இலக்கைத் தவற விட்டிருக்கிறதா பல கட்சிகள்!

முன்பெல்லாம், மகாபாரதக் கதைகள் சொல்லப்படும்போது, போர்க் களக் காட்சிகளில் கையில் ஆயுதங்களின்றி நிராயுத பாணிகளாக நிற்பவர்களை பற்றின கதையெல்லாம் கேட்டிருக்கிறோம்.

சென்ற சட்டமன்றத் தேர்தல் முடிந்தபிறகு அதேமாதிரி தாங்கள் அதுவரை கைகளில் வைத்திருந்த ஆயுதங்களை கீழே போட்ட மாதிரியும் அதுவரையில், தங்கள் இலக்காக எதைச் சொல்லிக் கொண்டிருந்தார்களோ, அவற்றை விட்டுவிட்ட நிலையில் நின்று கொண்டிருக்கின்றன தமிழகத்திலுள்ள பல கட்சிகள்.

2026-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் இந்த மாற்றங்கள் நடந்தேறியிருக்கின்றன. 

கி.மு, கி.பி என்று சொல்கிற மாதிரி தே.மு., தே.பி. என்று சொல்கிற அளவுக்கு அரசியல் சூழல் மாறியிருக்கிறது.

திமுகவை எடுத்துக்கொண்டால் தேர்தலுக்கு முந்தைய பரப்புரையின்போது தங்களுக்கும் டெல்லிக்கும் இடையில்தான் போட்டி என்று அடிக்கடி சொல்லி வந்தார்கள்.

அப்போது, ஏற்கனவே தான் பேசிய சனாதனப் பேச்சை மீண்டும் ஒருமுறை பேசி, பரப்புரையைச் சலசலப்பாக்கினார் உதயநிதி ஸ்டாலின்.

ஆனால், அதேவேளையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு விக்கிரவாண்டியில் நடந்த தவெகவின் முதல் கூட்டத்திலேயே, “திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே கள்ளக் கூட்டணி இருக்கிறது” என்பதை அழுத்தமான குரலில், தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தார் தவெக தலைவரான விஜய்.

விஜய் இப்படிச் சொன்னாலும், திமுக, அதிமுகவையோ அதே தேர்தல் களத்தில் தனக்கு எதிராக நின்று கொண்டிருந்த தவெகவையோ, தனது எதிரிகளாக அறிவித்து பரப்புரை செய்யவில்லை.

தெற்கே தனக்கு முன்னால் உள்ள எதிரிகளைக் கவனிக்கத் தவறிவிட்டு வடதிசையில் உள்ள பாஜகவை எதிரியாக உருவகப்படுத்தியே திமுகவின் பரப்புரை இருந்தது.

ஆனால், ஓரளவுக்கு மேல் அதே பாஜகவை அவர்கள் கடுமையாக விமர்சிக்கவில்லை.

தொகுதி மறுவரை விசயத்தில், எதிர்க்குரல் கொடுத்த திமுக, தேர்தல் சீர்திருத்தப்பணி நடந்து தமிழகம் முழுக்க 90 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது, அப்போது தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருந்த திமுக எதிர்க்குரல் கொடுக்கவில்லை.

கீதா உபதேச பாணியில் “எல்லாம் நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது” என்கிறபடி தான் அன்றைக்கு ஆட்சிப் பொறுப்பிலிருந்த மு.க.ஸ்டாலினும் சேகர்பாபு போன்ற அமைச்சர்களுகம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

தப்பித்தவறிக் கூட வாக்காளர் மறுசீரமைப்பு குறித்து, சிறு அதிருப்தியைக் கூட அவர்கள் வெளிப்படுத்திவில்லை.

ஆனால், தேர்தல் நடந்து நான்கு-ஐந்து மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் கரப்பான் பூச்சி இயக்கத்தினர்கள் குரல் கொடுத்துப் பெரும் போராட்டத்தை நடத்திய பிறகே திமுகவிற்கு மிகவும் காலதாமதமாக சில விசயங்களை உணர்ந்ததாகச் சொல்லி, கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் சதி வேலைகள் நடந்திருப்பதாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

அண்மைக் காலத்திய இரு தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, தான் தவெகவை எதிரியாக நினைக்காததை குறித்தும் விஜய்யை அன்று அலட்சியப்படுத்தியது குறித்தும் வழக்கம்போல் காலதாமதமாக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

ஆக, இதுவரை உயர்த்திப்பிடித்த பாஜக எதிரி என்கின்ற இலக்கிலிருந்து சற்றே மாறியிருக்கிறது, திமுக.

