விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு ஆட்சியில் அமர்ந்து ஏறத்தாழ ஆறு மாத காலம் நிறைவடைய இருக்கிறது.
இந்த நிலையில் தவெக ஆட்சியைப் பற்றி பல்வேறு விதமான கடுமையான விமர்சனங்களும் இருக்கின்றன. அதே சமயத்தில் வெகுவான பாராட்டுக்களும் எழுந்திருக்கின்றன.
தவெகவின் ஆறு மாத கால ஆட்சியை எப்படி மதிப்பிடுவது அதன் நிறை குறைகள் என்ன?
தவெக அரசு கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து ஒரு வழியாக ஆட்சி அமைப்பதற்குள் பல்வேறு சிரமங்களை தவெக தலைவரான விஜய் சந்திக்க வேண்டி இருந்தது.
சில கூட்டணிக் கட்சிகளை நேரடியாகப் போய் சந்தித்து அவருடைய ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயம் இருந்தது.
இதற்குக் காரணம் விஜய்க்கு கிடைத்த 108 தொகுதிகள் என்ற கணக்கீடுதான்.
போதுமான அளவு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஒரு சூழல் ஏற்பட்டது.
அதையொட்டி காங்கிரஸ் மட்டுமல்ல, திமுக கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள், பொதுவுடமை இயக்கங்கள், ஐஎம்யூஎல் உள்ளிட்ட பல கட்சிகளை அவர் தேடிச் சென்று ஆதரவு கேட்டு அவர்களும் கொடுத்த ஆதரவின் கீழ் தான் விஜய் தலைமையிலான கூட்டணி அரசே அமைய முடிந்தது.
அத்தகைய கூட்டணி ஆட்சி அமைந்ததிலிருந்தே பல்வேறு விதமான தொந்தரவுகளை தவெக தலைமை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி அரசில் அங்கம் வைத்தாலும் இன்றுவரை அது விஜய் அரசின் மீது பட்டும் படாமலுமோ அல்லது நேரடியாகவோ விமர்சனத்தை செய்தபடிதான் இருக்கிறது.
பொதுவுடமைக் கட்சி இன்னொரு விதத்தில் அரசுக்கு ஆதரவளிக்கிற பொதுவுடமைக் கட்சிகள் தற்போது விஜய் அரசை கடுமையாக விமர்சிக்கக்கூடிய நிலையில் இருக்கின்றன.
நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அவர்கள் தனியாகவே வேட்பாளரை நிறுத்தி போட்டியிடும் சூழ்நிலை உருவானது.
இப்படி கூட்டணிக் கட்சிகளின் பிரச்சனை ஒரு பக்கம் இருக்கும் என்றாலும் எதிர்கட்சிகளின் தாக்குதல் இதுவரை எந்த கட்சிக்கும் இல்லாத அளவுக்கு தவெக அரசுக்கு எதிராக இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டி இருக்கிறது.
திமுக தலைவரான ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவந்த நிலையில், அவரே அறிவித்த ஆறு மாத கால இடைவெளியை திமுகவே கொடுக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
ஆட்சிப் பொறுப்பேற்ற மிகக் குறுகிய காலத்திலேயே மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை தவெக அரசுக்கு ஏற்பட்டது.
தமிழக சட்டமன்றத்திலும் இதே போக்கு பிரதிபலித்தது.
மிகக் கடுமையான விதத்தில் தவெக அரசை விமர்சித்துப் பேசினார் திமுக எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின்.
தனக்கு முன்பு மூன்று ஃபைல்கள் இருக்கின்றன, அவற்றைத் திறக்க வைத்து விடாதீர்கள் என்று முதல்வரான விஜய் சொன்னபோது, எதிர்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் மிகவும் வெளிப்படையாகவே,
“நீங்கள் அந்த ஃபைல்ஸை ஓபன் பண்ணுங்கள். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுங்கள்” என்று நேரடியாகவே பதிலளித்தார்.
உதயநிதி ஸ்டாலின் நோக்கி கையைத் தூக்கியபடியே வந்த திமுக தரப்பு எம்எல்ஏக்களையும் பார்க்க முடிந்தது.
அதே சமயம் பொதுவெளியிலும் திமுக இதுவரை எடப்பாடி ஆட்சியையோ, ஜெயலலிதா ஆட்சியையோ விமர்சித்ததைவிட மிகவும் கடுமையான கொச்சையான விமர்சனத்தை தொடர்ந்து சில எம்எல்ஏக்களும் முன்வைத்தார்கள்.
கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த உதயநிதி ஸ்டாலினும் வெளிப்படுத்தினார். பல்வேறு எம்.பி.க்களும் வெளிப்படுத்தினார்கள்.
