நாவல்களை வாசிப்பது எப்படி?

எழுத்தாளர் க. நா. சுப்ரமணியத்தின் விளக்கம்
க. நா. சுப்ரமணியம் எழுதிய, “நாவல்களைப் படிப்பது எப்படி? என்கிற கட்டுரை ஒன்றுள்ளது.
 
அக்கட்டுரையில் மிகச்சிறந்த நாவலை எப்படிப் படிக்க வேண்டும், அப்படிப் படிப்பதன் வழியே எப்படி அந்நாவல் இலக்கியத் தரமான நாவல் என்று கருத வேண்டும், அந்நாவலை மீண்டும் மீண்டும் படிப்பதன் வழியே ஒருவருக்கு விளையும் பயன்கள் என்ன என்பவை பற்றியெல்லாம் விளக்கமாக எழுதியுள்ளார்.
 
அக்கட்டுரையின் மையக்கருத்துகள் இவையே;
 
1. நாவல் படிப்பது சுலபமான காரியம் அல்ல.
நல்ல நாவலைப் புரிந்துகொள்ளக் கவனமும் பொறுமையும் தேவை.
 
2. நாவல்களைப் படிப்பதில் பல நிலைகள் உள்ளன.
வரலாற்று நாவல், காதல் நாவல், மர்மக் கதை போன்றவற்றைப் படிப்பதைவிட, கனமான இலக்கிய நாவல்களைப் படிப்பது அதிக முயற்சியைக் கோரும்.
 
3. நல்ல நாவல் வெறும் பொழுதுபோக்குக்காக எழுதப்படுவதில்லை.
நாவலாசிரியரின் வாழ்க்கை அனுபவங்களையும் உணர்வுகளையும் வாசகருக்குக் கொண்டு செல்வதே அதன் முக்கிய நோக்கம்.
 
4. நாவல் வாசகருக்கு புதிய அனுபவங்களைத் தருகிறது.
ஒருவர் நேரடியாக அனுபவிக்க முடியாத பல வாழ்க்கை அனுபவங்களை நாவல் மூலம் உணர முடியும்.
 
5. நல்ல வாசகர் நாவலின் சாத்தியங்களை உணர்ந்து படிக்க வேண்டும்.
கதை மட்டும் தெரிந்துகொள்வது போதாது; கதாபாத்திரங்கள், சூழ்நிலைகள், ஆசிரியரின் நோக்கம் போன்றவற்றையும் கவனிக்க வேண்டும்.
 
6. நல்ல நாவலை ஒருமுறை மட்டும் படிப்பது போதாது.
ஆசிரியரின் கருத்தையும் நாவலின் அமைப்பையும் முழுமையாகப் புரிந்துகொள்ளக் குறைந்தது மூன்று முறை படிக்க வேண்டும் என்பது ஆசிரியரின் கருத்து.
 
7. முதல் வாசிப்பு – கதையை அறிதல்.
முதல் தடவை படிக்கும்போது வாசகர் முக்கியமாகக் கதையையும் சம்பவங்களையும் கவனிப்பார்.
 
8. இரண்டாவது வாசிப்பு – நுணுக்கங்களை உணர்தல்.
மறுபடியும் படிக்கும்போது முன்பு கவனிக்காத பல விஷயங்கள் தெரியத் தொடங்கும்.
 
9. மூன்றாவது வாசிப்பு – முழுமையான புரிதல்.
மூன்றாவது முறை படிக்கும்போது கதையின் சிறு சிறு பகுதிகள் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புபட்டு நாவலின் கட்டமைப்பை உருவாக்குகின்றன
என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
 
10. நாவலின் ‘கட்டுக்கோப்பு’ மிகவும் முக்கியமானது.
கதையின் சம்பவங்கள், கதாபாத்திரங்கள், சூழ்நிலைகள் ஆகியவை ஒன்றோடொன்று இயல்பாக இணைந்து அமைந்திருப்பதே நல்ல கட்டுக்கோப்பு.
 
11. நாவலாசிரியரின் திறமை பல வகையில் வெளிப்படும்.
* மனிதர்களைப் பற்றிய நுண்ணிய பார்வை
* மனோதத்துவ அறிவு
* சிறந்த கதாபாத்திரங்களை உருவாக்கும் திறன்
* பல்வேறு சூழ்நிலைகளை உருவாக்கும் திறன்
* கதையைச் சுவையாக நடத்திச் செல்லும் திறன்
 
12. தொடர்கதையும் நாவலும் ஒன்றல்ல.
பத்திரிகைகளில் தொடராக வெளிவருவது மட்டுமே ஒரு படைப்பை இலக்கியத் தரமான நாவலாக மாற்றாது.
 
13. இலக்கிய நாவலுக்கு கலைத்தரம் இருக்க வேண்டும்.
கவிதை, சிறுகதை, நாடகம் போன்றவற்றைப் போல நாவலும் உயர்ந்த கலைத்தன்மை கொண்ட இலக்கிய வடிவமாக இருக்க வேண்டும்.
 
14. மட்டமான நாவல்களும் தொடர் கதைகளும் வாசிப்பு தரத்தைத் தாழ்த்தக்கூடும்.
 
எந்தவொரு மிகச்சிறந்த நாவலையும் மூன்று தடவைகளாவது படிக்க வேண்டும்; அப்போதுதான் அதன் கட்டுக்கோப்பு, நுணுக்கங்கள், ஆசிரியரின் நோக்கம் ஆகியவற்றை முழுமையாக உணர முடியும்.
 
மேலும் ஒரு நாவலைப் படிப்பது என்பது கதையைத் தெரிந்துகொள்வது மட்டும் அல்ல; ஆசிரியரின் அனுபவம், மனிதர்களின் மனநிலை, கதையின் அமைப்பு, கலைத்தன்மை ஆகியவற்றை ஆழமாக உணர்வதாகும் என்கிறார் க.நா.சு.
 
நாவல்களின் பட்டியலில் வெளியாகும் இக்காலத்தில் நாவல் வாசிப்பு என்பதில் க.நா.சு வின் இக்கருத்துக்களையும் எந்தவொரு நல்ல வாசகனும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும்.
 
– நன்றி : க. விக்னேஸ்வரன் முகநூல் பதிவு
Comments (0)
Add Comment