நூல் அறிமுகம் :
* உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வெ. சாமிநாத சர்மா 1943ம் ஆண்டில் எழுதி பல பதிப்புகளைக் கண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க படைப்பிலக்கியம் தான் இந்த நூல் !
* “மானிட சமுதாயத்தில் ஒரு பகுதி அவனை சபிக்கிறது ! மற்றொரு பகுதியோ அவனை ஜபிக்கிறது ! அவன் மூச்சு நின்று பல ஆண்டுகள் ஆன பின்னும் அவனது கொள்கைகள் பாராளுமன்றத்தில் இருந்து குடியானவர் குடிசை வரை எல்லோரையும் பேச வைக்கிறது” என்று மார்க்ஸைப் பற்றி நூலாசிரியர் ஆச்சரியத்துடன் விவரிக்கிறார் !
* ஜெர்மனியின் ட்ரியர் என்ற ஊரில் யூத இனத்தைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு 1818ம் ஆண்டு மே 5ம் நாள் கார்ல் மார்க்ஸ் பிறந்தார். மார்க்ஸின் உடன் பிறந்தோர் ஏழு பேர்கள்.
மார்க்ஸின் பெற்றோர்கள் 1824ல் யூத மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்தை தனது குடும்பத்தோடு தழுவிக் கொண்டார்கள்.
* மார்க்ஸ் சிறு வயதில் முரடனாகவும் பிடிவாதக்காரனாகவும் இருந்தார். கவி பாடும் திறன் இருந்தது.
பள்ளியில் படிக்கும் போதே – லத்தீன், கிரீக், ஜெர்மனி, பிரெஞ்சு முதலிய மொழிகளில் நல்ல பயிற்சி பெற்றார்.
பள்ளி படிப்பை முடித்து 1835ம் ஆண்டு பான் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு படித்து 1836ம் ஆண்டு பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார்
* பல்கலைக் கழகத்தில் – தத்துவம், சட்டம், சரித்திரம், பூகோளம், இலக்கியம் ஆகியவற்றை இரவு பகல் ஓயாமல் படித்தார்.
தத்துவ சாஸ்திரத்தில் மனம் ஒன்றி புகழ்பெற்ற ஹெகலின் தத்துவங்களை ஆழமாகப் படித்தார். அவரது சிந்தனை விரிவடைய இவைகள் பாதையாக அமைந்தன !
* மார்க்ஸ் 1841ம் ஆண்டு பெர்லின் பல்கலைக் கழகத்தில் படிப்பை முடித்த பின்னர் ஜீனா பல்கலைக் கழகத்திற்கு ஒரு ஆராய்ச்சி கட்டுரையை எழுதி அனுப்பினார்.
அந்த கட்டுரைக்குப் பரிசாக ‘டாக்டர்’ பட்டம் கிடைத்தது. இருபத்து மூன்றாவது வயதில் கார்ல் மார்க்ஸ் ‘டாக்டர் மார்க்ஸ்’ ஆனார். அவரோ தனது வாழ்நாளில் என்றுமே அந்தப் பட்டத்தை போட்டுக் கொண்டதில்லையாம் ..!
எப்படிப்பட்ட மனிதர் ! !
* மார்க்ஸின் காதலி / மனைவி ஜென்னி 12.02.1814ல் பிறந்தவர். மார்க்ஸை விட நான்கு வயது மூத்தவர். மார்க்ஸ் – ஜென்னி குடும்பம் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்தவர்கள்.
சிறுவயது முதலே நட்பாக இருந்தார்கள். மார்க்ஸின் மன உறுதி, அடக்கியாளும் தன்மை, ஒழுக்கத்திற்கு உயர்வு கொடுத்துப் பேசுகிற பெருந்தன்மை இவையெல்லாம் ஜென்னியின் மனதை கவர்ந்தது.
* மார்க்ஸ் தனது முதல் வேலையாக ‘ ரைன்லாந்து கெஜட் ‘ என்ற பத்திரிக்கை ஆசிரியர் ஆனார். 1843ல் மார்க்ஸ் – ஜென்னி திருமணம். இருவரும் பாரிசில் குடியேறினார்கள்.
பிரெஞ்சு தொழிலாள சங்கக் கூட்டங்களில் மார்க்ஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். 1844ல் பாரிசில் தனது வாழ்நாள் நண்பர் ஏங்கெல்ஸின் நட்பு கிடைத்தது.
