மீண்டும் உயிர்பெறும் ஆட்டோ மீட்டர்கள்!

சென்னை பெருநகரம் உட்பட தமிழகத்தில் சில லட்சம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. 

ஆட்டோ என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கான வாகனம் என்பதைப் போலத்தான் ஆகியிருக்கிறது.

ஆனால், இந்த ஆட்டோ இயங்குவதற்கான ஆப்-ஐ தன் கைவசம் வைத்திருக்கிற சில நிறுவனங்கள் இன்றைக்கு இயங்கும் பெரும்பாலான ஆட்டோக்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அந்த ஆப் வலையில் சிக்காமல் பழையபடியே இயங்கும் ஆட்டோ ஓட்டுநர்களும் இருக்கிறார்கள்.

இவர்களுடைய நிலை கேள்விக்குறியாகிக் கொண்டிருந்த நிலையில், அதுவும் அண்மையில், பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்தியதன் விளைவாக ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தை நடத்தினார்கள்.

அவர்களது கண்டனக் குரல்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருத்தப்பட்ட ஆட்டோ மீட்டர் கட்டணத்தைத் தற்போது தான் மாற்றியமைத்து ஒரு கிலோ மீட்டருக்கு 50 ரூபாய் அதையடுத்து கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 25 ரூபாய் என்கிற அளவில் ஆட்டோ மீட்டருக்கான கட்டணம் தவெக அரசால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இதை ஆட்டோ ஓட்டுநர்கள் எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இதுவரை புலப்படவில்லை.

ஆனாலும், எந்தவிதமான ஆப்-களுக்கும் உட்படாத தனித்து இயங்கிக் கொண்டிருந்த ஆட்டோக்களில் பொருத்தப்பட்ட மீட்டர்கள் இனி உயிர்பெற வாய்ப்பிருக்கிறது.

– அ.தமிழரசன்

Comments (0)
Add Comment