புதிய வரலாறு படைக்கும் சோனம் வாங்சுக்!

நீட் தேர்வு தொடங்கி சி.பி.எஸ்.இ தேர்வு வரை மோசடிகள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருப்பதால் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.

குறுக்கு வழியில் பணம் படைத்தவர்கள் பாஸ் ஆவதற்கு ஆட்சியாளர்களே ஒத்துழைப்பது கொடுமையிலும் கொடுமை!

இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி நேர்மையான விசாரணைக்கு உடன்பட வேண்டும் என உண்ணாவிரம் இருந்து கொண்டிருக்கிறார் சோனம் வாங்சுக்!

காந்தியவாதியான சோனம் வாங்சுக் அடிப்படையில் ஒரு பொறியாளர். இராணுவத்தில் பணியாற்றியவர். எல்லாவற்றுக்கும் மேலாக லடாக் மக்களின் பெரும் தலைவர். ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்படாதவர்.

சுற்றுச் சூழல் அறிஞர், புதுமைச் சிந்தனை கொண்ட கல்வியாளர், பன்முக ஆற்றலாளர்.. தன் வாழ்க்கையையே மனிதகுல மேம்பாட்டிற்கு அர்ப்பணித்தவர்.

இவரது சுற்றுச் சூழல் போராட்டங்கள் குறித்து நமது அறம் இணைய இதழில் தொடர்ந்து கவனப்படுத்தி வருகிறோம்.

கரப்பான் பூச்சி ஜனதா என்று இயக்கம் ஆரம்பித்த லட்சோப லட்சம் இளைஞர்கள் தற்போது சோனம் வாங்சுக் உடல் நிலை நாளுக்கு நாள் எடை குறைந்து வருவது கண்டு கலக்கம் அடைந்துள்ளனர்.

நமக்காக ஒரு மனிதர் தன்னைத் தானே வருத்திக் கொண்டு சிறுகச் சிறுக உயிர் இழக்கத் துணிந்துவிட்டாரே எனத் துடிக்கிறார்கள்!

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், நடிகர்கள் நசீருதீன் ஷா, ரத்னா பதக் ஷா , ஓமி வைத்யா, பொருளாதார அறிஞர் ஜெயதி கோஷ்..ஆகியோர் ஆதரவும், கவலையும் தெரிவித்துள்ளனர்.

இதே போல எதிர்கட்சித் தலைவர்கள் சிலரும் சோனம் வாங்சுக்கை சந்தித்து அவரது அறப் போராட்டத்திற்கு அதரவு தெரிவித்து வருகின்றனர்.

திரிணமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் குறித்து பேசியும், எழுதியும் வருகின்றனர்.

மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைத்து அரசியல் தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் பேச வேண்டும்.

தற்போது இளைஞர் சக்தியால் ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக முதல்வர் விஜய் சோனம் வாங்சுக் பற்றி நிச்சயம் பேச வேண்டும்.

காரணம், முதல்வர் விஜய் தன்னையறியாமலே சோனம் வாங்சுக்கோடு சம்பந்தப்பட்டுள்ளார்.

சோனம் வாங்சுக்கின் இளமை கால வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அமீர்கான் எடுத்தப் படம் தான் ‘3 இடியட்’.

கல்விச் சீர்திருத்தங்களை மையப்படுத்திய புன்சுக் வாங்டு (ராஞ்சோ) என்ற அந்த அமீர்கான் கதாபாத்திரம் சோனம் வாங்சுக்கின் உண்மையான வாழ்க்கையையும், அவரது கல்வி சீர்த்திருத்தங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.

தமிழில் அது ‘நண்பன்’ என்ற படமாக இயக்குநர் ஷங்கரால் எடுக்கப்பட்ட போது, நமது இன்றைய முதல்வர் விஜய் சோனம் வாங்சுக்கை பிரதிபலிக்கும் பாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

3 இடியட் படத்தில் நடித்த நடிகர் ஓமி வைத்யா சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவாக பேசி வருவது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சோனம் வாங்சுக்கிடம் இருந்து உத்வேகம் பெற்று படம் எடுக்கத் தெரிந்த அமீர்கானுக்கு அவருக்கு ஆதரவு தெரிவிப்பதில் என்ன பயமோ? என்று இளைஞர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அமீர்கான் பேச வேண்டும் என்றால், அவரை விட அதிக பொறுப்புள்ள தமிழக முதல்வர் விஜய் கண்டிப்பாக சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவாக பேச வேண்டும் தானே!

