மதுரையை அதிர வைத்த விஜயகாந்த் திருமணம்!

1980-களின்  தொடக்கத்தில் விஜயகாந்த், பத்தோடு பதினொன்றாகவே இருந்தார். சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். இரண்டு ஹீரோ படங்களிலும்  நடித்துக் கொண்டிருந்தார்.

அப்படி ஒரு படம் – இது எங்க பூமி. அவரும், நிழல்கள் ரவியும் நாயகர்கள். ’ஒளிப்பதிவு  மேதை’ என அழைக்கப்பட்ட எம்.கர்ணன் இயக்கிய படம். தமிழில் ‘கௌபாய்’ படங்களை அறிமுகம் செய்தவர்.

ஜெய்சங்கரை வைத்து ஏராளமான சினிமாக்களை எடுத்தவர். சேலத்தில் ’கௌபாய்’ படங்களை எடுப்பதற்கான களங்கள் நிறைய உண்டு. இதனால், கர்ணனின் பெரும்பாலான படங்களின் ‘ஷுட்டிங்; அங்கு நடைபெறும்.

’இது எங்க பூமி’ படத்தின் படப்பிடிப்புக்கு விஜயகாந்த் சேலம் வந்தபோதுதான் எனக்கு அறிமுகம். அந்த படத்துக்காக விஜயகாந்தும், ரவியும் எதிரிகளுடன் மோதும் காட்சிகளை உயிரை பணயம் வைத்து படம் பிடித்தார், கர்ணன்.

இது தொடர்பான செய்திகள், போட்டோக்களை நான் வேலைபார்த்த மாலை தினசரியில் அடிக்கடி பிரசுரம் செய்தேன். இதனால் விஜயகாந்த் நெருக்கம் ஆனார்.

இந்தப்படம் குறித்த ஒரு முக்கிய செய்தியை இங்கே குறிப்பிட வேண்டும். முதலில் இந்த படத்துக்கு ‘விடுதலைப்புலிகள்’ என பெயர் வைத்திருந்தார், கர்ணன்.

விஜயகாந்தும், நிழல்கள்  ரவியும்  விடுதலைப்புலிகள்.. ஆனால், இலங்கை புலிகள் அல்ல. உள்ளூர் வில்லன் வினு சக்கரவர்த்தியை எதிர்த்து போராடும் புலிகள்.

படத்தில் அடிக்கடி ‘அந்த 2 விடுதலைப்புலிகளையும் ஒழித்துக்கட்டணும்’ என வசனம் உண்டு. புலிகள் பெயரை பயன்படுத்த எதிர்ப்பு இருக்கும் என்பதும், படத்தலைப்புக்கு அனுமதி கிடைக்காது என்பதும் கர்ணனுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

அதனால், ஒரு  மாற்று ஏற்பாடாக ‘அந்த  விடுதலை வீரர்களை ஒழித்துக்கட்டணம்’ என்று வினு சக்கரவர்த்தி பேசுவதுபோல் இன்னொரு  வசனக்காட்சியையும் எடுத்துக்கொள்வார்.

அவர் நினைத்தது போன்றே நடந்தது. இலங்கை அரசும், போராளிகளும் இந்த தலைப்புக்கு ஆட்சேபம் தெரிவித்ததால், இது எங்க பூமி’ என புது டைட்டில் வைக்கப்பட்டது.

இந்த படம் வெளியான சில ஆண்டுகளில்  விஜயகாந்த், ’இளம் இயக்குநர்கள்’ மணிவண்ணன், ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் கைகளுக்குச் சென்றார். அவர்கள் விஜயகாந்தை வேறொரு வடிவில் செதுக்கினர்.

நூறாவது  நாள், வைதேகி காத்திருந்தாள், ஊமை விழிகள், உழவன் மகன் ஆகிய படங்கள் அவரை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தின. ரஜினிகாந்துக்கு கதை உருவாக்கி வைத்திருந்த டைரக்டர்கள், அவரது கால்ஷீட் கிடைக்காததால், விஜயகாந்தை அணுகியது, உண்மை. அவை பிரமாத வெற்றி பெற்றதும் உண்மை. உதாரணம் – ஊமை விழிகள்.

மதுரையை கலக்கிய விஜயகாந்த்  திருமணம்..

