’நான் கொஞ்சம் அசுத்த தமிழ்’!

ஜெயகாந்தனின் ‘ஜோக்’ !

‘ஆனந்தவிகடன்’ பொன்விழாவையொட்டி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு போட்டியில் எனக்கு 2000 ரூபாய் பரிசு கிடைத்தது. பொன்விழாவில் கலந்து கொள்ள நண்பர்களுடன் சென்னை சென்றேன்.

‘மியூசிக் அகாடமி’யில் தொடக்கவிழா. காலை நிகழ்ச்சிகள் முடிந்ததும், நாங்கள் தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட மண்டபத்துக்கு செல்வதற்காக வெளியே வந்தோம்.

அரங்க வாசலில் எழுத்தாளர் மாலன், ஸ்கூட்டரில் காத்திருந்தார். அவரும் நெல்லைக்காரர். நானும் நெல்லைக்காரன். என்னை அடையாளம் கண்டு கொண்டார். எனக்கு முன் அரங்கில் இருந்து வெளியேறியவர்களிடம் விசாரித்திருந்தார்.

அவரது மண்ணை சேர்ந்த நான் பரிசு வாங்கியதற்காக பாராட்டு தெரிவித்தார். பரஸ்பர அறிமுகங்கள் முடிந்தன. எனது நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தேன்.

‘’ஆசிரியர் சாவி , புதிதாக ‘சாவி’ என்ற வார இதழை தொடங்கி இருக்கிறார் – மேலும் சில இதழ்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார். ஒரு இதழுக்கு நான் ஆசிரியர் அதில் பணி புரிய உங்களுக்கு விருப்பமா? விருப்பம் இருந்தால் ஆபீசுக்கு வாருங்கள்”என்றார்.

அன்று மாலை மியூசிக் அகாடமியில் கலைஞர் கருணாநிதி தலைமையில் ’கவிதை அரங்கம்’ நடைபெற இருந்தது.

இதனால் பிற்பகலிலேயே மாலன் கொடுத்த முகவரியான அமைந்தகரை அருண் ஓட்டலுக்குச் சென்றோம். அங்குதான் ஆரம்பத்தில் ’சாவி’ இதழ் செயல்பட்டது.

அங்கு மாலன் இல்லை. எழுத்தாளர் சுஜாதா இருந்தார். அறிமுகம் செய்து கொண்டோம். தனக்கு எதிரே இருந்த நாற்காலிகளில் அமரச் சொன்னார்.

கதை எழுதுவது குறித்து அறிவுரை சொன்னார். ”சார் போஸ்ட்.. என கதையை ஆரம்பிக்கக்கூடாது – அது அரதப்பழசு” என சிரித்தார்.

அரை மணி நேரம் பேசிவிட்டு, விடை பெற்றோம். அதுவரை மாலன் வரவில்லை. இதனால் அவரை சந்திக்காமலேயே திரும்பி விட்டோம்.

அதன் பிறகு சுஜாதாவை பார்த்தது, நெல்லையில். ‘சாவி’ வார இதழ் ரசிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அவரும், சாவியும், ஓவியர் ஜெயராஜும் வந்திருந்தனர்.

விழா அரங்கில் திரளான கூட்டம். சுஜாதா எழுந்து ‘மைக்’கில் பேச ஆரம்பித்தார்.

அரங்கின் பின்புறம் அமர்ந்திருந்த ஒரு கும்பல் ரகளையில் ஈடுபட்டது. அவரால் பேச முடியவில்லை. சாவி பேச எழுந்தார். அவரையும் பேசவிடவில்லை. திட்டமிட்ட சதி வேலை என்று சாவி உணர்ந்து கொண்டார். விழாவை ரத்து செய்து விட்டு, சென்னைக்கு கிளம்பி விட்டனர்.

சாவியிடம் காட்டுவதற்கு நாங்கள் நடத்தி வந்த ‘கோலார்’ இதழையும் கொண்டு வந்திருந்தேன். ஆனால், காட்ட முடியவில்லை. இது குறித்து நான் வருத்தப்பட்டு எழுதியிருந்த கேள்விக்கு தனது பத்திரிகையில் சாவி இப்படி பதில் சொல்லி இருந்தார்.

‘கோலாரை பார்க்க முடியவில்லை.. நெல்லையில்தான் எல்லாமே கோளாராக முடிந்து விட்டதே’.

கேள்விகளுக்கு பதில் சொல்வதில் சாவிக்கு நிகர் சாவிதான்.

ஒரு வாசகர் சாவி வார இதழுக்கு ஒரு கேள்வி அனுப்பி இருந்தார்.

‘’உங்கள் பத்திரிகை ‘லாட்ஜில்’ நடக்கிறதாமே?” –இது கேள்வி.

சாவி அளித்திருந்த பதில்:

”லாட்ஜில் ஆபீஸ் நடக்கலாம் – ஆனால் ஆபீசில்தான் ‘லாட்ஜ்’ நடக்கக்கூடாது”.

ஜெயகாந்தனுடன் ஒரு சந்திப்பு ..

நான் சேலத்தில் உள்ள மாலை தினசரியில் பணியாற்றியபோது அந்த ஊருக்கு வந்த எழுத்தாளர் ஜெயகாந்தனை சந்திக்க நேர்ந்தது. அவர் சேலத்தில் பிரபலமாக இருந்த ஓட்டலில் தங்கி இருந்தார், அப்போது ஜெயகாந்தன் காங்கிரஸ் அனுதாபி. அவரை சந்திக்க நிறைய காங்கிரசார் வந்திருந்தனர்.

பேட்டிக்காக நானும் அவரது அறையில் இருந்தேன். முதலில் பரஸ்பர அறிமுகங்கள்.

“நீங்க எந்த மொழி” – இது ஜெயகாந்தன்.

ஆளாளுக்கு பதில் சொன்னார்கள்.

“நான் சுத்த தெலுங்கு”

”நான் சுத்த தமிழ்”

கேட்டுக்கொண்ட ஜெயகாந்தன் இப்படிச் சொன்னார்.

“நான் கொஞ்சம் அசுத்த தமிழ்”.

சென்னையின் சில பகுதிகளில் பேசும் தமிழைத்தான் ஜெயகாந்தன் இப்படி கிண்டலாகக் கூறினார்.

அர்த்தம் புரிந்ததும் அறை அதிர எல்லோரும் சிரித்தார்கள் .

– பாப்பாங்குளம் பாரதி.

#சாவி #எழுத்தாளர்சுஜாதா #ஜெயகாந்தன் #மாலன் #இலக்கியசந்திப்பு #தமிழ்எழுத்தாளர்கள் #சுவையானஅனுபவங்கள் #நகைச்சுவை #தமிழ்இலக்கியம் #AnandaVikatan #Sujatha #Jayakanthan #Saavi #Maalan #TamilWriters #LiteraryEncounters #TamilLiterature

 

Comments (0)
Add Comment