உலகை வியக்க வைத்த மியாசாகி மாம்பழம்!

 ஜூலை 22 : தேசிய மாம்பழ தினம்

முக்கனிகளில் முதன்மையானதும், பழங்களின் இராஜா என்று உலகெங்கும் போற்றப்படுவதுமான மாம்பழம், பல கோடிக்கணக்கான மக்களின் நாவிற்கு விருந்தளிக்கும் உன்னதமான உணவாகப் பார்க்கப்படுகிறது.

அப்படிப்பட்ட இந்த பழத்தின் பெருமையை கூறும் வகியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 22 ஆம் தேதி தேசிய மாம்பழ தினம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் பண்பாடு, பொருளாதாரம் மற்றும் விவசாயத்தில் மாம்பழம் வகிக்கும் மகத்தான பங்கை உலகிற்கு நினைவூட்டவும், அதன் உன்னத மருத்துவக் குணங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வகைகளை உலகளவில் பிரபலப்படுத்தவும் இந்த சிறப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

மாம்பழத்தின் கம்பீர வரலாறு:

தோற்றம் : மாம்பழத்தின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் ஆதி தாயகம் இந்தியா மற்றும் தென் ஆசியப் பகுதிகளாகும்.

கி.மு. 5 ஆம் நூற்றாண்டு வாக்கில் வணிகர்கள் மற்றும் தேசப் பயணிகளின் மூலமாக மாம்பழம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது.

பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய மாலுமிகள் வழியாக பிரேசில், ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலகின் பல கண்டங்களுக்கும் சென்றடைந்தது.

பண்பாட்டுச் சிறப்பு: சங்க இலக்கியங்கள் முதல் காவியங்கள் வரை மாம்பழத்தின் சிறப்புகள் சொல்லோவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.

தமிழ் மொழியின் “மாங்காய்” என்ற சொல்லில் இருந்தே ஆங்கிலத்தில் “மேங்கோ” என்ற சொல்லும் உருவானது.

இந்தியாவில் மங்கல நிகழ்ச்சிகளில் மாவிலைத் தோரணம் கட்டுவதும், மாம்பழத்தைப் பரிசளிப்பதும் காலம் காலமாகத் தொன்று தொட்டு தொடரும் நற்பழக்கம் ஆகும்.

உலகின் மிக விலையுயர்ந்த மியாசாகி மாம்பழம் :

உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழ வகை ஜப்பான் நாட்டின் மியாசாகி (Miyazaki) ஆகும்.

ஜப்பான் நாட்டின் மியாசாகி மாகாணம். இதன் அடர்ந்த சிவப்பு நிறம் மற்றும் அரிய மதிப்பால் இது ‘சூரியனின் முட்டை’ என்று அழைக்கப்படுகிறது.

சர்வதேசச் சந்தையில் ஒரு கிலோ மியாசாகி மாம்பழம் பல லட்ச ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதிக விலைக்கான முதன்மை காரணங்கள்:

சிறப்புப் பராமரிப்பு:

ஒவ்வொரு பழமும் பசுமைக் குடில்களில் தனித்தனி வலைகள் மூலம் தாங்கப்பட்டு, அனைத்துப் பக்கங்களிலும் சூரிய ஒளி சீராகப்படுமாறு மிகக் கவனமாக வளர்க்கப்படுகிறது.

இயற்கையான அறுவடை: பழங்கள் மரத்திலிருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுவதில்லை.

மரத்திலேயே முழுமையாகப் பழுத்து, தானாக வலைக்குள் விழும்போது மட்டுமே அன்போடு சேகரிக்கப்படுகின்றன.

தனித்துவமான சுவை :

நார்ச்சத்தே இல்லாமல் நாவில் கரையும் மென்மை, மிதமிஞ்சிய இனிப்பு மற்றும் தனித்துவமான நறுமணம் கொண்டதால், ஜப்பானில் இது மதிப்புமிக்க சொகுசுப் பரிசாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் இதன் சாகுபடி சமீபகாலமாக இந்திய விவசாயிகளிடையேயும் வீட்டுத் தோட்ட ஆர்வலர்களிடையேயும் மியாசாகி மாம்பழம் பயிரிடும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசம் (ஜபல்பூர்), பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் (அயோத்தி) மற்றும் கர்நாடகா (உடுப்பி) போன்ற மாநிலங்களில் சிலர் தங்கள் தோட்டங்களிலும் மாடித் தோட்டங்களிலும் இதை வெற்றிகரமாக வளர்த்துப் பழங்களை அறுவடை செய்துள்ளனர்.

இந்தியாவில் உள்ளூர் பழக்கடைகளில் இது சாதாரணமாகக் கிடைக்காது.

ஆன்லைன் மற்றும் இறக்குமதிச் சந்தைகள் :

சில ஆன்லைன் சொகுசுப் பழ விற்பனைத் தளங்கள் (Exotic Fruit Stores) மற்றும் இறக்குமதி செய்யப்படும் பழங்கள் விற்கும் உயர் ரகக் கடைகளில் சீசனின் போது (மே – ஜூலை) முன்பதிவு அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தியாவின் விலை நிலவரம் :

ஜப்பானில் ஏலங்களில் விற்கப்படும் அதே பல லட்ச ரூபாய் அளவிற்கு இல்லாவிட்டாலும், இந்தியாவில் விளையும் அல்லது இறக்குமதி செய்யப்படும் மியாசாகி பழங்கள் கிலோவிற்கு ₹1,500 முதல் ₹4,500 வரை தரத்தைப் பொறுத்து விற்பனை செய்யப்படுகின்றன.

மாம்பழம் என்பது வெறும் சுவையான பழம் மட்டுமல்ல; அது நமது பாரம்பரியம், பண்பாடு, மருத்துவம் மற்றும் சுவையின் கம்பீர அடையாளம். இத்தகைய சிறப்புமிக்க மாம்பழத்தின் மகத்துவத்தைப் போற்றி மகிழ்வோம்.

– யாழினி

Comments (0)
Add Comment