இம்மாதிரியான கொச்சையான விமர்சனத்தை எதிர்கொள்வதற்கு சிரமப்பட வேண்டி இருந்தது.
பதிலுக்கு தவெக தரப்பிலும் சிலர் கடுமையாக பேசினாலும் கூட திமுக தரப்பில் பேசப்பட்டதே பொதுவெளியில் பரவலாக வைரலானது.
குறிப்பாக விஜய்யின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் அவரது திரைப்பட வாழ்வில் அவருக்கு நெருக்கமானவர்களைக் குறிப்பிட்டுப் பேசுவது என்பது மிக அதிக அளவில் இருந்ததைக் கடந்த ஆறு மாத காலத்தில் அடிக்கடி பார்க்க நேர்ந்தது.
இப்படிப்பட்ட எதிர்விமர்சனங்கள் தொலைக்காட்சி மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இதற்கு முன்பு வேறு எந்த ஆட்சியிலும் இந்த அளவுக்கு நிகழவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
எந்த எதிர்க்கட்சியும் விமர்சனம் செய்யாமல் இருக்க முடியாது. அப்படி விமர்சனம் செய்வதுதான் அதனுடைய இயல்பு என்பதை ஒப்புக்கொண்டாலும் கூட அத்தகைய விமர்சனத்தின் எல்லை குறிப்பிட்ட நெறிமுறையை மீறி வெளிப்பட்டதை எல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டது.
இது மட்டுமல்ல, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை சீர்குலைந்தது என்பது பற்றிய விமர்சனம் பரவலாகவே இருந்திருக்கிறது.
அதற்கேற்ப தமிழகத்தில் பல்வேறு குற்றங்கள் குறிப்பாக பாலியல் குற்றங்கள், சிறுமிகள் காணாமல் போவது, போதைப் பொருட்கள் வினியோகம் என்று பல்வேறு விதமான செயல்பாடுகள் இருந்தாலும்கூட அவற்றின் மீது ஒரு நுட்பமான பார்வையுடன் அவற்றைப் பொதுவெளிக்கு கொண்டு செல்வதை எதிர்க்கட்சிகள் படுதீவிரமாக செய்தன என்பதை தற்போது வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.
இது மட்டுமல்லாமல் தவெக அரசு எடுத்த சில நிலைப்பாடுகள் அவர்கள் எதிரானதாக மாறியிருக்கின்றன.
முதலில் தனது ஆலோசகராக ஒரு குறிப்பிட்ட ஜோதிடரை அரசு தரப்பில் நியமித்து ஆணை பிறப்பித்ததும் பின்னர் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்தை அடுத்து இந்த ஜோதிடர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதும் நடந்தது.
அதைப் போலவே சிலரது வலியுறுத்தல் காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறை தலைமைப் பொறுப்பில் அருண் போன்றவர்களை நியமித்து பிறகு கடும் சர்ச்சை உருவான பிறகு, அவர்களை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து காத்திருப்போர் பட்டியலில் சேர்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவானது.
அதைப் போலவே ஐஏஎஸ் அதிகரிகள் பலரும் மாற்றப்பட்ட போதும் சிலர் மாற்றப்படாமல் அதே நிலையில் வைக்கப்பட்ட போதும் அது குறித்த விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.
இதை எடுத்து சில முடிவுகள் அவசரமாக அறிவிக்கப்பட்டு பிறகு அதிலிருந்து பின்வாங்குவதும் நடந்திருக்கிறது.
சென்னையில் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கான ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டு பிறகு அதுகுறித்து விமர்சனத்திற்கு ஆளானதும் அது குறித்த அறிவிப்பிலிருந்து அரசு பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதை போலவே வேறு சில அறிவிப்புகளையும் அறிவித்து அதிலிருந்து பின்வாங்க வேண்டிய சூழ்நிலையும் அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு தற்போதைய விஜய் தலைமையிலான ஆட்சியில் அவருக்கு உறுதுணையா இருக்கிற அதிகாரிகளும் அவர்களது தவறான ஆலோசனைகளும் ஒரு காரணம்.
அதைப் போலவே தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிற சில அமைச்சர்களின் பேச்சுக்களே அவர்களுக்கு எதிரானதாக மாறி இருக்கிறது.
சட்டமன்றத்தில் நிதியமைச்சரான மரிய வில்சன் பேசியது சமூக வலைத்தளத்தில் அவருக்கு எதிரான பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.
அதை போலவே பொதுவெளியில் பல அமைச்சர்கள் ஊடகங்களிடம் பேசி அவ்வப்போது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார்கள்.
சில பெண் அமைச்சர்களின் பேச்சுக்கள் அவர்கள் குறித்த கடுமையான வார்த்தைகள் கூட சமூக வலைத்தளங்களில் பரவி அது விஜய் அமைச்சரவை மீதான குற்றச்சாட்டாகவே மாறி இருக்கிறது.
இவர்களை சரியாக கண்காணித்து அவர்கள் எல்லை மீறும்போது எச்சரித்து, தொடர்ந்து எல்லை மீறும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிற விஜய் அம்மாதிரியான நடவடிக்கையை எடுக்க ஏன் இதுவரை தயக்கம் காட்டி வருகிறார் என்பது பலரும் எழுப்பும் முதல் கேள்வியாக இருக்கிறது.
தற்போது திமுகவின் முன்னாள் அமைச்சரான அன்பில் மகேஷ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக நீதிமன்றம் உணர்ந்து முன்ஜாமீனை ரத்து செய்த நிலையில்தான் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதையடுத்து கே.என்.நேரு, எ.வ.வேலு, செந்தில் பாலாஜி என்று மிக நீண்ட ஒரு பட்டியலை திமுக அரசு தற்போதைய தவெக அரசின் கைவசம் இருக்கிறது.
இவர்கள் மீது வெளிப்படையான குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றமும் அதை உறுதிப்படுத்திய நிலையில் இன்னும் விரைவான நடவடிக்கை ஏன் தவெக அரசு மேற்கொள்ளவில்லை என்கிற விமர்சனமும் தற்போதுவரை நீடிக்கிறது.
சென்ற திமுக ஆட்சியில் அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததற்கு அவர்களுக்கிடையிலே ரகசியமான ஒரு தொடர்புகள் இருந்தன என்று சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது திமுகவையும் அதிமுகவையும் எதிர்ப்பதாகச் சொல்லும் தவெக அரசு இந்த இரு கட்சிகளின் முன்னாள் அமைச்சர்கள் மீதும் பதியப்பட்ட வழக்குகளை விரைந்து நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமா என்பதைத்தான் அவருக்கு வாக்களித்த பரந்துபட்ட வாக்காளர்கள் கருதுகிறார்கள்.
ஆனால், அத்தகைய ஒரு நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு அறிவுறுத்தலை அன்பில் மகேஷின் கைது உறுதிப்படுத்தினாலும் இனியும் தொடர்ந்து அன்பில் மகேஷைத் தொடர்ந்து பல்வேறு திமுக அமைச்சர்களின் வழக்குகளும்
பல அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வழக்குகளும் தூசி தட்டப்பட்டு அவர்கள் மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது தற்போதைய தவெக அரசுக்கு பெரிய அளவில் ஆதரவை தேடித் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
போலவே, சட்டம் ஒழுங்கு விஷயத்தில் தற்போது இருப்பதைவிட சற்றுக் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்புகள் தவெக அரசுக்கு இருக்கிறது.
ஏனென்றால், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்கிற காரணத்தைக் காட்டி உச்சநீதிமன்றத்திற்கு போய் ஆட்சியைக் கலைக்கும் அளவுக்கு போயிருக்கிறது எதிர்க்கட்சி.
விஜய் முன்பே சொல்லிய மாதிரி வாங்கி பழக்கப்பட்ட கைகள் தற்போதும் வாங்கும் துணிப்போடையே இன்னும் இயங்குவதை ஆங்கங்கே பார்க்க முடிகிறது.
இதில் தவெக கட்சிகளுடன் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளே ஈடுபட்டு அவர்கள் கைது செய்யப்படுவதும் நடந்திருக்கிறது.
இப்படிப்பட்ட சட்டம் ஒழுங்கை மீறிய ஒரு செயல்பாட்டில் தன்னுடைய சொந்த கட்சியினரே ஈடுபடுவது குறித்த கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டிய பொறுப்பும் முதல்வருக்கு இருக்கிறது.
இதற்கெல்லாம் மேலாக தமிழகத்தில் தற்போது பரவலாக இருக்கிற மின்வெட்டு குறித்த ஒரு திட்டவட்டமான செயல்பாட்டை வெற்றோட்டமான நடவடிக்கையை முதல்வரை எடுத்தாக வேண்டிருக்கிறது.
இதே விதமாக மின்வெட்டு குறித்து கவனக்குறைவாக திமுக ஆட்சி முன்பு இருந்ததால்தான் அப்போது திமுக ஆட்சி தோல்வியடைய வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது என்பதையும் தற்போதைய தவெக அரசு கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.
அதற்காக தொடர்ந்து மின்வெட்டு நிகழ்வதும் மின்சாரக் கொள்முதலுக்காக கூடுதல் கட்டணத்தை செலுத்த நேர்வதும் பொதுமக்களிடையே தவெக அரசுக்கு எதிரான ஒரு மனநிலையைத்தான் உருவாக்கும்.
