டெல்லியை அதிர வைத்த நிகழ்வு!

கடந்த 10-ம் தேதி அன்று கரப்பான்பூச்சி இயக்கத்தினரும் காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளும் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஸ்குமாரை பதவி விலகக் கோரி பெரும் ஆர்ப்பாட்டத்திற்கான அறிவிப்பை செய்திருந்தன.
 
அன்றைக்கு என்ன நடந்தது?
 
இது குறித்து இந்திய வாக்குரிமை மீட்பு இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகர் கொடுத்த பேட்டியில் 10-ம் தேதி அன்று டெல்லியில் நடந்த நிகழ்வு குறித்து இப்படிச் சொல்கிறார்.
 
“இந்த கரப்பான்பூச்சி இயக்கம் தலைமைத் தேர்தல் ஆணையரை எதிர்த்து பெரும் போராட்டத்தை அறிவித்ததிலிருந்தே டெல்லியில் பல்வேறு இளைஞர்கள் மற்றும் இயக்கத்தினர் கூட ஆரம்பித்துவிட்டார்கள்.
 
நாங்களும் தமிழகத்திலிருந்து அங்கு சென்றிருந்தோம். அந்தப் போராட்டம் நடக்க இருந்த ஜந்தர் மந்தர் என்கிற இடத்தை ஒட்டியுள்ள இடத்தில் தான் நாங்கள் தங்கியிருந்தோம்.
 
10-ம் தேதி முன்பிலிருந்தே டெல்லி காவல்துறை படு தீவிரமாக செயல்பட ஆரம்பித்துவிட்டது. எங்கும் போலீஸ் மயமாக இருந்தது.  
 
அரசினுடைய கணக்குப்படியே ஏறத்தாழ 41,000-க்கும் மேற்பட்ட காவல் துறையினரும், கூடவே ராணுவத்தினரும் பயன்படுத்தப்பட்டதால், டெல்லி முழுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர் நிரம்பி இருந்தார்கள்.
 
அதே சமயம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பி வந்தவர்கள் பல்வேறு விதத்தில் தடுக்கப்பட்டார்கள்.
 
டெல்லிக்கு வரயிருந்த பல ரயில்கள், டெல்லி நெருங்குவதற்கு முன்பே குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தப்பட்டன. இதனால், டெல்லிக்குள் பல ரயில்கள் வரவும் முடியவில்லை, அங்கிருந்து கிளம்பவும் முடியவில்லை.
 
அதோடு இதுவரை இல்லாத அளவுக்கு டெல்லி முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மாதிரியான ஒரு அசாதாரணமான சூழ்நிலை நிலவியது.
 
பெரும்பாலும் செல்போன்களின் மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும்தான் இந்தப் போராட்டம் குறித்த தகவல் பரவுகிறது என்று கூறி, டெல்லியில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது.
 
சாதாரண மக்கள் கூட டெல்லியில் அவர்கள் விரும்பியபடி எங்கும் செல்ல முடியாத அளவுக்கு ஒரு சூழ்நிலை நிலவியது.
 
ஜந்தர் மந்தருக்கு அருகிலேயே இருந்த எங்களைப் போன்றவர்கள் அங்கிருந்து கிளம்பி, போராட்டம் நடந்த இடத்தை நோக்கி நகரவே முடியாத அளவுக்கு ஒரு தடுப்புச் சூழ்நிலை இருந்தது.
 
அதோடு இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள விமானத்தில் வந்த கரப்பான்பூச்சி இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் மூன்று பேரை விமானத்திற்குள்ளேயே கைது செய்து தடுப்பு காவலில் வைத்தார்கள்.
 
பிறகு அவர்களை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தினார்கள். இப்படி பாஜக அரசு பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கிய விதம் எங்களைப் போன்றவர்களுக்கு காங்கிரஸ் காலத்திய எமர்ஜென்சி நிலையை நினைவுபடுத்தியது.
 
பல இடங்களில் கூட்டம் கூட்டமாக வந்த இளைஞர்கள் மீதும் மாணவர்கள் மீதும் கடுமையான தாக்குதலும் பிரயோகிக்கப்பட்டது. பலரை அங்கங்கே நிறுத்தப்பட்டிருந்த பஸ்களில் ஏற்றி டெல்லியின் புறநகர் பகுதிகளுக்கு கொண்டுபோய் விட்டதும் நடந்தது.
 
இப்படிப்பட்ட நிகழ்வுகள் சமீபகாலத்தில் நடக்கவில்லை என்கிற அளவுக்கு ஒரு கடுமையான அடக்கு முறையை அன்று டெல்லிவாழ் மக்கள் சந்திக்க வேண்டியிருந்தது.
 
இவ்வளவுக்கும் என்ன காரணம்? ஏன் மத்திய அரசு இந்த அளவுக்கு வன்முறையையும் அடக்குமுறையையும் கையாண்டது? என்று பார்த்தால்,
 
தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஸ்குமாரை குறிவைத்து எழுப்பப்படும் கேள்விகளும் அவரை பதவி விலகக் கூறி நடத்தப்படும் போராட்டத்தில் பாஜகவுக்கு சற்றும் விருப்பமில்லை என்பதோடு,
 
அப்படி அவர் நீக்கப்பட்டால், பாஜக இதுவரை 2023-க்கு பிறகு தேர்தல் ஆணையம் மூலமாக நடந்த பல்வேறு முறைகேடுகள் வெளியே வரும் என்கின்ற அச்சத்தின் காரணமாகவோ பலர் மீது அந்த அடக்குமுறை நிகழ்த்தியிருக்கிறது.
 
இந்தப் போராட்டம் தலைமை தேர்தல் ஆணையரான ஞானேஸ் குமார் என்கின்ற தனிநபர் சம்பந்தப்பட்டதல்ல.
 
தேர்தல் ஆணையம் என்கின்ற அமைப்பு யாருக்கு சார்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் விதமாக நிகழ்ந்த போராட்டம்.
 
அதுதான் மத்திய அரசுக்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கான பல்வேறு வழிமுறைகள் கையாளப்பட்டன.
 
ஜந்தர் மந்தர் பக்கத்திலேயே தங்கியிருந்த நாங்களே அங்கு செல்ல முடியாத அளவுக்கு ஒரு சூழ்நிலை இருந்ததென்றால், டெல்லி தவிர மற்ற போகுதிகளில் இருந்து வர முயன்றவர்கள் எந்த அளவுக்கு தடுக்கப்பட்டிருப்பார்கள்? என்பதை யூகித்துக் கொள்ளலாம்.
 
இதையடுத்து இதுவரை பல்வேறு போராட்டங்கள் நடத்த அனுமதி கொடுக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதியில் இப்பொழுது போராட்டங்கள் நடத்த அனுமதி மறுத்திருக்கிறார்கள்.
 
இனிமேல் ஜந்தர் மந்தர் பகுதியில் எந்தவிதமான போராட்டத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்கின்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
 
இதையெல்லாம் யார் பார்க்கிறார்களோ இல்லையோ, பாஜகவுக்கு வாக்களித்த பெருவாரியான மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 
 
– யூகி 
Comments (0)
Add Comment