ஏற்கனவே 2024 ஆண்டு எழிலார்ந்த இமயமலையை கனிம வளங்களுக்காக சீரழித்து, சின்னாபின்னப்படுத்த கார்ப்பரேட் வழங்கிய மத்திய அரசு தன் முடிவை மறு பரீசிலனை செய்ய வேண்டும்.

காரணம், இமயத்தை சிதைத்தால் அங்கிருந்து பெருக்கெடுத்து வந்து இந்தியாவையே செழிப்பாக்கிக் கொண்டிருக்கும் கங்கை, யமுனை போன்ற பேராறுகளும் பேராபத்தை சந்திக்கும்… என லடாக்கில் இருந்து 1000 கீ.மீ பாதயாத்திரை செய்து பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ சந்திக்க வந்த சோனம் வாங்சுக்கை கைது செய்து சந்திக்காமல் திருப்பி அனுப்பியது பாஜக அரசு.

சோனம் வாங்சுக்கிற்கு எந்த விதத்திலும் முக்கியத்துவம் தந்துவிடக் கூடாது என்பதில் மத்திய பாஜக அரசு தெளிவாக உள்ளதால் தற்போதும் அலட்சியத்தையே பரிசளித்து வருகிறது.

“2011-ல் அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தபோது, 12 நாட்களுக்குள் அன்றைய காங்கிரஸ் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால், பாஜக அரசோ சோனம் வாங்சுக்கை ஆண்டி இந்தியன் என்றும் தீவிரவாதிகளுக்கு துணை போனவர் என்றும் தூற்றி அவரை நிரந்தரமாக சிறையில் அடைக்க முடியுமா? என்று ஆராய்ந்து வருகிறது.

ஆனால், அதிர்ஷ்டவசமாக சோனம் வாங்சுக்கிற்கு இருக்கும் மகத்தான மக்கள் செல்வாக்கும், அவரது அறப் போராட்டங்களின் வழியே அவருக்கு சர்வதேச அளவில் உருவாகியுள்ள மரியாதை காரணமாக விட்டு வைத்துள்ளது.

லடாக்கின் இயற்கை வளத்தை சூறையாடுவது, உள்ளுர் இளைஞர்களுக்கு அரசு வேலைகளை மறுப்பது, பெளத்த மத மக்களை வெறுப்பது, ஜனநாயகத்தை காலி செய்து சர்வாதிகாரத்தை திணிப்பது ஆகிய பாஜகவின் நரித்தனங்களால் லடாக் மக்கள் கொந்தளித்துள்ளனர்.

ஆனால், சென்ற ஆண்டு செப்டம்பரில் அகிம்சாவாதியான சோனம் வாங்சுக் காந்திய வழியில் சுமார் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அரசின் கவனத்தை ஈர்க்க முயன்றார்.

அப்போதும் அவர் மீதே அடக்கு முறையை கட்ட விழ்த்துவிட்டு சிறையில் தள்ள முயன்றது பாஜக அரசு.

சந்தைபடுத்தப்பட்ட தேர்தல் அரசியலில் சாத்தியமா மக்களாட்சி?

ஒரு உன்னதமான காந்தியவாதியின் உயிரைப் பற்றி பாஜக அரசு எப்படி கவலைப்படும்?

ஏற்கனவே ஒரு முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே நாங்கள் காந்தியின் கதையை முடித்துவிட்டோம் என்று நம்பி மகிழ்ந்திருக்கும் வேளையில், காலம் இன்னொரு காந்தியை பிரசவித்துவிட்டதே என்பது தான் பாஜக அரசின் கவலை.

சரி, சோனம் வாங்சுக் மீது அக்கறையில்லாமல் போனாலும் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி கூட தங்களுக்கு கவலையில்லை… என பாஜக அரசு பாராமுகம் காட்டுவது தான் தற்போது இந்திய இளைஞர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

சாவித்திரி கண்ணன்

  • நன்றி : அறம் இதழ்
Comments (0)
Add Comment