தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்!

பிரதமர் மோடி வேண்டுகோள்

போர் பாதிப்புகள் உள்ளிட்ட இக்கட்டான சூழலுக்கு நடுவில் இந்தியா 7.8% வளர்ச்சியை எட்டியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சியை எட்டியதற்காக நாட்டின் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களின் கூட்டு முயற்சியாலும் உறுதியாலுமே இது சாத்தியமானது. எங்கும் மோதல்கள், போர்கள் மற்றும் நிலையற்ற சூழல் நிலவிய போதிலும் இந்தியா இந்த மைல் கல்லை எட்டியுள்ளது.

எல்லா திசைகளிலிருந்தும் போர்ச் செய்திகள் வருகின்றன, உலகம் நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ளது. விநியோகச் சங்கிலிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

2020-ல் கோவிட் காலம் தொடங்கியதிலிருந்து, உலகம் முழுவதும் நிலையான சூழல் இல்லை. ஆனாலும், இந்தியா தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறது.

நாம் இந்த வேகத்தைத் தக்கவைக்க வேண்டும். நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும்; அதற்கு நாம் சுயசார்பு இந்தியாவாக மாற வேண்டும்.

சுதேசி மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை ஆகிய மந்திரங்களைப் பின்பற்ற வேண்டும்.

சுற்றுலாவுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதையோ, வெளிநாடுகளில் திருமணங்களை நடத்துவதையோ தவிர்க்க வேண்டும்.

‘இந்தியாவில் திருமணம்’ என்ற மந்திரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல், அவசியமென்றால் ஒழிய தங்கம் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

சுதேசி மற்றும் சுயசார்பு ஆகியவற்றை நாம் எவ்வளவு அதிகமாக வலியுறுத்துகிறோமோ, அந்தளவுக்கு சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் இளைஞர்களிடம் ஒரு ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை’ ஒப்படைப்போம் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது.

இன்றைய நமது கடின உழைப்பின் மூலம், இளம் தலைமுறையினரின் கனவுகளை நாம் நிச்சயமாக நனவாக்குவோம்.

நமது முயற்சிகளில் எவ்விதக் குறைவும் இருக்கக்கூடாது. நமது கொள்கைகள் உறுதியானவை, நோக்கங்கள் தூய்மையானவை.

140 கோடி இந்தியர்களின் கூட்டு வலிமை நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல ஒன்றிணைகிறது.

உறுதியான முடிவை எடுப்போம், அந்த முடிவை நனவாக்க ஒன்றிணைந்து முன்னேறுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment