உங்கள் பேச்சின் எடை உங்களுக்குத் தெரிகிறதா?

எவ்வளவோ நாகரீகமான அரசியல் மேடைகளைப் பார்த்த நமக்கு அண்மைக் காலத்திய அரசியல் மேடைகளில் கொதிநிலையில் வெளியாகும் வன்மம் நிறைந்த பேச்சுக்களைப் பார்க்க சகிக்க முடியவில்லை.
 
தமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் ஆபாசப் பேச்சுக்கள் எப்போதும் ஒரு சிறு பகுதியாக இருந்து வந்திருக்கின்றன.
 
அதாவது, ஒரு தெருவின் ஓரத்தில் மெலிந்த சாக்கடை ஓடுவது மாதிரி, இந்த வசை பேச்சுக்களும் மேடை பேச்சின் ஒரு பகுதியாக இருந்திருக்கின்றன.
 
அதைப் பேசியவர்களாக பல்வேறு பேச்சாளர்கள் தேசிய, மாநிலக் கட்சிகளில் இருந்தே வந்திருக்கிறார்கள். அதற்கென்று கூடிய கூட்டம் அதைத் தேடிச் சென்று ரசிக்கிற நிலைதான் தொடர்ந்து இருந்து வந்தது.
 
ஆனால், இப்போது மூன்றாம் தர, நான்காம் தர பேச்சாளர்கள் பேசிய அதேவிதமான ஒரு ஆபாசமான பேச்சையோ மிக வன்மையான பேச்சையோ இப்போது பொதுவெளியிலேயே பல்வேறு அரசியல் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
 
உதாரணமாக, சென்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, தமிழக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, அன்றைய துணை முதல்வரான உதயநிதியைப் பற்றி பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
 
அந்தப் பேச்சில், பாலிடாயில் குடித்ததைப் பற்றி எல்லாம் நினைவுபடுத்தியவர்,
 
“இதெல்லாம் அப்பவே போய் சேர்ந்திருக்கணும்
இருந்துகிட்டு நம்ம உயிரை வாங்குது.”
 
– என்று பேசியிருந்தது, பலத்த சங்கடங்களுக்கு உள்ளானாலும் திமுக அதற்கு போதிய அளவுக்கு எதிர்வினை ஆற்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
 
அப்போது, விஜய் பரப்புரைக்கு விதிக்கப்பட்ட தடைகள் மாதிரி, இப்படிப் பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு விதிக்கப்படவில்லை.
 
இருந்த போதும் எடப்பாடியின் இம்மாதிரியான பேச்சு அவருடைய அரசியல் வாழ்வில் ஒரு கரும்புள்ளியைப் போலத்தான் இருந்து கொண்டிருக்கிறது.
 
தற்போது தவெக தலைமைப் பொறுப்பில் இருக்கும் முதல்வரான விஜய் பற்றி பல்வேறு விதமான கடுமையான விமர்சனங்களையும், கொச்சையான தாக்குதல்களையும் பலரும் மேற்கொண்டிருக்கிறார்கள்.
 
தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட இத்தகைய கடுமையான வசைகளை முன்வைத்திருக்கிறார்கள்.
 
தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, திமுகவின்  முன்னாள் அமைச்சரான அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டபோது அதைப் பலரும் பேசியது எல்லை மீறிய அளவில் இருந்தது.
 
இவ்வளவுக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் எந்த பைல்களையும் எடுங்கள், நாங்கள் அதை சந்திக்க தயாராகவே இருக்கிறோம் என்று சவால் விட்டவராக உதயநிதி ஸ்டாலின் இருந்தும் கூட அவருடைய அவர் சார்ந்த திமுக இளைஞர்களின் எதிர்வினை அதிர்ச்சி தரும் அளவில் இருந்திருக்கிறது.
 
அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட அன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு நள்ளிரவில் அவர் புழல் சிறைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு, அவர் சென்ற வாகனத்தை இடைமறித்த திமுக இளைஞர்கள் விஜய் குறித்து கடுமையான வசவை பொழிந்திருக்கிறார்கள்.
 
அதில் வேலூரைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன், “கரூரில் வச்சு அப்பவே முடிச்சிருக்கணும், முடிச்சிருந்தா இந்த நிலைமை இருந்திருக்காது” – என்று பேசியது தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.
 
கரூரில் ஏற்கனவே கொடுமையான சம்பவம் நிகழ்ந்து, அது பலதரப்பட்ட உயிர்கள் இழந்த நிலையில் சிபிஐ அதுகுறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகிறது.
 
இந்த நிலையில், கரூரில் வைத்து இப்படிச் செய்திருக்கலாம் என்கிற விதத்தில் அன்பில் மகேஷுக்கு நெருக்கமானவராக காட்டிக்கொண்ட கவுன்சிலர் சரவணன் தற்செயலாக பேசியிருந்தார். இதனால் அவர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்.
 
இந்த விசாரணையின்போது மேலும் பல பிரச்சனைகள் குறித்து விசாரிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
 
பொதுவெளி என்பது எவ்வளவு அநாகரிகமயமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கான பல தலைவர்களின் பேச்சுக்கள் இருந்து கொண்டிருக்கின்றன.
 
பட்டிமன்றத்தில் மிகவும் பாப்புலராக இருந்தவரும் ஒரு காலத்தில் பொதுவுடமைக் கட்சி சார்ந்த மேடைகளில் அதிகம் பேசியவருமான திண்டுக்கல் லியோனி, திமுக அணிக்கு மாறிய பிறகு அதுவும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவரிடம்தான் என்னென்ன மாற்றங்கள்.
 
தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டவர் ஆட்சி பரிபோன பிறகு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மேடையில் இருந்த நிலையில், ஸ்டாலின் கழற்றி போட்ட செருப்புதான் தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என்று பேசியதெல்லாம் அநாகரீகத்தின் உச்சம்.
 
இதற்கு சமூக வலைத்தளங்களில் பலத்த கண்டனங்களும் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
 
ஏன் இத்தகைய பேச்சுக்கள்? தமிழ்நாட்டில் ஏதோ அரசியல் தட்பவெப்ப நிலையே மாறிய மாதிரி இந்த அளவுக்கு ஆபாசமாகவும் வன்மமாகவும் உச்சம் பெற்றிருக்கின்றன என்பதை சரிவர பரிசீலனை செய்யாதவரை இத்தகைய ஆபாசமான, வன்மமான பேச்சுக்கள் நமக்கு மிக அருகில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும்.
 
– லியோ
Comments (0)
Add Comment