நவீன மயமாக்கலை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் சராசரி வாழ்க்கைத் தரத்தை உலகத்தரமாக மாற்றும் முயற்சியில் மத்திய கிழக்கு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
துபாயில், இயற்கைச் சூழலும் செயற்கையும் இணைந்து கைகோர்த்து செல்லுமாறு நாட்டின் உள் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் துபாயின் தொலைநோக்கு திட்டம் 2030 அனைவரும் வியக்கும் அளவு செயல் வடிவம் பெற்று வருகிறது.
துபாய் தனது பொருளாதாரத்தை உயர்த்தவும் மேம்பட்ட வாழ்க்கை முறையை நடைமுறைப்படுத்துவதற்கும் கச்சா எண்ணெய் வருவாயை மட்டும் நம்பியிராமல் செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின் மற்றும் மெட்டாவர்ஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.
இணையத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக கருதப்படும் மெட்டா வெர்ஸ் ஒரு மெய் நிகர் டிஜிட்டல் உலகமாகும்.
இவ்வுலகத்தில் எதார்த்தமாக வாழ்வது போன்ற ஒரு உணர்வைத் தருவது இதன் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
வர்த்தகம் செய்யும் வசதிகள் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள நண்பர்களுடன் இணைந்து விவாதிப்பது, அலுவலக கூட்டங்களில் பங்கேற்பது, விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற எண்ணற்ற பணிகளை மேற்கொள்ள முடியும்.
இந்த நகரை பசுமை நகராக மாற்ற 400 கோடி திர்ஹம் முதலீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் மரம் நடுதல் மற்றும் 120 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் அண்டை நாடான சவுதி அரேபியாவின் தொலைநோக்கு திட்டமானது எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்தில் இருந்து விடுபட்டு உலகளாவிய முதலீடுகள், தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச வளர்ச்சிக்கு வித்திடுவது ஆகியவை ஆகும்.
திட்டத்தின் ஒரு பகுதியாக உலகமே ஆச்சரியப்படும் வகையில் நியோம் என்ற மெகா நகரம் உருவாகி வருகிறது.
இதன் முக்கியமான அம்சம் தான் தி லைன். சாலைகள் இல்லாமல் கார்கள் இல்லாமல் பசுமை மற்றும் மாசற்ற சூழலை வைத்தே உருவாகும் கற்பனைக்கும் எட்டாத ஒரு நகரமாக இது அமைய உள்ளது.
இந்த நகரம் 170 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு நேரான கோடு போல இருக்கும்.
இரண்டு பிரம்மாண்ட கண்ணாடி சுவர்களுக்கு இடையில் இந்த நகரம் அமைய உள்ளது.
மலைகள், பாலைவன மணல் பரப்பு மற்றும் கடற்கரை என அனைத்து நில பரப்புகளையும் கடந்து இது நீள்கிறது.
இவ்வளவு பெரிய உயரமான நகரத்தை நிலைநிறுத்த பொறியாளர்கள் வியக்கத்தக்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தூண்களைத் துளைக்கும் பணிகளுக்காக அதிநவீன ஜிபிஎஸ் வழிகாட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது நடைபெற்று வரும் முதல் கட்டப் பணிகள் அதிவேகம் எடுத்துள்ளன.
இதில் 46 ஆயிரம் பேர் அமரக்கூடிய ஒரு நவீன ஸ்டேடியம் கட்டப்படவுள்ளது. பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ஒரு மெரினா அமைக்கப்பட உள்ளது.
இந்நகரத்தில் பயணம் மேற்கொள்ள காரை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நகரத்தின் அடித்தளத்தில் செல்லும் அதிவேக ரயில் மற்றும் வெவ்வேறு அடுக்குகளில் இயங்கும்பொது போக்குவரத்து மூலமே மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக செல்ல முடியும்.
கடலுக்கு அருகில் இவ்வளவு பெரிய கட்டுமானம் நடப்பதால் நிலத்தடி உப்பு நீர், சிமெண்ட் மற்றும் இரும்பை அரிப்பதைத் தடுக்க 500-க்கும் மேற்பட்ட ராட்சத கிணறுகள் மூலம் தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் கட்டுமானத்திற்கு தேவையான கலவைகளை உற்பத்தி செய்ய அந்த இடத்திலேயே பிரமாண்ட ஆலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இயற்கையோடு இணைந்து வாழும் அதே வேளையில் அதிநவீன தொழில்நுட்பத்தின் உச்சத்தைத் தொடப் போகும் இந்தத் திட்டங்கள் எதிர்கால உலகின் ஒரு முன்னோடியாக திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.
S.வாணி