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி அதிமுகவை எதிரப்பதா, ஆதரிப்பதா என்பதிலும் குழம்பி இப்போதைக்கு தவெக எதிர்ப்பது என்கிற முடிவுக்கு தற்போதைக்கு வந்து சேர்ந்திருக்கிறது திமுக.

அதிமுகவை பொறுத்தவரை அவரது கட்சித்தலைவியான ஜெயலலிதா முன்பு ஒருமுறை சொன்னமாதிரி, செலக்டிவ் அம்னீசியா எடப்பாடி பழனிசாமிக்கு வந்துவிட்டமாதிரி தெரிகிறது.

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில், அதற்கு முன்பு ஆட்சி செய்த எந்த அதிமுக அமைச்சர்கள் மீதும் பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனால், அதுவரை தீய சக்தியாக சொல்லப்பட்டு வந்த திமுகவை தீயசக்தியாக பார்க்காத மனநிலைக்குப் போனார் எடப்பாடி பழனிசாமி.

அவ்வப்போது தேர்தல் பரப்புரையின்போது, பாலிடாயில் பற்றியெல்லாம் நினைவுபடுத்தி யாரை எதிர்ப்பது என்பதை தெரியாத பார்வையுடன் தான் அதிமுக இருந்தது.

தவெகவையும் அவர்கள் கடுமையாக எதிர்க்கவில்லை. தற்போது, தேர்தல் முடிந்து சில மாதங்களுக்குப் பிறகே, தவெக எதிர்ப்பது என்கின்ற நிலைக்கு இறங்கியிருக்கிறது அதிமுக.

அதனுடைய பழைய, நீண்டகால இலக்கான திமுக தீய சக்தி என்கிற ஆயுதத்தை தவெக பறித்துக் கொண்டு போன மாதிரி ஆகிவிட்டது.

அந்தவிதத்தில் நிராயுதபாணியைப் போல களத்தில் நிற்கிறவர் எடப்பாடி பழனிசாமிதான்.

சென்ற சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து களம் கண்ட காங்கிரஸ், தேர்தல் முடிந்தவுடனேயே, தன்னுடைய இலக்கை மாற்றிக் கொண்டு தவெகவுடன் கைகோர்த்து, புதுக் கூட்டணியில் நீடித்துக் கொண்டிருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதேமாதிரியே தேர்தலுக்கு முன்பு வகித்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தற்போது, தவெக அமைச்சரவையில் இடம்பெற்றாலும், இன்னும் குழப்ப திசையிலிருந்து மாறாமல் இருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகளோ தேர்தலுக்குப் பிறகு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து, கூட்டணியிலிருந்தே விமர்சிப்பது, இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது,

இப்போது திமுக பக்கம் மறுபடியும் போவதா அல்லது தவெக கூட்டணியிலேயே சத்தத்தைக் குறைத்து நிற்பதா அல்லது தனித்து நின்று 2000-க்கு உட்பட்ட வாக்குகளை வாங்கிப் பூரித்துப் போவதா என்கிற மாபெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

அவர்களுடைய பொலிட்பீரோ தான் இந்தக் குழப்ப திசையை மாற்ற வேண்டும்.

சென்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக தேர்தல் முடிவுக்குப் பிறகு பல்வேறு திசையிலும் நேசக்கரம் நீட்டி, இடைத்தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து நடுநிலைமை வகித்து, ஊடகங்கள் பல்வேறு யூகங்கள் வருவதற்கு காரணமாக இருந்து  கொண்டிருக்கின்றன.

இறுதியாக, தவெகவிற்கு வருவோம்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, தவெகவின் முதல் கூட்டத்திலேயே, திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் அறிவித்த விஜய், தொடர்ந்து திமுகவை தீய சக்தி என்று அறிவித்து, பரப்புரை செய்துவந்தாரே தவிர, கொள்கை எதிரியாக தான் அறிவித்த பாஜக மீது கடும் விமர்சனங்களை முன்வைக்கவில்லை.