சேலத்தில் இருந்து நான் மாற்றலாகி நெல்லை சென்று விட்டேன். பின்னர் மதுரைக்கு மாற்றப்பட்டேன். அங்கேதான் மீண்டும் விஜயகாந்தை சந்திக்க நேர்ந்தது. அதுவும் அவரது கல்யாணத்துக்கு முதல் நாள்.

அப்போது அவர் பாண்டியன் ஓட்டலில் தங்கி இருந்தார். இரவு 8 மணி வாக்கில் அங்கு சென்று அவரை சந்தித்து வாழ்த்துச் சொன்னேன்.

ஏழெட்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சந்தித்தாலும் அவர் மறந்துவிடவில்லை, நலம் விசாரித்தார். சின்ன உபசரிப்பு.

மறுநாள் விஜயகாந்த் திருமணம். மதுரையே குலுங்கியது.

அப்போது முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்தார். அவரது தலைமையில் காங்கிரஸ் தலைவர் மூப்பனார் முன்னிலையில்  விஜயகாந்த்  – பிரேமலதா திருமணம் நடைபெற்றது.

நிகழ்வை  எங்கள் தினசரிக்காக  நானும் பதிவு செய்தேன். நானும் என சொல்வதற்கு காரணம் உண்டு.

அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, கோடம்பாக்கமும் ஒட்டு மொத்தமாக திரண்டு வந்து வாழ்த்து மழை பொழிந்தது. என் ஒருவனால் அவர்கள் பேச்சுகளை பதிவு செய்ய முடியாது என்பதால், மேலும் சில எங்கள் நிருபர்கள் உடன் வந்திருந்தனர்.

கல்யாணம் முடிந்ததும் மணமக்கள், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் புடை சூழ மதுரையை வலம் வந்தனர். பிரமாண்ட ஊர்வலம், கருணாநிதி, மூப்பனார் ஆகிய தலைவர்களின் வாழ்த்துகள் அன்றைய தினம் மாலை இதழில் சுடச்சுட வெளியாக, அதன் பின் இரண்டு நாட்கள்  திரைப்படத்துறையினரின் புகழாரங்கள்.

‘விஜயகாந்த் ஒரு  கறுப்பு தங்கம்’ என பாரதிராஜா உணர்ச்சி வசப்பட்டு பேசியது இப்போதும் நிழலாடுகிறது.

திருமணத்துக்குப் பிறகு அவர் புதிய உச்சங்களைத் தொட்டார். மதுரைக்குப் பிறகு அவரை  சென்னையில் தான் சந்தித்தேன், சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் ஒரு முறை நேர்காணல் செய்துள்ளேன்.

கீழ்ப்பாக்கம் பகுதியில் – பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் அவரது ஷுட்டிங். என்னை பாரத்ததும் முக மலர்ச்சியுடன் வரவேற்றவர், இனிப்பு வழங்கினார்.

“என்ன விஷேசம்  சார்”

“எனக்கு இன்னைக்கு மகன் பிறந்திருக்கான்’ – விஜயகாந்த் முகத்தில் குழந்தையின் குதூகலத்தைப் பார்க்க நேர்ந்தது.

எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த்..

விஜயகாந்த் மனசுக்குள்  ரொம்ப நாட்களாகவே அரசியல் ஆசை வேர் விட்டிருந்தது. ஒரு சுப தினத்தில் மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தி தேமுதிக எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை எட்டிப்பிடித்தார். திமுக 3 –வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

கருணாநிதி-ஜெயலலிதா ஆகிய இரு ஆளுமைகளையும் ஒரே சமயத்தில் எதிர்த்ததால் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. விஜயகாந்த் கண் முன்னே தேமுதிக கட்சி துண்டானது.

தனித்துப் போட்டியிட்டு விருத்தாசலத்தில் ஜெயித்தவர். மக்கள் நலக்கூட்டணியில், சேர்ந்து 2016 தேர்தலில்  உளுந்தூர்பேட்டையில் டெபாசிட் இழந்தது, துரதிருஷ்டவசமானது.

– பாப்பாங்குளம் பாரதி.

#விஜயகாந்த் #கேப்டன்விஜயகாந்த் #விஜயகாந்த்வாழ்க்கை #தமிழ்சினிமா #தேமுதிக #பிரேமலதாவிஜயகாந்த் #Vijayakanth #CaptainVijayakanth #VijayakanthBiography #TamilCinema #DMDK #VijayakanthPoliticalJourney

 

Comments (0)
Add Comment