தமிழகத்தில் தற்போது பயணம் செய்யும் எல்லோருமே தங்களைச் சுற்றி நிகழும் தட்பவெப்ப நிலையை இதற்கு முன் இல்லாத அளவுக்கு உணர வேண்டிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
காலையிலிருந்து மாலை வரை இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான வித்தியாசமான வெயிலின் உக்கிரத்தை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
அதன் பிறகு சில சமயங்களில் கூடுதலான மழையையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
இந்த இரண்டு மாறுபட்ட தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப நமது உடல் சட்டென்று ஏற்றுக்கொள்ளாத நிலையில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
உடலின் பொதுவான இயல்பு குறைந்து பல்வேறு சிரமங்களை இந்த தட்பவெப்ப நிலை மாற்றத்தினால் பலர் சிரமப்பட வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.
பசிபிக் பெருங்கடலில் உருவான எல் நினோ என்கின்ற ஒரு அதிகபட்ச தட்பவெப்ப மாற்றத்தின் விளைவாகத்தான் இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் மாற்றம் ஏற்பட்டு, அதன் விளைவாக, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வழக்கமாக நிகழும் தட்பவெப்ப சூழல் முழுக்க மாறிய நிலை தற்போது நீடித்துக் கொண்டிருக்கிறது.
இங்கு மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளில் இதைவிட அதிக அதிகபட்சமான வெப்பச்சூழல் உருவாகி ஆயிரக்கணக்கான பேர் அதனால் உயிரிழக்கும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது.
பல நாடுகள் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த தட்பவெப்ப நிலை மாற்றத்தால், அந்த நாடுகளில் வசிக்கும் சராசரி மக்கள் கூடுதலாகவே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்திலும் இதே நிலை தற்போது நீடித்துக் கொண்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, மாறிக்கொண்டே இருக்கும் தட்பவெப்பநிலை மாற்றத்தால் உடலில் கூடுதல் உஷ்ணம் அல்லது செரிமானக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இங்குள்ள மக்கள் எதிர்கொண்டு வருவதை மருத்துவமனையில் அதிகரித்திருக்கிறக் கூட்டம் புலப்படுத்துகிறது.
இத்தகைய உலகளாவிய அளவில் தட்பவெப்ப மாற்றம் உருவாகியிருக்கிறது என்றாலும், இதற்கான தீர்வாக நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் தற்போது நமக்கு முன் இருக்கிற கேள்வி.
கூடுதலான மரங்களை வளர்ப்பதும் அதிகப்படியாக சுற்றுச்சூழலை சேதப்படுத்தாத ஒரு சூழ்நிலையை உருவாக்குவதும்தான் இதற்கான குறைந்தபட்ச தீர்வாகச் சொல்கிறார்கள்.
ஆனால், அப்படிப்பட்ட நிலையில் நம்மைச் சுற்றியிருக்கிற இயற்கைச் சூழலை நாம் வைத்திருக்கிறோமா?
பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உட்பட இயற்கை வளத்தில் பெரும் சூரையாடலே நடந்து கொண்டிருக்கும்போது, சாதாரண, எளிய மக்கள் அதன் விளைவை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்பது தான் நிதர்சனமான பலரும் அனுபவிக்கும் உண்மை.
– லியோ