* இந்த வேளையில், ஜெர்மனி அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க – தீவிரமான கருத்துக்களை பத்திரிக்கையில் எழுதி வந்த மார்க்ஸ் பாரிசில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1845ல் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் தஞ்சம் அடைந்தார் !
*ஜெர்மானியரான பிரடெரிக் ஏங்கெல்ஸ் – மார்க்ஸ் பிறந்த அதே மாகாணம் ரைன்லாந்தில், இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரத்தின் பெரிய நூல் உற்பத்தி தொழிற்சாலையின் அதிபர் வீட்டுப் பிள்ளையாக 20.11.1820ல் பிறந்தவர்.
1844ம் ஆண்டு முதல் மார்க்ஸின் இறுதிக் காலம் வரை அவருக்கு உறுதுணையாக, வலதுகரமாக இருந்த இடதுசாரி சிந்தனையாளர் !
நட்பின் இலக்கணமும் இலக்கியமுமாக வாழ்ந்தார்கள் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் !
* மானிட சமுதாயம் எந்த வழியைக் கடைப்பிடித்தால் நல்வாழ்வு பெற முடியும் என்னும் விஷயத்தில் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் இருவரும் ஒரே மாதிரியான கருத்துக்களை கொண்டிருந்தார்கள் !
மார்க்ஸ் இல்லாவிட்டால் ஏங்கெல்ஸ் இல்லை !
ஏங்கெல்ஸ் இல்லாவிட்டால் மார்க்ஸ் இல்லை !
மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் இல்லாவிட்டால் தொழிலாள வர்க்கத்தின் விடியலுக்கு வழி சொல்ல ஆளே இல்லை என்பது வரலாறு !
* 1847ல் ‘நியாயத்தைக் கோருவோர் சங்கம்’ பொதுவுடைமை சங்கமாக மாறி லண்டனில் முதன் முறையாக கூடியது.
சங்கத்தின் விதிகளை வகுக்கவும், கட்சியின் நோக்கம் பற்றியும் விரிவான அறிக்கையை தயாரிக்கவும் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் இருவருக்கும் பொறுப்பு தரப்பட்டது.
அதற்காக இவர்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தான், உலகப் புகழ் பெற்ற ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ (Communist Manifesto)
*முதலாளித்துவ உற்பத்தி முறை, தொழிலாளர்களின் நிலை, பொருளுற்பத்தி முறை, சமுதாயத்தில் அதன் தாக்கம் ஆகியவற்றை விளக்கியும்,
‘தொழிலாளர் ஆதிக்கத்தின் கீழ் தான் வர்க்கப் பிரிவினைகள் இல்லாத சமுதாயம் அமையும்’ என்ற அடிப்படையான மார்க்சிய தத்துவங்களை தர்க்க ரீதியாக சொல்லப்பட்டது தான் – கம்யூனிஸ்ட் அறிக்கை !
* பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்சிலும் மார்க்ஸ் – ஜென்னிக்கு அரசின் தொந்தரவுகள் கைது நடவடிக்கைகள் அரங்கேறின. அங்கிருந்தும் வெளியேற்றப்பட்ட தால் மீண்டும் பாரிசுக்கு சென்றார்கள் !
*1848ம் ஆண்டு ‘புதிய ரைன் லாந்து கெஜட்’ பத்திரிக்கையைத் துவக்கி அதில் தொழிலாளர்கள் பிரச்னை, அந்நிய நாட்டுப் பிரச்னை பற்றி தனது கருத்துகளை தெரிவித்தார்.
* 1849ம் ஆண்டு பாரிசை விட்டு மீண்டும் வெளியேற்றப்பட்டார். அப்போது இங்கிலாந்து சென்றடைந்தார்.
லண்டனில் மார்க்ஸின் குடும்பம் தஞ்சமடைந்தது. மார்க்ஸ் தொழிலாளர்கள் இயக்கத்தை சர்வதேச கண் கொண்டு பார்த்தார்.
அதன் அடிப்படையில் ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்’ மார்க்சியத்தின் அடிநாதமானது !
* லண்டனில் வாழ்க்கை வறுமையில் கழிந்தது. வறுமையில் இறந்து போன தனது குழந்தைக்கு சவப்பெட்டி வாங்க கூட பணம் கிடைக்காமல் கஷ்டப்பட்டார். அப்போதெல்லாம் ஏங்கெல்சின் உதவிக்கரம் காப்பாற்றியது.
