வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு என்ன மதிப்பு?

டெல்லி அரசியலையே களங்க வைக்கும்படி இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது.

தங்கள் கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி போராட மாணவர்கள் திறண்ட போது, அவர்களுக்கு துணையாக அங்கு வந்து 20 நாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரத்தில் இருந்து தன்னுடைய உடலை வருத்திக் கொண்ட சமூக சேவகரான சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அழைத்துச்செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

நாடாளுமன்ற கட்டடத்திற்கு முன்பும், பிரதமர் வீட்டிற்கு அருகேயும் போரட்டத்தை நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறை கடுமையான தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அந்தத் தாக்குதல் காட்சிகள் பார்க்கிறவர்களை பதைபதைக்க வைத்திருக்கின்றன.

எந்தவிதமான சுயநலமும் இல்லாமல், கல்வி, நீதி உள்ளிட்ட துறைகளில் திருத்தங்கல் வேண்டும் என்பதை முன்னிறுத்தி போராடிய மாணவர்கள் மீதுதான் கட்டற்ற வன்முறைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

பல தேசிய ஊடகங்கள் அந்த தாக்குதலின் வீரியத்தை வெளிப்படுத்தாத நிலையில், வழக்கம்போல சமூக வலைத்தளங்கள் தான் அந்த தாக்குதலைக் காட்சிப்படுத்தியிருக்கின்றன.

பல்லாயிரக்கணக்கில் டெல்லியில் திரண்டு கண்ணீர் புகைக் குண்டுகளை எதிர்கொண்டு, காவல்துறையின் கடுமையான தாக்குதல்களுக்கு இரையாகி தங்களை வதைத்துக் கொண்ட அந்த இளைஞர்கள் எதற்காக போராடினார்கள்?

அவர்கள் முன்னிறுத்திய கோரிக்கைகள் தான் என்ன? அறிமுகப்படுத்தியதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளுக்கு இலக்காகி வருகிற நீட் தேர்வு முறையிலும் அதில் நடந்த கேள்வித்தாள் கசிவிலும் வெளிப்பட்ட முறைகேடுகளை கண்டித்து, மத்திய கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.

நீதிபதிகள் ஓய்வு பெற்ற பின்பு எந்த அரசுப் பொறுப்பையும் ஏற்கக் கூடாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் தொலைக்காட்சி நிறுவனங்களின் செயல்பாடு என்று பல்வேறு நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து இயங்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்கின்ற இயக்கத்தைத் துவக்கக் காரணமாக இருந்தது யார்?

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தனது பேச்சிற்கிடையே, இந்தியா முழுக்க பரவியிருக்கிற வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களைக் குறித்து கரப்பான் பூச்சிகள் என்கின்ற அழுத்தமான சொற்றொடரை வீச, கரப்பான் பூச்சி என்கின்ற பெயரிலேயே ஒரு கட்சித் துவக்கப்பட்டு மிகக் குறுகிய காலத்தில்,

அதில் பல லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றுசேர்ந்து தங்களுக்குள் சில கட்டுப்பாடுகளை விதித்து உண்ணாவிரதம், எளிய முற்றுகைப் போராட்டம் என்று காந்திய வழிகளைப் பின்பற்றிதான் இந்தப் போராட்டமே நடந்திருக்கிறது.

எந்தவிதமான அரசியல் சார்பற்று துவக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில், தன்னை இணைத்துக் கொண்டு போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர்களான ராகுல்காந்தியும், பிரியங்காவும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதில் தொடர்ந்து இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் மத்திய அரசுக்கு எதிரான கண்டனப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க டெல்லியின் இன்னொரு புறத்தில் தங்களுக்கான கோரிக்கைளுடன் இன்னும் வலுவானபடி ஒன்றுசேர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் நம் இளைஞர்கள்.

ஏற்கனவே டெல்லியில் மிக நீண்டகாலம் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி அவர்களில் சிலர் உயிரிழந்த பிறகே அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு உயிர் கிடைத்தது.

தற்போது மாணவர்கள் அத்தகைய கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தியும், இந்த நேரம் வரை மத்திய அரசு அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

இந்த நேரத்தில் தமிழகத்தில், 2017-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மெரினா கடற்கரையிலும், மதுரை, கோவை உள்ளிட்ட மாநகரங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி என்கின்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து எந்தக் கட்சியின் பின்புலமும் இல்லாமல், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அமைதியாக ஒன்றுசேர்ந்து எத்தகைய வரம்பு மீறல்களும் இல்லாமல் தங்களுக்குள் நேசமான ஒற்றுமையை வெளிக்காட்டியபடி போராடுவதில் காட்டிய எழுச்சி பல அரசியல் கட்சிகளை மிரள வைத்தது.

குறிப்பிட்ட சில கட்சிகள் அந்தப் போராட்டக் களத்திற்குள் உள்ளே நுழைய முயன்றபோது, போராடிய இளைஞர்கள் அவர்களின் நுழைவையும் அவர்களின் உதவியையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

எந்தவிதமான பணமும் கொடுக்கப்படாமல் தன்னிச்சையான எழுச்சியுடன் அன்றைக்கு ஒன்று சேர்ந்த மாணவர்களின் எழுச்சி ஆட்சியாளர்களை அதிர வைத்து, சிந்திக்கவும் வைத்து ஜல்லிக்கட்டு நடத்துவற்கான அனுமதியைப் பெற்றுத் தந்தது.

தங்களுக்கான சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தாமல், பொதுநலனை முன்வைத்து எழுச்சியுடன் போராடினால், தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வைக்க முடியும் என்பதை செயல்வடிவத்தில் மெரினா கடலோரம் நிரூபித்துக் காட்டினார்கள் நம் தமிழகத்தின் இளைஞர்கள்.

ஆனால், அப்படி தன்னியல்பாக இளைஞர்கள் ஒன்றிணைவதையும் போராடுவதையும் அன்றைய ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.

போராட்டம் நடத்திய இறுதிநாளில் அவர்கள் மீது பெரும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

அவர்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் புனையப்பட்டன. அந்த இளைஞர்களுக்கு தங்களது வீடுகளில் அடைக்கலம் கொடுத்த நமது மீனவர்கள் கூட காவல்துறையால் தாக்கப்பட்டார்கள்.

இளைஞர்களின் கோரிக்கைக்கு அன்றைய ஆட்சியாளர்கள் தந்த எதிர்வினை இது.

அந்தத் தாக்குதல் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டும் இன்று வரை அந்தத் தாக்குதலை நடத்தச் சொன்னவர்கள் யார்? எதனால் அத்தகைய வரம்பு மீறிய வன்முறை நமது இளைஞர்கள் மீது நடத்தப்பட்டது? என்பது வெளிவரவே இல்லை.

ஏறத்தாழ டெல்லியில் சமூகத்தை மிகவும் நேசித்த உணர்வுடன் பத்திரிகையாளர்களும், சமூக சேவகர்களும் முன்னெடுத்திருக்கிற கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தை நியாயமான முறையில் எப்போது முடிவுக்கு கொண்டு வரும் மத்திய அரசு?

  • யூகி
Comments (0)
Add Comment