தமிழ் நாளிதழ்களை எப்போதும் வாசிக்கும் வழக்கமில்லை. அன்று உடன் யாருமில்லை என்று தற்செயலாகப் பார்வை போனபோது கண்ணில்பட்ட தலைப்பு “சுழலில் மூழ்கி ஒருவர் சாவு”. அதில் கடைசிவரி இவர் ஆதவன் என்ற பெயரில் கதைகள் எழுதி வந்தார்.
ஆதவனை ஏறக்குறைய முழுக்க வாசித்து, அவர் மீது Hero worship செய்த காலமது. சுற்றிலும் நண்பர்கள், தெரிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஆதவன் இறந்த வருத்தத்தை உடன் பகிர்ந்து கொள்ள ஒருவருமில்லை.
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஆதவன் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர்.
அவரது கதைகளின் மையத்தில் பெரும்பாலும் நகர்ப்புற நடுத்தர வர்க்க ஆண்களும், அவர்களின் அகச்சிக்கல்களும், தனிமையும், தோல்விகளும், உறவுச் சிக்கல்களும் நிறைந்திருக்கும்.
அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களின் காலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆதவனின் பார்வை இன்னும் உளவியல் சார்ந்தது. மனித மனத்தின் நுண்ணிய அசைவுகளே அவரது கதைகளின் உயிர்நாடி.
அவரது படைப்புகளில் பெண்கள் எண்ணிக்கையில் குறைவாகவே தோன்றுகிறார்கள்.
ஆனால், தோன்றும் ஒவ்வொரு பெண்ணும் அந்தக் காலத்திய தமிழ்ச் சிறுகதைகளில் வழக்கமாகக் காணப்படும் ‘கற்பின் உருவம்’, ‘தியாகத்தின் சின்னம்’, ‘குடும்பத்தின் காவலர்’ போன்ற ஒரே மாதிரியான பிம்பங்களிலிருந்து விலகி நிற்கிறார்கள்.
அவர்கள் சமூகப் புரட்சியாளர்கள் அல்ல; பெண்ணியக் கோட்பாடுகளைப் பேசுபவர்களும் அல்ல. ஆனால் தங்கள் மனதிற்குள் நிகழும் கணக்குகளையும் தயக்கங்களையும் முடிவுகளையும் தாங்களே தீர்மானிக்கும் மனிதர்கள்.
இந்தக் கட்டுரை, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஆதவனின் சில முக்கியச் சிறுகதைகளில் பெண்கள் எவ்வாறு தங்கள் காலத்தை மீறிய சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஆராய்கிறது.
அப்பர்பெர்த்
அப்பர்பெர்த் கதையின் இந்திராணி, தமிழ்ச் சிறுகதைகளில் அரிதாகக் காணப்படும் ஒரு பெண்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் நிலையில், வருங்காலக் கணவன் அருகிலிருக்கும்போது தனது ஆண் நண்பனின் உடல் நெருக்கத்தை அவள் அனுமதிக்கிறாள்.
இதை ஆதவன் ஒழுக்கச் சிதைவாகவோ அதிர்ச்சிக் காட்சியாகவோ சித்தரிக்கவில்லை.
மாறாக, பெண்ணின் உடல் மீதான முடிவை அவளே எடுக்கிறாள் என்ற அமைதியான உண்மையாகக் காட்டுகிறார்.
1960–70களில் பெண்களின் ஆசைகள் பொதுவெளியில் பேசப்படாத காலத்தில் இந்திராணி மிக வித்தியாசமானவள்.
தாஜ்மஹாலில் பௌர்ணமி இரவு
நளினி காதலனின் “நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?” என்ற முதல் கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கிறாள். அது தயக்கம் அல்ல; சோதனை.
அதே கேள்வியை இரண்டாவது முறையும் அமைதியாகக் கேட்கும் ஆண்தான் திருமண வாழ்க்கையிலும் பொறுமையுடன் நடந்து கொள்வான் என்று அவள் மதிப்பிடுகிறாள்.
காதல் என்பது உணர்ச்சி மட்டுமல்ல; மனித குணத்தைப் பரிசோதிக்கும் ஒரு வெளி என்பதையே ஆதவன் இங்கே முன்வைக்கிறார்.
நளினி உணர்ச்சியால் முடிவு செய்யவில்லை; குணநலனைக் கணக்கிடுகிறாள். அந்த உளவியல் முதிர்ச்சியே அவளை நினைவில் நிற்கும் கதாபாத்திரமாக மாற்றுகிறது.
தைரியம் வந்த போது
ரேணுகா, தன்னை விரும்பிய இளைஞனுக்கு முகம் கொடுக்காமல் விலகுகிறாள். ஆனால் அவன் வேறொருத்தியைத் திருமணம் செய்து கொண்டதும் தாங்க முடியாமல் அழுகிறாள்.
இது முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால் மனித மனம் நேர்கோட்டில் இயங்குவதில்லை. காதலை நிராகரிப்பது, காதலை இழக்க விரும்புவதாக அர்த்தமல்ல.
“என்னை அவன் இன்னும் விரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற மறைமுக ஆசையும், “நான் இன்னும் முடிவு செய்யவில்லை” என்ற மனநிலையும் ஒரே நேரத்தில் இயங்க முடியும். இந்த உளவியல் சிக்கலை எந்தத் தீர்ப்பும் வழங்காமல் பதிவு செய்வதே ஆதவனின் பலம்.
காலடியோசை
இந்தக் கதையின் மனைவி, இரவில் தனியாக நடந்து வருகிறாள். பின்னால் காலடியோசை கேட்டு அச்சப்படுகிறாள்.