*”என் தாய்க்கு என் மீது நிறைய வருத்தம். பணத்தைப் பற்றி எழுதத் தெரிந்ததே தவிர பணத்தை சம்பாதிக்க தெரியவில்லை”… என்று அடிக்கடி மார்க்ஸ் தனது நண்பர்களிடம் தன்னைப் பற்றி சொல்லிக் கொண்டிருப்பாராம் !
* மார்க்ஸின் குடும்பம் லண்டனுக்கு அருகாமையில் ஏழைகள் வசிக்கும் பகுதியில் வாடகை அதிகமில்லாத வீட்டில், வறுமையின் பிடியில் வாழ்ந்தார்கள்.
மார்க்ஸ் தனது சுயமரியாதையை இழக்காமல், தனக்கு பணம் இல்லையே என வருந்தாமல், உலகத்திலுள்ள ஏழை மக்களுக்கு விடுதலை தேடித் தர வேண்டும் என்ற ஒரே நோக்கோடு உயிர் வாழ்ந்தார்!
* 1863 லிருந்து மார்க்சின் கஷ்டங்கள் நீங்க ஆரம்பித்தன.
1864ல் அவரது தாய் மரணத்திற்குப் பிறகு கிடைத்த சொத்தின் பாகம், இவரது நண்பர் வில்லியம் பவுல் இறந்து போவதற்கு முன்பு மார்க்ஸ்க்காக விட்டு சென்ற பணம் அத்தோடு ஏங்கெல்ஸ் இவருக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் படி செய்த ஏற்பாடுகள் மார்க்ஸை வறுமையின் பிடியிலிருந்து காப்பாற்றின !
* தொடர் படிப்பின் காரணமாக, கடின உழைப்பின் காரணமாக, உடல் நோவையும் பொருட் படுத்தாமல் ஏறத்தாழ 15 ஆண்டுகளின் பலனாக மார்க்சின் புகழ் பெற்ற மூலதனம் (காபிடல்) என்ற படைப்பின் முதல் பாகம் 16.08.1867 அன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது !
* மூலதனம் வெளியான பின்னர் மார்க்ஸின் புகழ் எல்லா நாடுகளிலும் பரவத் தொடங்கியது. கம்யூனிசம் என்றால் என்ன என்பதை விவரிக்கும் நூலாக இது அமைந்துள்ளது !
*1873ம் ஆண்டிலிருந்து மார்க்ஸின் உடல்நிலை சீர் கெட்டுக் கொண்டு வந்தது. அந்த நிலையிலும் தொடர்ந்து படித்தார், எழுதினார். மார்க்சின் காதல் மனைவி ஜென்னி 1881 ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி மரணமடைந்தார்!
* தனது துணைவி ஜென்னி மறைந்து 15 மாதங்களில் – 1883ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி மார்க்ஸ் மறைந்தார். லண்டன் ஹைகேட் மயானத்தில் மார்ச் 17ம் தேதி அடக்கம் செய்யப்பட்டார்!
அத்தோடு கார்ல் மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்!
* மார்க்ஸை அடக்கம் செய்த பிறகு அவரின் உயிர் நண்பன் ஏங்கெல்ஸ் ஆற்றிய நினைவஞ்சலி உரை, மார்க்ஸின் பல்வேறு சாதனைகளை நினைவு கூறுவதாக இருந்தது !
அதில் குறிப்பாக :
“மனிதன் எப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்தான் என்பதை டார்வின் கண்டுபிடித்தார் !
மானிட ஜாதியின் சரித்திரம் எப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பதை மார்க்ஸ் கண்டுபிடித்தார் !”
* மார்க்ஸ் மானிட உலகத்திற்கு விட்டுச் சென்ற அறிவுக் கொடையான கம்யூனிஸ்ட் அறிக்கையும் மூலதனமும் இருக்கும் வரை மார்க்ஸ் என்றும் பேசப்படுவார் !
மார்க்சியம் எப்போதும் வழிகாட்டும் !
********************
கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு!
வெ. சாமிநாத சர்மா
மங்கை வெளியீடு
முதல் பதிப்பு 2010
பக்கங்கள் 160
விலை- ரூ.150/-
பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.