முதல்வர் விஜய்யிடம் இருக்கும் திமுக ஃபைல்ஸ்!

தற்போது நடந்துவரும் சட்டமன்றத் தொடரில் பல்வேறு காரசாரமான விவாதங்கள் அரங்கேறியிருக்கின்றன. 

பொதுப்பணித்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில், லாட்டரி அதிபரான தன்னுடைய மாமனாரிடமிருந்து 900 கோடி ரூபாயை ஏன் மு.க.ஸ்டாலின் வாங்கினார் என்ற கேள்வியைக் கேட்டார்.

அப்போது, எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் சட்டென்று அந்தக் கேள்வியைச் சமாளித்து பதிலளிக்க முடியாத நிலையில், “அதைக் கொடுத்தது உங்கள் மாமனார் தானே. அவரிடமே ஏன் கொடுத்தார் என்று கேளுங்கள்” என்று பேச, தொலைக்காட்சி நேரலையில் வெளிவந்த அந்தக் காட்சி பார்வையாளர்களுக்கிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியது. 

கட்சி நிதிக்காகத்தான் வழக்கம்போல அந்த நிதி பெறப்பட்டதாக சொல்லப்பட்டாலும், சட்டசபையில், அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படாத அந்த நேரடியான குற்றச்சாட்டுக்கும், பதிலுக்கும் அமலாக்கத்துறைப் போன்ற அமைப்புகள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றன என்கின்ற விவாதமும் பொதுமக்களிடமும் எழுந்திருக்கிறது. சமூக வலைதளங்களிலும் அலையடித்திருக்கிறது.

இதற்கு முன்பு தமிழக முதல்வரான விஜய் டெல்லிக்குச் சென்றபோது மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் வெளிப்படையான குற்றச்சாட்டு ஒன்றை திமுக மீது வீசினார்.

மழைநீர் வடிகால் திட்டத்துக்காக திமுக அரசு 4000 கோடி ரூபாயைப் பெற்றாலும் அதில் 900 கோடி ரூபாய்க்குத்தான் கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது என்று மிகவும் வெளிப்படையாக குற்றம் சாட்டப்பட்டும் அதற்காக அவர் மீது ஏன், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? விசாரணையும் நடைபெறவில்லை என்று கேட்டிருந்தார்.

இந்த சமயத்தில் சாமானியமான பார்வையாளர்கள் மத்தியில் எழக்கூடிய இயல்பான கேள்வி –

“ஊழல் குற்றச்சாட்டை வெளிப்படையாகக் கூறுகிறவர்கள், அந்தக் குற்றசாட்டுக்குப் பொறுப்பானவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்?”

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் நிலுவையில் இருக்கையில் மிக அண்மையில் சட்டமன்றத் தொடரில் விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தவெக அமைச்சர் ஒருவர்,

“திமுக ஊழல் செய்ததற்கான ஆதாரமான 3 முக்கியமான ஃபைல்கள் முதல்வர் விஜய்யின் டேபிளில் இருக்கின்றன” என்று போகிற போக்கில் சொன்னார்.

அதைத் தொடர்ந்து அதே சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய்யும் திமுகவிற்கு எதிரான ஆதாரங்களுடன் கூடிய 3 முக்கியமான ஃபைல்கள் என் டேபிளில் இருக்கின்றன என்று கூறியவர், அதை உடனே திறக்க வைத்துவிடாதீர்கள் என்றும் குறிப்பிட்டது பலத்த சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறது.

தமிழக முதல்வர் விஜய் சொன்னபடியே திமுகவின் ஊழலை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் பைல்கள் அவரிடம் அளிக்கப்படும்போது, உடனே அதைப் பரிசீலித்து அதை உறுதிப்படுத்தி, உடனே உரிய நடவடிக்கையில் முதல்வரான விஜய் இறங்கியிருக்கலாம்.

அப்படிச் செய்யாமல் தன் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளையும் கொச்சையான அவதூறுகளையும் எதிர்க்கட்சியான திமுக தொடர்ந்து வீசிக் கொண்டிருக்கையில், தன் வசம் முக்கியமான ஆதார பைல்கள் இருந்தும் ஏன் காலம் கடத்துகிறார் முதல்வர் விஜய்?

ஏற்கனவே நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டு அதையும் மீறி காவல் துறையின் பிடியில் சிக்காமல் முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி தொடர்ந்து எப்படி தப்பித்துக் கொண்டே இருக்கிறார் என்ற கேள்வியும் பொதுமக்களிடம் இருக்கிறது.

இதற்கு முன்னால், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தபோது, அவர் ஆதாரங்களைத் திரட்டி அளித்த, திமுக ஃபைல்ஸின் தற்போதைய நிலை என்ன?

அதே மாதிரியான நிலை தமிழக முதல்வர் விஜய்யின் டேபிளில் இருக்கிற 3 திமுக ஃபைல்ஸ்-க்கும் ஏற்பட்டுவிடக் கூடாது.

உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதே தவெக ஆட்சிக்கு நல்லது.

அவருக்கு வாக்களித்த ஒன்றரை கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

– லியோ

Comments (0)
Add Comment