அந்தக் கால கருப்பு – வெள்ளை படங்களில் பெருமளவுக்கு பேசப்பட்ட கதாநாயகிகளில் ஒருவர் விஜயகுமாரி.
ஸ்ரீதர் போன்ற இயக்குநர்களின் முதல் படமான கல்யாண பரிசு போன்றவற்றிலும் நடித்திருக்கிற விஜயகுமாரி, போலீஸ்காரன் மகள், பச்சை விளக்கு என்று பல்வேறு திரைப்படங்களில் முன்னணிக் கதாநாயகியாக வலம் வந்தவர்.
அதைத் தொடர்ந்து இயக்குநர் மகேந்திரனின் மெட்டி போன்ற படங்களிலும் நடித்தவர்.
இப்படிப்பட்ட பரந்துபட்ட பின்னணி அனுபவம் உள்ள பழம்பெரும் நடிகையான விஜயகுமாரி தன்னுடைய திரையுலக அனுபவங்களை ஒரு பண்பலை வானொலியில் பகிர்ந்து கொண்டார்
அவற்றிலிருந்து சில அனுபவங்கள்:
“நான் கொங்கு மண்டலத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் பிறந்து திரை உலகிற்கு வந்தவள்.
ஆரம்பத்தில் திரையுலகில் நுழைந்து, பிறகு சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., ஜெமினி என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கிற அனுபவம் எனக்குக் கிடைத்தது.
அந்தக் காலத்தில் எனக்கு பல படங்களில், வசனகர்த்தா ஆரூர்தாஸ்தான் வசனத்தைச் சொல்லிக் கொடுப்பார்.
வசனங்களை உணர்ச்சிகரமாக சொல்லிக் கொடுக்கும்போதே பல சமயங்களில் அழுதிருக்கிறார். அப்படி உணர்ச்சிகரமாக சொல்லக் கூடியவராக இருந்தார்.
இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் அப்படித்தான்.
அவரும் பல படங்களில் நான் நடிப்பதற்கு முன்பே, நான் நடிக்க வேண்டிய காட்சியை எளிமையாக நடித்துக் காட்டி விடுவார்.
இப்படி பல்வேறு இயக்குநர்களின் படங்களில் நான் நடித்தபோது சில படங்களில் ஆவேஷமாகக் கத்தி நடிக்க வேண்டிய தேவையும் இருந்தது.
குறிப்பாக பூம்புகார் படத்தில் கண்ணகி வேடத்தில் நடித்தபோது சில சிரமங்களைச் சந்தித்தேன்.
அதற்கு கதை வசனம் எழுதியவர் கலைஞர். அந்தப் பட வாய்ப்பு கிடைத்தபோது அதற்கு முன்பே கண்ணகி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துப் பெரும் புகழ் பெற்ற நடிகையான கண்ணாம்பாவைச் சந்தித்து அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கிவிட்டு வந்தேன்.
பூம்புகார் படப்பிடிப்பு நடக்கும்போது அசைவ உணவு சாப்பிடாமல் இருந்தேன்.
அதன் இறுதிக் காட்சியில் உரத்தக் குரலில் வசனம் பேசும்போது எனக்கு தொண்டையில் பிரச்சனை ஏற்பட்டு ரத்தம் வரக்கூடிய அளவுக்கு போனது. மருத்துவர்கள் வந்து கவனிக்கக்கூடிய அளவுக்கு மோசமாகியது.
நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடன் பல்வேறு படங்களில் இணைந்து நடித்திருக்கிறேன்.
அவருக்கு தங்கையாகவும் ராஜராஜ சோழன் போன்ற படங்களில் மனைவியாகவும், இன்னொரு படத்தில் அவருக்கு அக்காவாகவும் நடித்திருக்கிறேன்.
ஒரு படத்தில் அவருடன் சேர்ந்து நடித்தபோது ஒரு தியேட்டர் வாசலில் எனக்குத் தனியாக என் முகத்தை மட்டும் பெரிதுபடுத்தி கட்-அவுட் வைத்திருந்தார்கள்.
அதைப் பார்த்த நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் என்னிடம் கேலியாக அது குறித்து குறிப்பிட்டதை மறந்துவிட முடியாது.
அப்போது, நான் எப்படித் தமிழை உள்வாங்கி இப்படிப் பேசி நடிக்கிறேன் என்று பலரும் கேட்கிறார்கள்.
நான் கொங்கு மண்டலத்தில் பிறந்து வளர்ந்தபோதே, இயல்பாக நான் பேசிப் பழகியதைத்தான் திரைப்படங்களிலும் உபயோகிக்கிறேன் என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார்.
எஸ்எஸ்ஆர் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) அவர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்தேன். அவருக்கும் எனக்கும் திருமணமாகி எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
எங்களுக்குத் திருமணம் நடைபெற்றபோது எஸ்.எஸ்.ஆரின் முதல் மனைவி திருமதி பங்கஜம் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார்.
அவருடைய சம்மதத்தோடுதான் எங்கள் திருமணம் நடந்தது. அவருடைய மூத்தத் தாரத்து மகன்களும் என்னை சின்னம்மா என்றுதான் எப்போதும் அழைப்பார்கள்.
அப்படி எஸ்.எஸ்.ஆருடன் நெருக்கமான ஒரு பிணைப்பு இருந்த நிலையில் தான், பிரிந்து வாழ வேண்டிய ஒரு சூழ்நிலையும் ஏற்பட்டது” என்று விவரித்துக் கொண்டிருந்தார் விஜயகுமாரி.
அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், விஜயகுமாரியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்.
எஸ்.எஸ்.ஆருடம் மிக நெருக்கமான வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும் நீங்கள் இருவரும் பிரிவதற்கு மூலக்காரணம் எது? என்று கேட்டபோது, அதற்கு பளிச்சென்று விஜயகுமாரி சொன்ன பதில், “கடவுளுக்குத் தான் தெரியும்”.
அப்போது திரைப்படங்களில் எனக்கு பலதரப்பட்ட வேடங்கள் கிடைத்தன. குறிப்பாக நானும் ஒரு பெண் படத்தில் கருப்பு நிறம் கொண்டவளாக நடித்திருப்பேன்.
அப்படி நடித்தபோது பலரும் என்னிடம், “ஏன் இத்தகைய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறீர்கள்” என்று கேட்டார்கள்.
அப்படிப்பட்ட விமர்சனங்கள் இருந்தபோதும் அதையும் மீறித்தான் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன்.
அதில்தான், ”கண்ணா கருமை நிறக் கண்ணா” பாடல் இடம் பெற்றிருந்தது. அந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அதோடு, எனக்கும் நல்லதொரு புகழைத் தேடித் தந்தது.
– லியோ