சி.பா. ஆதித்தனார், செல்லப்பாண்டியன், கா.காளிமுத்து, பி.எச்.பாண்டியன், தமிழ்க் குடிமகன், பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் உள்ளிட்ட ஆளுமைகள் அலங்கரித்த சபாநாயகர் நாற்காலியில் இன்று அமர்ந்துள்ள ஜேசிடி பிரபாகர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதி.
50 ஆண்டு காலத்தைப் பொதுவாழ்க்கைக்கு அர்ப்பணித்தவர். எம்.ஜி.ஆரின் ஆத்மார்த்த சிஷ்யர். செல்லப்பிள்ளை என்று கூட சொல்லலாம்.
சென்னை லயோலா கல்லூரியில் படித்தபோதுதான் அவருக்கு புரட்சித் தலைவருடன் அறிமுகம் ஏற்பட்டது.
1973-ம் ஆண்டு பிரபாகர், அந்தக் கல்லூரியின் மாணவர் பேரவைச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தை தொடங்கும் ஆர்வம் உருவானது.
நிதி வேண்டுமே? யாரை அணுகுவது?
’எம்.ஜி.ஆரை போய் பார்’ என உள்மனம் சொன்னது.
சக மாணவர்கள் சிலருடன் தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆரின் மாம்பலம் அலுவலகத்துக்கு (இப்போதைய எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்) புறப்பட்டுப் போனார் பிரபாகர்.
அங்கு, கே.ஏ.கிருஷ்ணசாமியுடன் எம்.ஜி.ஆர். சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
லயோலா கல்லூரி மாணவர்கள் சந்திக்க வந்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் தகவல் சொல்லப்பட்டது.
மேலே வருமாறு பணித்தார் எம்.ஜி.ஆர்.
சென்றார்கள் மாணவர் படையினர். மதிய உணவுத் திட்டம் குறித்து எம்.ஜி.ஆரிடம் விளக்கினார்கள்.
“நீங்க கல்லூரியில் படிக்கத்தானே வந்திருக்கீங்க. படித்து முடித்து விட்டுப்போக வேண்டியது தானே? உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?” – இது எம்.ஜி.ஆர்.
‘’நான் மாணவர் பேரவைச் செயலாளராக இருக்கிறேன் – ஒரு மாணவன், என்னிடம் நான் தாம்பரத்தில் இருந்து வருகிறேன். தாயார் வீட்டு வேலை செய்கிறார் – ஏழ்மையான குடும்பம் – மதியம் சாப்பிட வழி இல்லை – ஏதாவது உதவி வேண்டும்” என்றான்.
மேலும் சில மாணவர்களும் இதனையே என்னிடம் சொன்னதால், மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் ஏற்பட்டது” – என்றார் ஜேசிடி பிரபாகர்.
எம்.ஜி.ஆர். முகத்தில் மலர்ச்சி.
தனது கண்ணாடியைக் கழற்றி மேஜை மீது வைத்து விட்டுப் பிரபாகரை உற்று நோக்கினார்.
அருகில் அமர்ந்திருந்த கே.ஏ.கிருஷ்ணசாமியிடம், “இவரைப் பார்த்துக் கொள்ளுங்கள். இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது’ என சொன்னவர், மதிய உணவுத் திட்டத்துக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார்.
அது மட்டுமல்ல. இந்தத் திட்டத்துக்கு நிதி திரட்ட கல்லூரியில் மாணவர்கள் ஏற்பாடு செய்த நட்சத்திர விழாவிலும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வுக்கு பின்னர் எம்.ஜி.ஆரிடம் பிரபாகருக்கு தனி ஈர்ப்பு உருவானது. அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
1980-ம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை எம்.ஜி.ஆர். கொடுத்தார்.
பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் பிரபாகர் விபத்து ஒன்றில் சிக்கிக் காலில் காயம் ஏற்பட்டது.
அப்போது தன்னை சந்திக்க வந்த பிரபாகரிடம், எம்.ஜி.ஆர்., “உனது உடல் நலத்தை பார்த்துக்கொள். தொகுதியை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என சொல்லி அனுப்பி வைத்தார்.
வாக்குறுதி அளித்தபடி, வில்லிவாக்கம் தொகுதியில் நள்ளிரவு 12 மணி வரை பிரச்சாரம் செய்தார் எம்.ஜி.ஆர்.
“வில்லிவாக்கம் தொகுதியில் நானே நிற்பதாக நினைத்து தம்பி பிரபாகருக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து பிரமாண்ட வெற்றியைத் தர வேண்டும்” என எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண்டார்.
புரட்சித் தலைவரின் சூறாவளிப் பிரசாரத்தால், பிரபாகர் அமோக வெற்றி பெற்றார். அவர் தோற்கடித்தது யாரை தெரியுமா?
’சட்டமன்ற ஹீரோ’ என்று கலைஞர் கருணாநிதியால் வர்ணிக்கப்பட்ட திமுகவின் க.சுப்புவை.
2011 ஆம் ஆண்டு அதே வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட பிரபாகருக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார்.
அந்த தேர்தலில் பிரபாகர், திமுகவின் தூணாக விளங்கிய பேராசிரியர் க.அன்பழகனை வீழ்த்தினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களமிறங்கி வாகை சூடினார்.
இப்போது, சட்டப்பேரவைத் தலைவர் நாற்காலியில் எம்.ஜி.ஆர். ஆசியுடன் வீற்றிருக்கிறார் ஜேசிடி பிரபாகர்.
– பாப்பாங்குளம் பாரதி.
#ஜெசிடிபிரபாகர் #எம்ஜிஆர் #புரட்சித்தலைவர் #தமிழகஅரசியல் #சட்டப்பேரவைசபாநாயகர் #சபாநாயகர் #அதிமுக #வில்லிவாக்கம் #ஆயிரம்விளக்கு #லயோலாகல்லூரி #மதியஉணவுத்திட்டம் #மாணவர்அரசியல் #ஜெயலலிதா #கருணாநிதி #கஅன்பழகன் #கசுப்பு #அரசியல்வாழ்க்கை #அரசியல்பயணம் #JCDPrabhakar #MGR #PuratchiThalaivar #TamilNaduPolitics #AssemblySpeaker #AIADMK #Villivakkam #LoyolaCollege #MiddayMealScheme #StudentPolitics #Jayalalithaa #Karunanidhi #KAnbazhagan #PoliticalJourney