1990-களின் நடுப்பகுதியில், ஜப்பானின் அமாமி ஒசிமா (Amami Oshima) தீவைச் சுற்றியுள்ள கடலடியில் ஒரு விசித்திரமான காட்சி ஆராய்ச்சியாளர்களையும், ஸ்கூபா டைவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
சுமார் 10 முதல் 30 மீட்டர் ஆழத்தில், மணல் மீது 2 மீட்டர் விட்டமுள்ள அழகான வட்ட வடிவங்கள் தோன்றின.
அவற்றில் சூரியக் கதிர்களைப் போன்ற பள்ளங்களும், மிகத் துல்லியமான வடிவமைப்பும் இருந்தன.
இந்த “Mystery Circles” யாரால் உருவாக்கப்படுகின்றன என்பது பல ஆண்டுகள் புதிராகவே இருந்தது.
2011-ஆம் ஆண்டு, ஜப்பானிய நீருக்கடிப் புகைப்படக் கலைஞர் யோஜி ஒகடா (Yoji Okata) இந்த வட்டத்தை உருவாக்கும் உயிரினத்தை முதன்முறையாகப் பதிவு செய்தார்.
அதைத் தொடர்ந்து NHK (ஜப்பானின் தேசிய பொது ஒளிபரப்பு நிறுவனம்), உள்ளூர் ஸ்கூபா டைவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து சுமார் இரண்டு ஆண்டுகள் ஆய்வு நடத்தினர்.
இறுதியில், இந்தக் கலைப்படைப்பை உருவாக்கியது வெறும் 12 செ.மீ. நீளமுள்ள ஒரு புதிய வகை White-Spotted Pufferfish என்பது தெரியவந்தது.
2014-ஆம் ஆண்டு அந்த இனத்திற்கு Torquigener albomaculosus என்ற அறிவியல் பெயர் வழங்கப்பட்டது.
பின்னர், 2015-ஆம் ஆண்டு, உலகின் “Top 10 New Species” பட்டியலிலும் இந்த மீன் இடம்பெற்றது.
இந்த மீன் வகைகள் அழகான வட்டங்களை உருவாக்கும் இது பெண் மீன் முட்டையிடுவதற்காக ஆண் மீன் உருவாக்கும் Spawning Nest ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்க காலத்தில், ஆண் மீன் இந்த வேலையைத் தொடங்குகிறது.
சுமார் 7 நாட்கள் தொடர்ந்து உழைத்து, தன் உடலையும் துடுப்புகளையும் பயன்படுத்தி மணலை நகர்த்தி, பள்ளங்களையும் மேடுகளையும் உருவாக்குகிறது.
இந்த வட்டத்தில் பொதுவாக 24 முதல் 30 வரை கதிர்களைப் போன்ற பள்ளங்கள் இருக்கும் என கருதப்படுகிறது.
ஒவ்வொரு மீனின் வடிவமைப்பும் சிறிது மாறுபடும்.
இந்த வடிவம் பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்ல. அதன் பள்ளங்களும் மேடுகளும் கடல் நீரோட்டத்தை வட்டத்தின் நடுப்பகுதியை நோக்கி செலுத்துகின்றன.
இதனால் புதிய கடல் நீர் தொடர்ந்து முட்டைகளுக்குச் சென்று சேர்கிறது.
இது முட்டைகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கவும், அவை ஆரோக்கியமாக வளரவும் உதவுகிறது.
கூடு தயாரான பிறகு, ஆண் மீன் அதன் விளிம்புகளில் சிறிய சிப்பித் துண்டுகளைத் தேர்ந்தெடுத்து அலங்கரிப்பதோடு தேவையற்ற குப்பைகள் மற்றும் பொருட்களையும் அகற்றுகிறது.
இந்த அலங்காரம் பெண் மீனை ஈர்க்க உதவுகிறதா என்பது இன்னும் ஆராய்ச்சியில் உள்ளது.
இந்த நடத்தை பலமுறை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கூடு தயாரான பிறகு பெண் மீன் வந்து அதை ஆய்வு செய்கிறது.
பின்னர் ஆண் மீன் பெண் மீனின் கன்னத்தை மெதுவாக வாயால் லேசாகக் கவ்வும்.
இது முட்டையிடும் செயல்முறையைத் தூண்டும் இனப்பெருக்க நடத்தையாகக் கருதப்படுகிறது.
பெண் மீன் கூடு நடுவில் முட்டையிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறது.
ஆனால், ஆண் மீனின் வேலை அதோடு முடிவதில்லை.
சுமார் ஒரு வாரம் அந்த முட்டைகளைப் பாதுகாத்து, தன் துடுப்புகளால் புதிய கடல் நீரை அவற்றின் மீது செலுத்தி, குஞ்சுகள் வெளிவரும் வரை கவனித்துக் கொள்கிறது.
இந்த மீன் உருவாக்கும் வட்டங்கள் மிகவும் சமச்சீராக இருக்கும்.
ஆனால் இந்த மீன் ஒருபோதும் மேலே சென்று முழு வடிவத்தைப் பார்த்து வேலை செய்வதில்லை. கடலடியில் இருந்தபடியே இவ்வளவு துல்லியமான வடிவத்தை உருவாக்குகிறது.
எப்படி இந்த அளவுக்கு சரியான வடிவமைப்பை உருவாக்குகிறது என்பது இன்னும் ஆராய்ச்சியாளர்களுக்கு முழுமையாகப் புரியாத ஒரு புதிராகவே உள்ளது.
வெறும் 12 செ.மீ. நீளமுள்ள ஒரு மீன், ஒரு வார கால உழைப்பில் 2 மீட்டர் அகலமுள்ள ஒரு வடிவத்தை உருவாக்குகிறது. இது வெறும் கலை அல்ல இயற்கையின் படைப்புகள் வியக்கத்தக்கது என்பதற்கான சான்று.
சில நேரங்களில், இயற்கையின் மிகப் பெரிய கலைஞர்கள் நம் கண்களுக்கு எளிதில் தெரியாத சிறிய உயிரினங்களாகவே இருக்கிறார்கள்.
– சங்கீதா