மலரே… குறிஞ்சி மலரே… : சில குறிப்புகள்!

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்து மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் குறிஞ்சிப் பூக்கள், கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுக்கத் தொடங்கியுள்ளன.

நீலகிரியில் கனமழைக்குப் பிறகு இயல்புநிலை திரும்பியுள்ளது. அங்கேயும் வழக்கமாக குறிஞ்சிப்பூக்கள் பூத்துக் குலுங்கும்.

லேம்ஸ்ராக் மலையுச்சிக்குச் சென்று பொதுமக்கள் மலைச்சரிவுகளின் அழகை பார்த்து ரசிப்பார்கள்.

இந்நிலையில், அந்த மலர்கள் பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்.

நீலக்குறிஞ்சி என்றும் அழைக்கப்படும் குறிஞ்சிச் செடிகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன.

குறிஞ்சிப் பூக்கள் நீலநிறத்தில் வெகு அழகாகத் தோன்றும். மலைப்பகுதியே நீலநிறமாகத் தோன்றியதால் நீலகிரி மலை என அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதர்வகைச் செடிகளைச் சேர்ந்த குறிஞ்சியின் தாவரவியல் பெயர் ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா. ஏறக்குறைய 200 வகைச் செடிகள் குறிஞ்சி குடும்பத்தில் உள்ளன.

அவையனைத்தும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றில் 150 வகை இந்தியாவில் உள்ளன.

முப்பதுக்கும் அதிகமான வகைகள் மேற்குத்தொடர்ச்சி மலைகள், நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் வளர்கின்றன.

ஐவகை நிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் குறிஞ்சி, மலையும் மலைசார்ந்த பகுதிகளையும் காட்டுகிறது. அது குறிஞ்சித்திணை என சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது.

நீலக் குறிஞ்சிகள் மலைப்பகுதிகளில் மட்டுமே வளர்வதாக உள்ளன. 30 செ.மீ முதல் 60 செ.மீ வரை உயரமாக வளர்கின்றன. மேலும், கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீட்டர் உயரத்தில் குறிஞ்சிச் செடிகள் வளர்கின்றன.

குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியதும், தேனீக்கள் மொய்க்கத் தொடங்குகின்றன. அவை கொண்டு வரும் பெருமளவு தேனை தோடர் பழங்குடியினர் சேகரிக்கின்றனர்.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் குடியேறிய ஐரோப்பியர்களின் குறிப்புகளின்படி, குறிஞ்சி பூக்கும் காலத்தில் தேனீக்களின் படை மிகவும் அதிகமானதாக இருந்ததாக அறியப்படுகிறது

1922-ம் ஆண்டு குறிஞ்சிப் பூக்கள் பூத்திருந்த காலத்தில் ஏறத்தாழ 28 தேன் கூடுகள், ஒரே யூகலிப்டஸ் மரத்தில் இருந்ததாகவும், அதற்கு அருகே பாறையில் 28 தேன் கூடுகள் இருந்ததாகவும் ராபின்சன் குறிப்புகளில் உள்ளதாக விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆனைமுடி சிகரத்தின் நான்கு புறங்களிலும் அமைந்துள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் குறிஞ்சிகள் அதிகம் காணப்படுகின்றன.

அங்கு உலவும் வரையாடுகளுடன் குறிஞ்சி மலர்களைப் பார்ப்பது பேரதிசயமாக இருக்கும்.

அந்தப் பகுதி குறிஞ்சிச் செடிகள் செழிப்பதற்கான பாதுகாப்பான இடமாக இருக்கிறது.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய மலைகளில் குறிஞ்சிச் செடிகள் குறைந்துவந்துள்ளன.

குறிஞ்சி மலர்கள் 1994-ம் ஆண்டு பூத்தன. அதற்கடுத்து 2006-ம் ஆண்டு பூத்துக் குலுங்கின. அதற்கடுத்து கடந்த ஆண்டில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் பூத்துச் சிரித்தன.

குறிஞ்சிப் பூக்கள் பூக்கும் காலத்தை வைத்து நீலகிரியில் வாழும் தோடர் இன மக்கள் தங்கள் வயதைக் கணக்கிட்டுள்ளனர்.

அதேபோல மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் பளியர் இன மக்களும் செய்துள்ளனர்.

– தான்யா

Comments (0)
Add Comment