அண்மையில், மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்து விட்ட நிலையில், அந்த தேர்தல் நடைபெறும்போது நடந்தேறிய பல காட்சிகள் உண்மையாகவே அதிர்ச்சியூட்டுகின்றன.
இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததில் இருந்தே இரு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களைப் பற்றி பல்வேறு விதமான ஆபாசப் பேச்சுக்கள் சமூகவலைதளங்களில் எதிரொலித்தன.
தனித் தொகுதியில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் பற்றி இவ்வளவு தரக்குறைவாகப் பேச வேண்டுமா என்கிற அளவுக்கு பல முக்கியத் தலைவர்களின் பேச்சுக்களே அமைந்திருந்தன.
இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் பெட்டி வாங்கி விட்டார்கள் என்கிற விமர்சனத்தைத் தனது பரப்புரையின்போது தொடர்ந்து வெளிப்படுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின்.
பெண் வேட்பாளர் அருகில் இருக்கும் நிலையில் ‘கடற்கரை’, ‘மூடு’ என்றெல்லாம் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உதயநிதிதான் அப்படிப் பேசுகிறார் என்றால் திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் அவரைவிட ஒரு படி மேலே சென்று தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் சத்யபாமாவை ‘பெட்டி பாமா’ என்று அழைத்ததோடு, ‘பல்டி பாமா’ என்றும் அழைத்து, அவரது உடலைப் பற்றிக் குறிப்பிட்டு அதோடு அவர் எப்படி பல்டி அடிப்பார் என்று பேசியது பலத்த கண்டனத்திற்கு உள்ளானது.
பல கட்சிகளில் உள்ள பெண்கள் இத்தகைய பேச்சை எதிர்த்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
இதையெல்லாம் கடந்த நிலையில், தொகுதியில் இருக்கும் சிறுவர்களை கேமாராவுக்கு முன் சில முழக்கங்களை முழங்க வைத்து, அதாவது தமிழக முதல்வரான விஜய்யை ‘ஓடுகாளி’ என்று பேசியது அல்லது பேச வைத்தது அதைவிட பெரும் சர்ச்சையானது.
அதையொட்டி வழக்கும் பதியப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது விஜய் சிறு குழந்தைகளை அவருக்கான பிரச்சாரகர்களாக மாற்றுகிறார் என்று குற்றம் சாட்டிய அதே திமுக, தற்போது முதல்வருக்கு எதிரான முழக்கங்களை சிறுவர்கள் மூலம் பேச வைத்ததை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
குறிப்பிட்ட அளவில் பணம் பரிமாறப்பட்டாலும் கூட்டத்திலிருந்து சிலர் ஒரு நடிகையின் பெயரைக் கூக்குரல் இடலாம். கருப்புக் கொடி காட்ட வைக்கலாம். துரோகி என்று பட்டம் சூட்டவும் வைக்கலாம்.
அதைப்போலவே சிறுவர்களை மலினமான அரசியல் முழக்கங்களை முழங்க வைத்திருப்பதும் எதோ ஒரு அழுத்தம் காரணமாகவே நடந்திருக்கிறது.
இதில், சம்மந்தப்பட்ட சிறுவர்களைக் குற்றம் சொல்லி எந்தப் பயனுமில்லை. அந்தச் சிறுவர்களை முழக்கங்களை முன்வைக்க பயிற்றுவித்தது யார்?
மற்ற கட்சித் தலைவர்கள் குறித்து இதேமாதரி சிறுவர்கள் கேமராவுக்கு முன் பேச வைக்கப்பட்டிருந்தால் அதை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது இப்போது பேச வைக்கப்பட்டிருப்பதை ரசித்திருப்பார்களா?
எப்படி இருந்தாலும் சிறுவர்களை தங்களது மலினமான அரசியலுக்கு கருவிகளைப் போல பயன்படுத்தும் அவலமான செயல்பாடுகள் இதோடு நிற்கட்டும்.
சிறுவர்களை சிறுவர்களாக மட்டுமே நடத்துங்கள்.
– லியோ