை எதிர்பார்த்து அவரது குடும்பம் ஆவலுடன் காத்திருக்கிறது.

சுபான்ஷு சுக்லாவின் அம்மா ஆஷா சுக்லா இதுபற்றி கூறும்போது, “விண்வெளியில் இருந்து இந்த உலகைப் பார்க்கும்போது, அது மிகவும் அழகாக இருந்ததாக கூறினான். அவன் திரும்பி வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

சுக்லா ஒரு உணவுப் பிரியன். ஆனால் பயிற்சிக்காக பல ஆண்டுகள் வீட்டில் இருந்து பிரிந்து இருப்பதால், வீட்டு உணவுகளை அவனால் சரியாக சாப்பிட முடியவில்லை. அதனால் இந்த முறை வீட்டுக்கு வந்ததும் தனக்குப் பிடித்த வீட்டு சாப்பட்டை செய்து தருமாறு கேட்டுள்ளான்.

சுக்லா வீட்டுக்கு திரும்பி வந்ததும், அவனுக்கு பிடித்த வீட்டு உணவுகளை சமைத்துக் கொடுக்கப் போகிறேன். சுக்லாவுக்காக நாங்கள் மட்டுமின்றி எங்கள் உறவினர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்” என்றார்.

விண்வெளியில் இருந்து நாளை திரும்பினாலும், சுக்லா சில நாட்கள் அமெரிக்காவிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார். அதன் பிறகே அவரால் இந்தியா திரும்ப முடியும்.

அதனால் இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் தொடக்கத்திலோ அவர் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– பி.எம்.சுதிர்

Comments (0)
Add Comment