என்று கலையும் இந்தப் போர் மேகம்?

அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமான போர் கடந்த சில மாதங்களாகவே நீடித்து வந்தாலும் கூட, தற்போது மீண்டும் போர் இன்னொரு திசைக்கு மாறியிருக்கிறது.

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு ஏவுகணைத் தாக்குதல்களை நிகழ்த்தியபோதும், ஈரான் அதை தொடர்ந்து எதிர்கொள்ளும் நிலையிலேயே இருக்கிறது.

தற்போது, அமெரிக்காவிலுள்ள கூகுள் உள்ளிட்ட பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களைக் குறிப்பிட்டு அங்கு தாக்குதல்களை நடத்தப்போவதாகவும் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது ஈரான்.

அதோடு, அமெரிக்க மக்களுக்கு ஈரான் சார்பில் ஒரு வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அதில், “அமெரிக்க மக்கள் மீது எங்களுக்கு சிறிதும் கோபம் இல்லை. அமெரிக்காவிலுள்ள அதிகார வர்க்கத்தை எதிர்த்தே நாங்கள் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.” என்கிற தன்னிலை விளக்கத்தையும் அளித்திருக்கிறது ஈரான்.

அதோடு, துபாய் போன்ற நாடுகள் மீது இதுவரை இல்லாத அளவுக்கு பலமான தாக்குதல் நடத்தப்படும்.

அதனால் அங்குள்ள மக்கள் அந்த நாட்டைவிட்டு  வெளியேறுங்கள் என்று சொல்கிற அளவுக்கு அச்சுறுத்தலான நிலை உருவாகி இருக்கிறது.

அந்த அச்சுறுத்தலுக்கு தகுந்த மாதிரி துபாயிலிருந்து அண்மைக் காலத்தில் பலர் விமானங்கள் மூலம் வேறு பகுதிகளுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். 

இந்த நிலையில் வடகொரிய அதிபரும் தற்போது ஈரானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, ஆயுதங்கள் அடங்கிய கப்பல் ஒன்றை அனுப்பப்போவதாகவும் அறிவித்திருப்பது, போரின் திசை மாறுவதை வெளிப்படுத்துகிறது.

ஏற்கனவே, ரஷ்யா ஈரானுடன் உதவிக்கரம் நீட்டும் விதத்தில் பேச்சுவார்த்தை நடத்திவரும்போது, வடகொரிய அதிபரின் பேச்சில் சர்வதேச அளவுக்கு போரின் திசையை விரிவுப்படுத்துகிற மாதிரி அமைந்திருக்கிறது.

ஏற்கனவே கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துவரும் நிலையில், இனி அதைவிட கூடுதலான அளவுக்கு கச்சா எண்ணெய்க்கான விலை அதிகரித்து பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இத்தகைய நிலை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கவே வழிவகுக்கும்.

அமெரிக்க அதிபரான ட்ரம்ப்பின் பல்வேறு புதிரான செயல்பாடுகள் போரை திரும்பவும் தீவிரப்படுத்தவே உதவிக் கொண்டிருக்கின்றன.

சர்வதேச அளவில் மேலும் மேலும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் இத்தகைய போர்ச்சூழலை யார் தடுத்த நிறுத்தப் போகிறார்கள்?

ஐநா சபை போன்ற அமைப்புகளோ இன்னும் சில அமைப்புகளோ தற்போதைய போர்ச் சூழலைத் தடுக்க தகுந்த முன்னெடுப்புகளை எடுத்திருக்கின்றனவா?

இறுதியாக ஒரு விஷயம்.

அமெரிக்க மக்களுக்கு ஜனநாயக முறையில் ஆட்சிச் செய்யத்தானே ட்ரம்பை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் அந்த மக்கள்? உலகையே கட்டியாளும் சர்வாதிகாரத்தை அமெரிக்க மக்கள் அவருக்கொன்றும் வழங்கிவிடவில்லையே?

இந்த நிலையில், ஏன் உலகளவில் தன்னுடைய சர்வாதிகாரத்தை விரிவுப்படுத்தி பல நாடுகளில் போர்ச் சூழலை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது அமெரிக்கா.

தாங்கள் தேர்ந்தெடுத்தத் தலைவரின் செயல்பாடு குறித்து அமெரிக்க மக்கள் தான் யோசிக்க வேண்டும்.

– லியோ

Comments (0)
Add Comment