ரஷ்யப் படைகள் கடும் சேதத்தைச் சந்திக்கும்!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர்.

அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன.

போர் ஓரிரு நாளில் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது உக்ரைன் மீது 8-வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. உக்ரைன் – ரஷ்யா மோதல் தீவிரம் அடைந்து வருவதால் உயிரை காப்பாற்றிக்கொள்ள உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் பெற்று வருகின்றனர்.

தலைநகர் கீவ் நகரத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் ஏறி ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்குச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எட்டாவது நாளாக போர் நீடிக்கும் நிலையில், 8 லட்சத்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உக்ரைனில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

நேற்று வரை 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் இந்த எண்ணிக்கை சுமார் 8 லட்சமாக அதிகரித்துள்ளது.

வரும் நாட்களில் மேலும் பலர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 9,000 ரஷ்ய வீரர்களைக் கொன்றதன் மூலம் ரஷ்ய படைகளுக்கு பாடம் புகட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

“போரை கைவிட்டுத் திரும்பவில்லை என்றால் ரஷ்ய படைகள் முற்றிலும் அழிக்கப்படும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments (0)
Add Comment