விஜய்யைப் பின்தொடர்கிறார்களாக தனுஷும் எஸ்.கே.வும்?

விஜய்யைத் தொடர்ந்து தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் அரசியல் களத்தில் இறங்குகிறார்களா?
 
“உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்” என்ற பிரபலமான திரைப்படப் பாடல் வரியை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் பாடி நடித்தபோது அதற்கு பரவலான ஆதரவு இருந்தது.
 
காரணம் பல்வேறு விதத்தில் பெரும் போராட்டங்களில் வெவ்வேறு அரசியல் களத்தில் சந்தித்த பிறகுதான் திமுகவில் சேர்ந்து முக்கியப் பொறுப்பேற்றார்.
 
அதன் பிறகு, அதை விட்டு விலகி அதிமுக என்கின்ற மாபெரும் இயக்கத்தைத் துவக்கினார்.
 
அடுத்து ஐந்து வருடங்களுக்குள் ஆட்சிப் பொறுப்பிலும் அமர்ந்தார்.
 
ஆனால், இந்த வெற்றியை எம்.ஜி.ஆர். சற்றென்று அடைந்துவிடவில்லை. அதற்கு அவர் பல்வேறு போராட்ட நிலைகளைச் சந்தித்த பிறகே இந்த பொறுப்புக்கு வந்திருக்கிறார் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
 
இதே சினிமாவில் உச்சியில் இருந்த பல நடிகர்கள் அரசியல் விருப்பத்தோடு களத்தில் இறங்கி பலர் பின்வாங்கி இருப்பதையும் மக்கள் ஆதரவில்லாத நிலையை அடைந்திருப்பதையும் பார்க்க வேண்டும்.
 
இந்த நிலையில்தான், விஜய் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்காளக்கி பல ஆண்டுகள் தொடர்ந்து இயங்கிய பிறகே, அவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதை அரசியல் இயக்கமாக மாற்றி, அதன்பிறகு இரண்டரை ஆண்டுகளுக்குள் ஆட்சிப் பொறுப்புக்கும் வந்திருக்கிறார்.
 
ஆக, விஜயும் சட்டென்று இந்த முதல்வர் பதவியை அடைந்துவிடவில்லை. தொடர்ந்து அவருடைய பல்வேறு இயக்கச் செயல்பாடுகள் பின்னணியில் இருந்திருக்கின்றன.
 
ஆனால், விஜய் தவெகவை ஆரம்பித்து அதை மிகக் குறுகிய காலத்தில் ஆட்சிப் பொறுப்பிலும் அமர்த்திய விதம், தமிழகத்தில் உள்ள ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமான பல நடிகர்களை உசுப்பி விட்டிருக்கிறது.
 
சூர்யா உள்ளிட்டவர்கள் தங்களது இயக்கச் செயல்பாடுகளை வைத்து தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தாலும், அவர் மிகத் தெளிவாக தான் அரசியலுக்கு வர விருப்பமில்லை என்பதைத் தெரிவித்திருக்கிறார்.
 
அதற்கடுத்து, அண்மையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னையில் வரவழைத்து பெருங்கூட்டத்தைக் கூட்டிய நடிகர் சிவகார்த்திகேயனின் பேச்சில் அரசியலில் நுழைவதற்கான விருப்பம் தெரிந்திருப்பதை யாரும் எளிதில் உணரமுடியும்.
 
அதே மாதிரிதான், பலமுறை தேசிய விருது வாங்கிய நடிகரான தனுஷும் தன்னுடைய ரசிகர் மன்றத்தைக் கூட்டி கலந்து ஆலோசித்திருக்கிறார். இனியும் கலந்து ஆலோசிக்கும் முடிவில் இருக்கிறார்.
 
இதைத் தொடர்ந்து தனுஷ் குறிப்பிட்ட ஒரு கட்சியில் சேர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவருக்கு கட்சியில் மிக முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகளில் கசிந்து கொண்டிருக்கின்றன.
 
ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதே நடிகர் அஜித்தை அதிமுகவில் இணைப்பதற்கான ஒரு பேச்சுவார்த்தை நடந்தபோது அதை நாசுக்காக மறுத்திருக்கிறார் அஜித்.
 
அஜித்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாலும், ரசிகர் மன்றம் என்கின்ற அமைப்பை எந்த விதத்திலும் அவர் ஆதரிக்கவில்லை. அதிலிருந்து விலகியே இருந்திருக்கிறார்.
 
ஆனால், தனுஷ் போன்றவர்கள் இன்று நிலவக்கூடிய அரசியல் சூழலில் எந்தவிதமான அரசியல் முடிவையும் எடுக்கலாம் அல்லது எடுக்க நிர்பந்திக்கப்படலாம்.
 
அதே சமயம் தனுஷுடைய வருகையோடு அவரது உறவினரான ரஜினியின் பெயரும் இழுக்கப்படுகிறது.
 
ரஜினியும் இணைவார், இணைந்து ஆதரவு தெரிவிப்பார் என்கின்ற தகவல்களும் சமூக வலைதளங்களில் இப்போதே கசிய ஆரம்பித்துவிட்டன.
 
ஆனால், தனுஷின் அரசியல் வருகை உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு எந்தளவுக்கு ஆதரவு கிடைக்கும் என்பதற்கு எந்தவிதமான உத்திரவாதமும் இல்லை.
 
ஏற்கனவே மக்கள் நீதி மய்யத்தைத் துவக்கியிருந்த கமல் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தாலும், அவருடைய பின்னணியில் எந்தவிதமான அரசியல் இயக்கச் செயல்பாடுகள் இல்லாததால், தான் போட்டியிட்ட தொகுதியிலேயே, சிவாஜியைப் போலவே வெற்றியைச் சந்திக்க முடியாமல் போனது.
 
பிரபலமானவர் என்பதனாலயே ஒருவர் அரசியலில் நுழைந்து ஆட்சிக் கட்டிலில் சற்றென்று அமர்ந்துவிட முடியாது என்பதற்கு இவர்கள் எல்லாம் நமக்கு முன்புள்ள கண்கூடான உதாரணம்.
 
அதைப்போலவே பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு அரசியல் களத்தில் குதித்த பிறகு அவருடைய திரைப்பட வாழ்வில் பெரும் சரிவை சந்திக்க வேண்டி இருந்தது.
 
அவருடைய அரசியல் முடிவுக்கு வடிவேலு கொடுத்த விலை அதிகம்.
 
தற்போது அரசியலில் நுழைய விரும்புகிற எந்த ஒரு நடிகரும் தனக்கு முன்பு இதே அரசியலில் உள்ளே புகுந்து பல்வேறு எதிர்விளைவுகளைச் சந்தித்த நடிகர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அரசியலுக்குள் நுழைவதா வேண்டாமா என்பதை முடிவு செய்தால் அவர்களது எதிர்காலத்துக்கு நல்லது. 
 
– லியோ 
Comments (0)
Add Comment