அந்த நேரத்தில் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் ஸ்கூட்டரில் வருகிறாயா என்று கேட்க, தயக்கமின்றி ஏறி வீட்டுக்குச் செல்கிறாள். பின்னால் வந்தது அவளது கணவன் என்பது பின்னர்தான் தெரியவருகிறது.
இன்றைய வாசகனுக்கு இது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், திருமணமான பெண் மற்றொரு ஆணின் ஸ்கூட்டரில் இரவில் பயணிப்பது இலக்கியத்தில் கூட அரிதான காட்சி.
ஆதவன் இதை ஒழுக்கப் பிரச்சினையாக அல்ல, பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட இயல்பான முடிவாகக் காட்டுகிறார்.
நிழல்கள்
காதலன், காதலியை இரவில் தனது அறைக்கு வர அழைக்கிறான். அவள் முதலில் மறுக்கிறாள். பின்னர் வர சம்மதிக்கிறாள். ஆனால் அந்தச் சமயத்தில் காதலன், “உன் நம்பிக்கையே போதும்; நீ வர வேண்டியதில்லை” என்று கூறுகிறான்.
இந்தக் கதையின் மையம் காதலன் அல்ல; காதலி. அவள் சம்மதிப்பது உடலுறவுக்காக அல்ல; நம்பிக்கைக்காக.
அவளது சம்மதம் கிடைத்தவுடன் அவன் மறுப்பதும், அந்த நம்பிக்கையை உடலாக மாற்ற மறுப்பதும் கதைக்கு உயர்ந்த உளவியல் பரிமாணத்தை அளிக்கிறது. பெண் இங்கு ஆசையின் பொருள் அல்ல; நம்பிக்கையின் மையம்.
அந்த மரம் சாட்சியாக நானும் அவர்களும்
இந்தக் கதையில் மனைவி உண்மையில் தவறு செய்கிறாளா என்பதைக் காட்டிலும், கணவனின் மனதில் உருவாகும் சந்தேகமே முக்கியம்.
பாத்ரூமிலிருந்து பார்க்கும்போது மனைவியும் அண்டை வீட்டுக்காரரும் சிரித்துப் பேசுகிறார்கள். Flush ஒலி கேட்டதும் இருவரும் அமைதியாகிறார்கள்.
அதற்குப் பிறகு உண்மை என்ன என்பதை ஆதவன் சொல்ல மறுக்கிறார். இந்த மௌனமே கதையின் இலக்கிய வெற்றி.
பெண்ணை குற்றவாளியாக்காமல், ஆணின் மனத்தில் சந்தேகம் எவ்வாறு கற்பனையை உருவாக்குகிறது என்பதையே கதை ஆராய்கிறது. வாசகனே தீர்ப்பளிக்க வேண்டும்.
காதலின் முகங்கள்
மீரா, காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், முதலிரவே உடலுறவைத் தவிர்க்க விரும்புகிறாள்.
ஆனால், கணவன் குளியலறையில் விழுந்து காயமடைந்தபோது அவனுக்கு ஆறுதல் கூறும் தருணத்தில், அவளுடைய மனநிலை மாறுகிறது.
உடலுறவு என்பது திருமணச் சடங்கின் கட்டாயத் தொடர்ச்சி அல்ல; உணர்ச்சி முதிர்வின் விளைவு என்பதை ஆதவன் மிக நுட்பமாகச் சொல்கிறார்.
உடலுக்கான சம்மதம் மனத்தின் நிலையைப் பொறுத்தது என்ற கருத்து, இன்று “consent” என்று பேசப்படும் எண்ணத்திற்கு நெருக்கமானது.
ஆதவனின் பெண்கள் வெளிப்படையான புரட்சியாளர்கள் அல்ல. அவர்கள் கோஷம் எழுப்புவதில்லை; சமூக அமைப்புகளை உடைப்பதில்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனதின் உரிமையாளர்கள்.
காதலை எப்படி அணுக வேண்டும், யாரை நம்ப வேண்டும், எப்போது சம்மதிக்க வேண்டும், எப்போது மறுக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்கள் தாங்களே தீர்மானிக்கிறார்கள்.
இதுவே ஆதவனை அவரது சமகால எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. பெண்களை அவர் ஒழுக்கத்தின் குறியீடாகவோ, ஆணின் கதையை முன்னெடுக்கும் துணைப் பாத்திரங்களாகவோ பயன்படுத்தவில்லை.
மாறாக, மனித மனத்தின் சிக்கல்களை வெளிப்படுத்தும் சுயமான மனிதர்களாக உருவாக்கினார்.
இன்று இந்தக் கதைகளை வாசிக்கும்போது அவை பெண்ணியப் பிரகடனங்களாகத் தெரியாமல் இருக்கலாம்.
ஆனால், அவை எழுதப்பட்ட காலத்தை நினைவில் வைத்துப் பார்த்தால், ஆதவன் பெண்களைப் பற்றிய தனது பார்வையில் தன் காலத்தை முந்திய எழுத்தாளராகத் தென்படுகிறார்.
அவரது பெண்கள் சமூக விதிகளை வெளிப்படையாக எதிர்க்கவில்லை; ஆனால் அவற்றை அமைதியாக மீறுகிறார்கள்.
அந்த அமைதியான மீறல்தான் ஆதவனின் சிறுகதைகளுக்கு இன்னும் நவீனத் தன்மையையும் காலத்தை வெல்லும் உயிரையும் அளிக்கிறது.
சரவணன் மாணிக்கவாசகம்
நன்றி – யாவரும்.காம்