இடைத்தேர்தல் களம் – இறுதிக்கட்ட நிலவரம்!

நிஜமாகவே சுற்றிலும் வெப்பம் தகிக்கிற வெயில் மாதிரியே இடைத்தேர்தல் நடக்க இருக்கும் இரு தொகுதிகளிலும் உண்மையாகவே வெப்ப அனல் அடிக்கிறது.

இரு தொகுதிகளிலும் முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு போன பிறகு எதிர்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் ஒருபுறம் பிரச்சாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

கூடவே திமுக தலைவரான மு.க.ஸ்டாலினும் தவெக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

சென்ற தேர்தலில் தவெக பேரை உச்சரிக்காமல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், இம்முறை தவெகவை மட்டுமே குறிவைத்து தன்னுடைய பிரச்சாரத்தைத் துவக்கி இருக்கிறார்.

வழக்கம்போல பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எதிரான ஒரு நிலைப்பாட்டை அவரது பிரச்சாரம் முன்னெடுக்கவில்லை.

இதைப் போலவே தவெகவை குறிவைத்த நிலையில் சற்று மலிவான பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி.

இதைவிட ஒரு ஆச்சரியம் என்னவென்றால், தவெகவுக்கு ஒருபுறம் ஆதரவு கொடுத்துக் கொண்டு தற்போதைய இடைத்தேர்தலில் போட்டியிட்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் நிலைப்பாடு.

இரண்டு தொகுதிகளிலும் தலா ஒருவரை நிறுத்தி பிரச்சாரம் பண்ணியிருப்பதோடு தவெக குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளையும் சொல்லி வருகிறார்கள்.

அதிலும், குறிப்பாக மற்ற இரு கட்சிகளைவிட தவெக கூடுதலான பணத்தை வாக்காளர்களுக்குக் கொடுத்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கொளுத்திப் போட்டிருப்பது தவெக தரப்பில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

பதிலுக்கு இரு பொதுவுடைமைக் கட்சிகளும் திமுகவின் மறைமுக உதவியோடு இந்தத் தேர்தலில் களத்தில் இறங்கி இருக்கின்றன என்பதான ஒரு தகவலை தவெகவினர் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்ததாக வழக்கம் போல நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமானும் விஜய்யை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக தாக்கிப் பேசுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.

தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதாவும் கடுமையாகவே தவெகவை விமர்சித்து வருகிறார்.

ஆக பலதரப்பட்ட கட்சிகள் தனித்தனி கட்சிகளாக பிரிந்திருந்தாலும் தவெகவை எதிர்ப்பதில் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இறுதிக்கட்டமாக பெரிய அளவிலான பணப்பட்டுவாடா இரு தொகுதிகளிலும் நடக்க வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள ஊடகத்தை சேர்ந்தவர்கள் வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.

கடைசி நேரத்தில் இந்தப் பணம் பரவலாக விநியோகிக்கப்பட்டு தேர்தல் முன்னெடுக்கப்படுவதன் மூலம், தேர்தலின் போக்கை திசை மாற்ற முடியும் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் பல்வேறு விதமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், தவெகவினுடைய முக்கிய தலைவர்களாலும் கூட்டணிக் கட்சித் தலைவர்களாலும் ஊடகத்தைச் சேர்ந்தவர்களாலும், பரப்பப்படுகிற முக்கியமான குற்றச்சாட்டுகள்,

ஏற்கனவே இதே தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட அதே வேட்பாளர்களை திரும்பவும் இதே இடைத்தேர்தல் களத்தில் நிறுத்தியிருக்க வேண்டுமா என்பதுதான் மிக முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

அவர்களை நிறுத்தி இருப்பதன் மூலம் அவர்கள் மீது ஏற்கனவே தொகுதி அளவில் பதிந்திருக்கிற எதிரான மனநிலையை மாற்றுவது தவெகவுக்கு சிரமம் அளிக்கக் கூடியதாகவே இருப்பதாகச் சொல்கிறார்கள்.

வேறு நபர்களை வேட்பாளர்களாக தவெக களத்தில் இறக்கியிருந்தால் சுலபமாகவும் அதிக வாக்குகள் வித்தியாசத்திலும் தவெக வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

வழக்கம்போல எந்தவிதமான பட்டுவாடா நடந்தாலும், பிரச்சாரத்தில் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் அனல் அடிக்கிற மாதிரி வீசினாலும், தேர்தல் ஆணையம் வழக்கம் போல சாதாரண பார்வையாளரைப் போலவே பார்த்துக் கொண்டிருக்கிறது.

வாக்காளர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பது அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று தெரியவரும்.

  • யூகி
Comments (0)
Add Comment