ஊர் சுற்றிக் குறிப்புகள் :
தமிழகத்து மேடைகளிலும் பொது வெளிகளிலும் ஆபாசப் பேச்சுக்கள் ஓர் அங்கத்தைப் போலவே தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன.
இப்படிப்பட்ட ஆபாசப் பேச்சுக்களை 1960-களுக்கு முன்பிருந்தே மாநிலக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பேசி வந்திருக்கிறார்கள்.
தனிப்பட்ட முறையில் கொச்சையாக தாக்குவதும் தமிழக அரசியலில் தொடர்ந்து நடந்திருக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரின் நிறத்தைக் குறிப்பிட்டு அவரைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.
சில மேடைகளில் காங்கிரஸ் தலைவர்கள் அத்துமீறி கொச்சையாக மற்றவர்களைத் திட்டிப் பேசும்போது மேடையில் அமர்ந்திருந்த காமராஜர் அத்தகைய பேச்சை தடுத்து நிறுத்திய நிகழ்வுகளும் இங்கு நடந்திருக்கின்றன.
பத்திரிகைகளில் மஞ்சள் பத்திரிகைகள் என்று தனி ரகம் இருந்து வந்திருப்பதைப் போலவே பேச்சாளர்களிலும் ஆபாசமாகப் பேசுவதற்கென்றே பல கட்சிகளைச் சேர்ந்த பேச்சாளர்கள் இருந்திருக்கிறார்கள்.
குறிப்பாக திமுக மேடைகளில் தீப்பொறி ஆறுமுகமும் வெற்றிகொண்டானும் தமிழகம் எங்கும் சளைக்காமல் அத்தகைய பேச்சை ஏராளமானக் கூட்டத் திரள்களுக்கிடையே பேசி வந்திருக்கிறார்கள்.
காங்கிரஸிலும் அத்தகையப் பேச்சாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், அந்த பேச்சாளர்கள்கூட நேரடியாக குறிப்பிட்ட தலைவர் அல்லது தலைவியின் பெயரைக் குறிப்பிடாமல் சுற்றி வளைத்து சிலேடையாகத் தான் பேசுவார்கள்.
அதை வேகமாகச் சொல்லிவிட்டு, “இதைப் புரியறவன் புரிஞ்சிக்கங்க” என்றும் “உங்களுக்கு விளக்கம் சொல்லியே ஓய்ஞ்சுப் போக வேண்டியிருக்கு” என்றும் ஆதங்கப்பட்டிருக்கிறார்கள்.
அப்படி நேரடியாகப் பேசும்போது மேடைக்குக் கீழே கொந்தளிப்புகள் எழுந்து சம்மந்தப்பட்ட பேச்சாளர்கள் மேடையை விட்டு இறங்கியதும் தாக்கப்பட்டதும் தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்திருக்கிறது.
சில பேட்டிகளில் சம்மந்தப்பட்ட பேச்சாளர்களே இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் மாநாடுகளில் கூட இத்தகைய பேச்சாளர்கள் ஊறுகாயைப் போல பேசப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
அண்மைக் காலத்தில் தமிழகத்தில் அரசியல் மேடைகளில் அதிலும் தேர்தல் நெருங்குவதற்கு முன்பிருந்தே இத்தகைய ஆபாசப் பேச்சுக்கள் மிகவும் அதிகரித்திருக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொது மேடையில் தவழ்ந்து ஒரு பெண்மணியின் காலைப் பிடித்தது பற்றி அப்போது உதயநிதி ஸ்டாலின் பேச, பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி – பாலிடாயில் குடித்ததெல்லாம் இப்போது பஞ்ச் டயலாக் பேசுது என்றும் பேசியதெல்லாம் தாராளமாகவே நடந்தது.
தேர்தல் முடிந்தபிறகு இத்தைகைய அத்துமீறிய பேச்சுக்கள் இன்னும் கூடுதலாக அதிகரித்து விட்டன.
திமுகவின் துணைப் பொதுச்செயலாளரான ஆ.ராசா கடுமையான சில சொற்களை சொல்லத் துவங்கிய பிறகு அதைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.எஸ்.பாரதி அவ்வப்போது இத்தகைய பேச்சுக்களைப் பேசிக்கொண்டே இருந்தார்.
கூடவே அனிதா ராதாகிருஷ்ணன் துவங்கி மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ கடுமையாக பேசியது வரை தொடந்தபோதும் தஞ்சாவூரில் உதயநிதி பேசிய பேச்சு, அவரை விசாரணை செய்யும் அளவுக்கு இழுத்துச் சென்றது.
மிக அண்மையில் சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, தவெகவிற்கு ஓட்டுப்போட்டவர்களுக்கு ‘நல்ல சாவே வராது’ என்கிற அளவுக்கு பேசியிருக்கிறார்.
கொளத்தூரில் அழுதபடியே பேசியவர்கள் இன்னொரு ரகம். அங்கும் கொளத்தூரில் திமுகவுக்கு வாக்களிக்காத வாக்காளர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே தொலைக்காட்சி விவாதங்களிலும் நேரடியாக ஒருமையில் திட்டிக்கொள்வதில் கடுமையான சொற்பிரயோகங்களை அள்ளி வீசுவது கூடியிருப்பது மாதிரியே, தற்போது நடந்து வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் கடுமையான பேச்சுக்கள் எழுந்திருப்பதை கல்வி அமைச்சரான ராஜ்மோகன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
சில கடுமையான வார்த்தை பிரயோகங்களும் ஒருமையான பேச்சுக்களும் கைகளை ஓங்கி அடிக்க வருவது மாதிரி வருவதும் நல்லதல்ல இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்திருக்கிறார்.
முன்பெல்லாம் வீதியோரத்தில் ஒதுங்கியிருக்கிற சாக்கடைக்கான கால்வாய் மாதிரி இருந்த ஆபாசமான, கடுமையான தடித்த சொற்பிரயோகங்கள் தற்போது ஊற்று நீரைப் போல பொதுமேடைகள் துவங்கி சட்டசபை வரை சலசலத்து ஓடிக்கொண்டிருக்கின்றன.
ஆனால், இப்படிப்பட்ட எல்லைமீறலான பேச்சுகளை பேசுகிறவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ இல்லையோ, வாக்களிக்க கடமைப்பட்ட வாக்காளப் பெருமக்கள் இதையெல்லாம் மறக்காமல் தங்கள் நினைவில் வைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை மட்டும் இப்படிப் பேசுபவர்கள் கவனத்தில் கொள்ளட்டும்.
– லியோ