அதே சமயம், தேர்தல் களத்திலிருந்த அதிமுகவையும் பொருட்படுத்தாமல், “மற்றும் பலர்” என்கின்ற சொல்லாடலின் மூலம், அதிமுக தலைமைப் பொறுப்பிலிருந்த எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசியவர் எடப்பாடி தலைமையிலான ஆட்சியைக் குறித்து பெயர் குறிப்பிடாமல்தான் பேசிவந்தார்.

அதிமுகவையும் தொண்டர்களையும் அதிமுகவின் நிர்வாகிகளையும் அரவணைப்பதில் அக்கறை காட்டிய விஜய், அதிமுகவின் தலைமைப் புள்ளியாக இருந்த எடப்பாடி பழனிசாமியை கண்டுகொள்ளவே இல்லை.

அதேசமயம், அதிமுகவின் தலைவர்களான எம்.ஜி.ஆர். என்கிற பெயரையும் ஜெயலலிதா என்கிற பெயரையும் தனது கையிலெடுத்துக்கிறார் விஜய்.

தற்போதைய அதிமுக மறந்து, கீழே போட்டிருக்கிற திமுக தீய சக்தி என்கிற ஆயுதத்தை விஜய் கையிலெடுத்து, தனது பரப்புரையின்போது அதை கூர்மையாக்கி இருக்கிறார்.

தன்னை மற்றொரு எம்.ஜி.ஆரின் வடிவமாக பிறர் உருவகப்படுத்துவதை, விரும்பி அமைதியாக வேடிக்கைப் பார்க்கிறார்.

அதிமுக தொண்டர்களுக்கு தொடர்ந்து வலை விரிப்பது தவெக தரப்பில் நடந்து கொண்டிருக்கிறது.

அதேசமயம், தான் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு தனது கொள்கை எதிரியாக வர்ணித்த பாஜகவுடன் நிர்வாக ரீதியான நல்லுறவையே மேற்கொண்டிருக்கிறார் விஜய்.

தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்து, சமீபத்திய பிரதமரின் சென்னை வருகையின்போது, அவருக்கு முன்பே தமிழகத்தின் கோரிக்கைகளை வெளிப்படையாக முன் வைத்ததும் பெரும்பாலானோரால் கவனிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு நின்றுவிடாமல், ராகுல்காந்தியுடன் உணவருந்திவிட்டு, நெருக்கம் பாராட்டியதோடு இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்க தனது அமைச்சர்களையும் அனுப்பி வைத்ததன் மூலம் திமுக எந்த திசையில் பயணிக்கும் என்பதில் ஒருவிதக் குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறார்.

அதோடு ஆந்திராவிற்குச் சென்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்து கிருஷ்ணா நதிநீர் பற்றிப் பேசுகிறார்.

லண்டனுக்குச் சென்றுவிட்டு வந்து தமிழ்நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடை ஈர்த்து வந்தது பற்றிப் பேசுகிறார்.

இப்படிப் பலர், தங்களுடைய இலக்குகளைத் தவறவிட்ட நிலையிலோ அல்லது திசை மாற்றிய நிலையிலோ இரண்டரை வயதே ஆன தவெக தனது இலக்கு குறித்த முடிவில், குறைந்தபட்ச குழப்பத்தோடு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

நிறைவாக ஒன்றைச் சொல்லி முடிக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு திமுகவை சகட்ட மேனிக்கு விலாசி, சண்டாளன் கருணாநிதி என்றெல்லாம் கரகரத்த குரலில், பாடலைப் பாடிக் காட்டிய நாம் தமிழர் கட்சித் தலைவரான சீமான் தற்போது அதே திமுகவை ஆதரித்துப் பேசும் மேலான மனநிலையை அடைந்திருக்கிறார்.

தேர்தலுக்குப் பிறகு எந்தெந்த கட்சிகளின் இலக்குகள் மாறியிருக்கின்றன என்பதை இதை வாசிக்க நேரும் நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

– யூகி

Comments (0)
Add Comment