’மக்கள் நாயகன்‘ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட நடிகர் ராமராஜனுக்கும் முதலமைச்சர் நாற்காலி மீது ஒரு கண் இருந்தது என்பது வியப்பாக இருக்கலாம். ஆனால் அது உண்மை.
மதுரையில் மாலை தினசரியில் பணிபுரிந்தபோது எனக்கு அவருடன் அறிமுகமும், பின்னர் நெருக்கமும் ஏற்பட்டது.
அப்போது அவரது ’கரகாட்டக்காரன்’ சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்த நேரம். அங்குள்ள ஒரு திரையரங்கில் ஓர் ஆண்டை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது, ’கரகம்’.
‘நாடு அதை நாடு‘ படத்தின் பெரும்பாலான காட்சிகள் மதுரையில்தான் எடுக்கப்பட்டன. அதன் படப்பிடிப்பை பார்த்து பலமுறை செய்திகள் வெளியிட்டுள்ளேன். அவரது செய்தியாளர் சந்திப்புக்கு நான் போகாத பட்சத்தில், நான் ஏன் வரவில்லை? என்பது குறித்து, மற்ற நிருபர்களிடம் விசாரிக்கும் அளவுக்கு எங்கள் பழக்கம் இருந்தது.
அப்போது அவர் அதிமுக பேச்சாளராகவும் இருந்தார். கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த நேரம். ஒருமுறை முதலமைச்சர் பதவி குறித்த உரையாடலின்போது, “நானும் சி.எம்.ஆகணும்னு இருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது” என தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார், மக்கள் நாயகன்.
காரணம் இல்லாமல் இல்லை. அப்போது அவரது சினிமாக்கள் ரஜினி, கமல் படங்களுடன் போட்டிபோட்டு வசூல் குவித்துக் கொண்டிருந்தன. டி.ராஜேந்தர், கே.பாக்யராஜ் ஆகியோர் அரசியல் கட்சி ஆரம்பித்திருந்தனர்.
தீபாவளி பண்டிகையின்போது அவர் குறித்த சிறப்பு கட்டுரை ஒன்றை நான் வேலை பார்த்த மாலை இதழில் – கிட்டத்தட்ட ஒரு பக்க அளவுக்கு எழுதியிருந்தேன்
மேலூர் அருகே அவர் குடியிருந்த வீட்டுப் புகைப்படம், அவரது தந்தையின் பேட்டி, மேலூரில் ராமராஜன் ‘டிக்கெட்’ கிழிப்பவராக வேலை பார்த்த தியேட்டர் உரிமையாளரின் பேட்டி என அந்த கட்டுரை அவரது ஆரம்பகால வாழ்க்கையை நினைவு கூறும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தது.
தீபாவளிக்கு அவர் சென்னையில் இருந்தார். சில நாட்கள் கழித்து மதுரை வந்தபோது அந்த கட்டுரை குறித்து என்னிடம் மிகவும் சிலாகித்துப் பேசினார். ஒரு கட்டத்தில் அவரது படங்கள் தொடர் தோல்விகளை சந்திக்க நேர்ந்தன.
அதற்கு பிள்ளையார் சுழி போட்ட படமாக ‘ஊரு விட்டு ஊரு வந்து’ படம் அமைந்தது. இந்த தோல்விகளால் அவரது பல படங்கள் ’ரிலீஸ்’ ஆகாமல் கிடப்பில் போடப்பட்டன.
இந்த சறுக்கலில் இருந்து ராமராஜன் மீளாமல் இருந்த சமயத்தில் தான் நான், சென்னைக்கு ஜாகை மாறினேன். ரொம்ப நாட்களுக்கு பிறகு சினிமா மாத இதழ் ஒன்றுக்காக சாலிகிராமத்தில் உள்ள ராமராஜன் வீட்டில் அவரை பேட்டி எடுத்தேன்.
துயரங்கள் அவரை துரத்தின. மனைவி நளினி அவரை விட்டுப்பிரிந்தார். சொந்த வீட்டையும் விற்க நேர்ந்தது. உதயம் தியேட்டர் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அப்போது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். தனது நிலை குறித்து ராமராஜன் வாரஇதழ் ஒன்றில் கொட்டித்தீர்ந்திருந்தார்.
இந்தச் செய்தி ஜெயலலிதாவின் கவனத்துக்குச் சென்றது. ராமராஜனை உடனடியாக அழைத்து வருமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ராமராஜன் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன. அவரிடம் அப்போது போன் வசதியும் இல்லை.
அவரது வீட்டின் கீழ்த்தளத்தில் வசித்து வந்த நடிகர் சேது விநாயகத்தின் தொலைபேசி எண் கிடைத்தது. ’பாட்ஷா ‘படத்தில் யுவராணி படிக்கச் செல்லும் மருத்துவக்கல்லூரியின் உரிமையாளராக நடித்தவர் – சேது விநாயகம்.
அவரை அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். சேது விநாயகம், மேல் தளத்தில் இருந்த ராமராஜனை அழைத்து வந்தார். அவரிடம் அதிகாரிகள் பேசினர்,
“சி.எம். உங்களை சந்திக்க விரும்புகிறார். நாளை போயஸ் தோட்ட இல்லத்துக்கு வாருங்கள்” என சொன்னார்கள்.
மறுநாள் காலையில் மீண்டும் தமிழக அரசு அதிகாரிகளிடம் இருந்து சேது விநாயகத்துக்கு போன். ராமராஜனுக்கு கார் அனுப்ப வேண்டுமா? என கேட்டனர்.
ஆனால் காலையிலேயே ராமராஜன் ஆட்டோவில் போயஸ் தோட்டம் சென்று விட்ட தகவலை விநாயகம் சொன்னார்.
மேட்டுப்பாளையத்தில் ‘ராமராஜன் வாடகை வீட்டில் குடியேறியது முதல் அவர் முதலமைச்சரை பார்க்க ஆட்டோவில் சென்றது வரை‘யிலான தகவல் அனைத்தையும் என்னிடம் பகிர்ந்து கொண்டவர் சாட்ஜாத் சேது விநாயகம்தான். இது குறித்து அப்போதே சினிமா வார இதழில் எழுதியுள்ளேன்.
தன்னை சந்தித்த ராமராஜனுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பண உதவி செய்ததுடன், கட்சியின் முக்கிய பேச்சாளராகவும் ஆக்கி நிரந்தர வருமானத்துக்கு ஆவன செய்தது பத்திரிகைகளில் நான் படித்த செய்தி.
‘சாமான்யன்’ படத்தின் வெற்றிவிழாவுக்கு தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள தியேட்டருக்கு ராமராஜன் வந்ததும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட அந்தத் தியேட்டரின் உரிமையாளரான தவெக வேட்பாளருக்கு ராமராஜன் ஆதரவு திரட்டியதும் கூட நான் பத்திரிகையில் படித்த செய்திதான்.
இப்போது அவர் ஒரு படத்தில் அவர் நடித்துக்கொண்டிருப்பதாக தகவல்.
– பாப்பாங்குளம் பாரதி.
#ராமராஜன் #மக்கள்நாயகன் #ஜெயலலிதா #கரகாட்டக்காரன் #ராமராஜன்வாழ்க்கை #தமிழ்சினிமா #திரையுலகவரலாறு #அரசியல்வாழ்க்கை #Ramarajan #Jayalalithaa #Karagattakaran #TamilCinema #RamarajanStory #KollywoodHistory #PoliticalJourney #TamilFilmHistory #CinemaStories #MakkalNayagan