இதெல்லாம் இருந்தாலும் கூட எவ்வளவோ நிறைவான விஷயங்களையும் தவெக அரசு செய்திருக்கிறது.
பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி இருக்கிறது.
மாதா மாதம் கொடுக்கக்கூடிய பெண்களுக்கான தொகையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
ஊழல் செய்தால் நடவடிக்கையை எடுப்பேன் என்கின்ற முதல்வரின் எச்சரிக்கை காரணமாக தவெக ஆட்சி அமைந்த பிறகு அரசு அலுவலங்களில் வெளிப்படையாக லஞ்சத்தை வாங்குவது கணிசமாகக் குறைந்திருக்கிறது.
சம்பந்தப்பட்ட அல்லது வாங்கிப் பழக்கப்பட்ட அதிகாரிகள் சற்றே தயங்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
இது மட்டுமல்லாமல் திமுக அரசு அலட்சியம் காட்டிய அல்லது திசை மாற்றிய ஜெம் வீரமணி போன்றவர்களின் வழக்கை தற்போதைய தவெக அரசு தூசி தட்டி மீண்டும் உயிர்ப்பித்து,
அவர் மீது நடவடிக்கை எடுத்து, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் சிறையில் அடைத்திருப்பது என்பதெல்லாம் வெகுவாகப் பாராட்டப்படுகிறது.
அதுபோலவே, மக்கள் சார்ந்த சில அறிவிப்புகள் பெருமளவில் முதல்வர் விஜய்க்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்திருக்கின்றன.
தவெக அரசு ஆறு மாத காலத்தை நிறைவுசெய்ய இருக்கும் நிலையில், வரும் சட்டமன்ற இடைத் தேர்தலில் தன்னுடைய பலத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை தவெகவுக்கு இருக்கிறது.
அப்படி தன்னைத் திடப்படுத்திக் கொண்டால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையோ அல்லது அவர்களது விமர்சனத்தையோ மீறி பல முடிவுகளை தவெக அரசால் எடுக்க முடியும்.
நிறைவாக முதல்வர் விஜய்க்கு வாக்களித்த பெரும்பான்மை மக்கள் ஒவ்வொரு நாளும் இந்த ஆட்சியின் செயல்பாட்டைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்கள் அந்த கண்காணிப்பின் திறத்திற்கு ஏற்ப அதை மதிப்பிட்டு வருகிறார்கள்.
இத்தகைய பொதுமக்களின் மதிப்பீட்டை தவெக அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு தன்னுடைய குறைகளை அல்லது தவறுகளை சரிசெய்து கொள்ள வேண்டும் என்பதையே இங்குள்ள வாக்காளர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.
தற்போது உலக அளவிலேயே பொருளாதார சீர்குலைவுகள் பெருமளவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பல நாடுகளில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கிறது. இதே நிலைதான் இந்தியாவுக்கும். இதை தமிழ்நாட்டிலும் தற்போது பார்க்க முடிகிறது.
அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உட்பட மக்களுக்கு தேவைப்படக்கூடிய அத்தியாவசியப் பொருட்களின் விலை கூடுதலாகவே ஏறி இருக்கிறது.
சில பொருளாதார நிபுணர்களும் தமிழகத்தில் நிலவும் கூடுதல் விலையேற்றத்தை கணக்கில் எடுத்து அதை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள்.
இப்படி மக்களுக்கு மிக அத்தியாவசியத் தேவையான பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதிலும் அரசு உரிய விதத்தில் கவனம் செலுத்தாவிட்டால் அதன் விளைவை ஒவ்வொரு வீட்டிலும் எதிர்பார்க்க முடியும் என்பதால் இதே நிலை நீடிப்பது தவெக அரசுக்கு நல்லதல்ல.
இதற்கு தேவையான ஒரு திட்டவட்டமான முடிவை தவெக அரசு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
#தவெக #TVK #விஜய் #Vijay #தவெகஆட்சி #TVKGovernment #ஆறுமாதஆட்சி #SixMonthsInPower #தமிழகஅரசியல் #TamilNaduPolitics #தமிழ்நாடு #TamilNadu #கூட்டணிஅரசு #CoalitionGovernment #அரசியல்விமர்சனம் #PoliticalAnalysis #திமுக #DMK #அதிமுக #AIADMK #உதயநிதிஸ்டாலின் #UdhayanidhiStalin #அன்பில்மகேஷ் #AnbilMahesh #சட்டம்ஒழுங்கு #LawAndOrder #மின்வெட்டு #PowerCut #விலைவாசிஉயர்வு #PriceRise #பெண்கள்இலவசபயணம் #FreeBusTravel #ஊழல்ஒழிப்பு #AntiCorruption