சைபர் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!

அண்மைக் காலத்தில் நவீனத் தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்தாலும், அதனுடைய இன்னொரு எதிர்விளைவாக அதே தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்களும் அதிகரித்திருக்கின்றதா?
 
குறிப்பாக இந்தியாவில் சைபர் குற்றங்கள் முன் எப்போதும் இருந்ததைவிட பல மடங்கு அதிகரித்திருக்கின்றன.
 
எந்த ஒரு தனிநபரும் தனக்கு வரும் ஏதோ ஒரு விதமான லிங்கை தவறுதலாக கை வைத்து இயக்கினாலும் கூட, அவருடைய செல்பேசி எண் இணைக்கப்பட்டிருக்கிற வங்கிக் கணக்கிலிருந்து முழுமையான பணமும் எதிர்தரப்புனால் அபகரிக்கப்பட்டு விடுகிறது.
 
ஆனால், அதே சமயத்தில் இத்தகைய சைபர் குற்றங்களைச் செய்பவர் விஷயத்தில் கவனமாக இருங்கள் என்கின்ற எச்சரிக்கை குரலை மத்திய அரசே அடிக்கடி தெரிவித்தபடியே இருக்கிறது.
 
சிலர் சமீப காலத்தில் நீங்கள் மற்றவர்களை செல்பேசியில் தொடர்பு கொண்டாலேயே இத்தகைய ஒளிப்பதிவு செய்யப்பட்ட எச்சரிக்கையை தாண்டித்தான் நீங்கள் மற்றொருவரை தொடர்புகொள்ள முடியும் என்கிற அளவுக்கு எச்சரிக்கை பலமாகவே இருக்கிறது.
 
ஆனால், இதையும் மீறி பல்லாயிரக்கணக்கான நபர்கள் தங்களுடைய இதே கைபேசி மூலமாக, தவறுதலாக பயன்படுத்தப்பட்டு பலர் அதுவரையில் தாங்கள் வைத்திருந்த, வங்கிக் கணக்கில் வைத்திருந்த சேமிப்பை இழந்திருக்கிறார்கள்.
 
இதனால், நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து எந்த ஒரு செல்பேசிக்கும் பெயர் குறிப்பிடாமல் ஒரு எண்கள் மட்டுமே வரும் விதத்தில் எந்த அலைபேசி அழைப்பும் வரக்கூடாது.
 
அப்படி அழைப்பு வந்தாலும் அதை யார் அழைக்கிறார்கள் என்கின்ற பெயர் கண்டிப்பாக அதாவது அவருடைய உண்மையான பெயர் கண்டிப்பாக வெளிவரும்படி அனைத்து செல்பேசி நிறுவனங்களும் செயல்பட்டாக வேண்டும் என்கின்ற புது நெறிமுறையை மத்திய அரசு அமல்படுத்தியிருக்கிறது.
 
சைபர் குற்றங்கள் மிகவும் அதிகரிக்கிற நேரத்தில் தனக்கு யார் செல்பேசியில் அழைக்கிறார்கள் என்பதே தெரியாமல் பலர் பல்வேறு ஆபத்துக்களில் சிக்கிக் கொள்ளும் ஒரு முறைகேட்டில் இருந்து மக்கள் சிறிதாவது விழிப்புணர்வு அடைவதற்கு இந்த வசதி உதவலாம்.
 
அப்படி ஒருவரது உண்மையான பெயரும் அவரது அழைப்பின்போதே வெளிப்பட்டால், பல தொழில்நுட்பத் தவறுகள் தொடர்ந்து நடப்பதை ஓரளவாவது தடுத்து நிறுத்த முடியும்.
 
இத்தகைய நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த முடிவை காலத்தின் தேவை கருதி அரசு பல்வேறு செல்பேசி நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது வாடிக்கையாளர் நலனுக்கும் உகந்தது. சேமிப்பை வலியுறுத்தும் அரசுக்கும் நல்லது.
 
– யூகி
Comments (0)
Add Comment