“சிறுவயதிலேயே எழுத்தாளன் ஆகவேண்டும் என்ற தீர்மானம் உங்களுக்கு இருந்ததா?”
எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம் பதில் :
“இல்லை. எழுதிப் புகழடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை. ஆனால், எழுதாமலும் என்னால் இருக்க முடியவில்லை.
ஆரம்பத்தில் குடும்பத்துக்கு பைசா மிகவும் தேவையாக இருந்தது. அதனால், அப்போது அதற்காக எழுதிக் கொண்டிருந்தேன். அப்புறம் காசின் மேல் ருசி விட்டுவிட்டது.
என்னுடைய சாதனை என்னவென்றால், நான் எழுதி எதுவுமே வீணாக ஆனதில்லை என்பதுதான். எல்லாம் பிரசுரமாகிவிட்டது.
யாராவது ஒருவர் நமக்கு குருவாக வேண்டும். தி.ஜ.ரங்கநாதன் தான் எனக்கு குரு.
”நீ எதை எழுதினாலும் போடுகிறேன்டா” என்று அவர் சொன்னார். உயிர் என்னுடைய எழுத்தில் இருந்தது என்று அவர் அடையாளம் கண்டுகொண்டு விட்டார்.
”நீ என்னைவிட நன்றாக எழுதுகிறேடா” என்பார்.
அப்படிச் சொல்கிறவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்தார்கள். இப்போது போட்டியும் பொறாமையும் எரிச்சலும் குரோதமும் மிகவும் அதிகமாகி விட்டன. யாரோடு யார் பொறாமைப்படுவது என்பதுகூட இல்லாமல் ஆகிவிட்டது.”
“சிறுவயதில் உங்களைச் சுற்றியிருந்த சூழலின் எந்தக் கூறுகள், ஒரு எழுத்தாளனாக நீங்கள் உருவாக காரணமாக இருந்திருக்கும் என்று இப்போது பிரித்துப் பார்க்க முடியுமா?”
லா.ச.ரா பதில்:
“நான் கிராமத்தில் வளர்ந்தேன். லால்குடியில் இல்லை; காஞ்சிபுரம் பக்கத்தில், என் அப்பா வேலை செய்த அய்யம்பேட்டை என்ற கிராமத்தில். அங்கு குயவர்களின் வீட்டோடு வீடாக எங்களுக்கு ஒரு வீடு கிடைத்தது.
இரண்டு ரூபாய் வாடகை. பெரிய முற்றம் அந்த வீட்டுக்கு இருந்தது. முற்றத்தின் ஒரு பக்கம் நீளமான சுவர்; அதனையொட்டி அடுப்பு; விறகுக் கட்டைதான். ஒரேயொரு அறை.
எத்தனையோ முறை பாம்பு வந்திருக்கிறது. நட்டுவாக்காலி வரும். ஏதோ கடிக்காமல் விட்டதால் நாங்கள் தப்பித்து விட்டோம்.
இடி இடிக்கும். உடனே, அம்மா அர்ச்சுனனின் நாமத்தைச் சொல்வாள். நான் அப்படியே அவளோடு ஒட்டி ஒடுங்கிக் கொண்டிருப்பேன். இது வீட்டின் சூழ்நிலை.
அப்போது, என்னைச் சுற்றி இருந்தவர்கள் கலங்கம் இல்லாதவர்கள்; நேர்மையானவர்கள்.
விடிகாலையில் பத்து மணிக்குத் தொடங்கி, இரவு பத்து மணி வரைக்கும் வேலை செய்துகொண்டே இருப்பார்கள்.
வாழ்வின் மொத்த தத்துவத்தையும் அங்கே பார்த்தேன். அவர்களிடம்தான் பிரியம் என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொண்டேன்.
அவர்களுடைய பாஷை மிகவும் காட்சி பூர்வமானதாக இருக்கும். அந்த மொழி என் எழுத்து மொழியை பெருமளவில் தீர்மானித்திருக்கிறது.
(‘குமுதம் ஜங்ஷன்’ பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட நேர்காணல்)
நன்றி: தளவாய் சுந்தரம் தளம்